பாதிப்பு ஏழை - நடுத்தர மக்களுக்கே! மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுக!!
தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 1 - வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் 3.16 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப் பட்டுள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும்
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் இன்று (ஜூலை 1) முதல் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு 15 காசு முதல் 41 காசு வரை உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை யும் கடுமையாக பாதிக்கக் கூடிய தாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்பு கிறது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி
ஏற்கெனவே ஒன்றிய பாஜக அரசின் நவீன தாராளமயக் கொள்கை கள் அமலாக்கம், கொரோனா பேரிடர் பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு மற்றும் தமிழக அரசின் முந்தைய மின் கட்டணம், நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக் கான குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் மூடப் பட்டுள்ளன. இதில் பணிபுரிந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை யிழந்து அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரு கின்றனர். பஞ்சாலை, இன்ஜினி யரிங், ஆயத்த ஆடைகள் என பல நிறுவனங்கள் தொழில் செய்ய முடி யாமல் மூடும் நிலையில் உள்ளன.
சுமைகள் அனைத்தும் ஏழை- நடுத்தர மக்களுக்கே!
இந்நிலையில் தமிழக அரசு வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதானது, சங்கிலித் தொடர் போல அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும். அந்த சுமைகள் அனைத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது சுமத்தப்படும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. வீடுகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு ஏற்றுக் கொண்டதால் பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவிகித கட்டண உயர்வை அமல்படுத்தி வரும் நிலை யில், அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர்த்தப்படும் கட்டண உயர்வுகள் தற்போது உயர்த்தியுள்ள கட்ட ணங்களுடன் சேர்த்தே உயர்த்தப் படும். இதனால் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் ஏற்படும்.
மாதாந்திர மின் அளவீட்டை அமல்படுத்த வேண்டும்
மேலும், மாதந்தோறும் மின் அளவீடு எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, மக்களை கடுமை யாக பாதிக்கும் வகையில் உயர்த்தப் பட்டுள்ள மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், மாதந்தோறும் மின் அளவீடு எடுப்பதற்கான உத்தரவை வெளியிடு மாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.