tamilnadu

விவசாயிகள் போராட்டம் வாபஸ்

வரலாற்று வெற்றி சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவிப்பு

புதுதில்லி, டிச. 9 - குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக ஆக்குவது, மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக ஒன்றிய பாஜக  அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தி டமிருந்து இக்கோரிக்கைகளை ஏற்று  அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கப் பெற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சா, இது  இந்திய விவசாயிகளின் வரலாறு காணாத பேரெழுச்சிக்கு கிடைத்துள்ள மிகப்பிரம்மாண்டமான வெற்றி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது. அரசு அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ள நிலையில், தில்லியின் அனை த்து எல்லைகளிலிருந்தும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.  

இதுதொடர்பாக, இந்த வரலாற்று எழுச்சியின் 378வது நாள் 2021 டிசம்பர்  9 அன்று சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர்களான பல்வீர் சிங் ரஜேவால், டாக்டர் தர்ஷன் பால், குர்னாம் சிங் சருனி, ஹன்னன் முல்லா, ஜக்ஜீத் சிங் தல்லேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், சிவ்குமார் சர்மா, யதுவீர் சிங் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக் கையில் மேற்கண்டவாறுகூறியுள்ளனர்.அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்ப தாவது: ஒன்றிய அரசின் வேளாண்துறை செயலாளர் சம்யுக்த கிசான் மோர்ச்சா வுக்கு அளித்துள்ள கடிதத்தில், குறைந்த பட்ச ஆதாரவிலை உள்ளிட்ட கோரிக்கைகளை முழுமையாக நிறை வேற்றுவதாக அறிவித்துள்ளார். அந்த அடிப்படையில் இந்த மகத்தான போராட்டம்  வரலாற்று வெற்றியைப் பெற் றுள்ளது.

அந்த அளவில் விவசாயி களின் இந்தப் போர்  நிறுத்தப்படு கிறது. அதேவேளையில், குறைந்தபட்ச ஆதாரவிலையை அனைத்து விவசாயி களுக்குமானதாக சட்டப்பூர்வமாக உறுதிசெய்ய வேண்டும் என்பதற்கான வலியுறுத்தல் தொடரும். லக்கிம்பூர் தியாகிகள் உட்பட இந்த மாபெரும் எழுச்சியில் 715 விவ சாயிகள் தியாகிகள் ஆகியுள்ளனர். அந்த மகத்தான தியாகிகளுக்கு இந்த வரலாற்று வெற்றியை சம்யுக்த கிசான் மோர்ச்சா அர்ப்பணிக்கிறது. நாடு முழு வதும் போராடிய விவசாயிகள் மற்றும்  பொதுமக்களுக்கும் முழு மனதுடன் வர லாறு காணாத இந்த போராட்ட இயக்க த்தை நடத்திச் செல்ல ஆதரவளித்த அனைவருக்கும் சம்யுக்த கிசான் மோர்ச்சா பாராட்டும் நன்றியும் தெரி விக்கிறது. விவசாயிகளின் ஒற்றுமை, அமைதி,  பொறுமை ஆகியவையே இந்த பிரம்மாண்ட வெற்றியின் அடிப்படை அம்சம் ஆகும். எந்தவொரு தருணத்திலும் விவசாயி களின் ஒற்றுமை சீர்குலையாமல் பாதுகாக்கப்பட்டது. அதே உறுதியுடன், தற்போது அரசு அளித்துள்ள  உறுதிமொழிகள் உத்தரவாதமாக நிறைவேற்றப்படு வதை விழிப்புடன் கண்காணிப்பது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது. முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் துயர மரணம் நிகழ்ந்துள்ள இந்த தருணத்தில், விவசாயிகளின் வெற்றியை நாடு தழுவிய அளவில் உடனடியாக கொண்டாடு வதை சம்யுக்த கிசான் மோர்ச்சா சில தினங்களுக்கு தள்ளி வைக்கிறது. டிசம்பர் 11 அன்று நாடு முழுவதும் விவசாயிகளின் வெற்றிப் பேரணிகள் நடைபெறும். 

தற்போது தில்லியைச் சுற்றியுள்ள எல்லைகளி லிருந்து விவசாயிகள் அவரவர் பகுதிகளுக்கு சென்று மாபெரும் வெற்றிப் பேரணிகளை நடத்துவார்கள். போராடும் விவசாயிகளுக்கு இந்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அது எப்படி நகர்கிறது என்பதைப் பொறுத்து எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க ஜனவரி 15 அன்று தில்லியில் சம்யுக்த கிசான் மோர்ச்சா மீண்டும் கூடி விவாதிக்கும். நாடு முழுவதும் இந்தப் பேரெழுச்சியை நடத்துவதற்கும், தில்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் உறுதிமிக்க முறையில் ஓராண்டிற்கும் மேலாக நடத்துவதற்கும் மிகவும் பொறுமையுடனும் பெரும் ஆதரவுடனும் செயல்பட்ட அனைத்து உள்ளூர் மக்களுக்கும் சம்யுக்த கிசான் மோர்ச்சா நன்றிகளைத் தெரிவிக்கிறது. இந்தப் போராட்டத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறது. அனைத்து தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்யுக்த கிசான் மோர்ச்சா நன்றிகளை சமர்ப்பிக்கிறது.

போராட்டக் களத்தில் ஏராளமான மருத்துவர்கள் மருத்துவ முகாம்களை நடத்தி, சோர்வில்லா சேவையை ஆற்றினார்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்த சேவை அமைப்புகள், லேங்கர்கள் எனப்படும் பெரும் உணவுக் கூடங்களை அமைத்து, விவசாயப் போராளிகள் எவ்வித சிரமமுமின்றி தொடர்ந்து தங்களது போராட்டத்தை நடத்திட உதவினார்கள். பல்வேறு மனித உரிமை அமைப்புகள், எண்ணற்ற கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் இந்த பேரியக்கத்தை நடத்த முழுமையாக உறுதுணையாக இருந்தார்கள். தில்லியை நோக்கிச் செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மிகப்பெரும் உதவிகளைச் செய்தார்கள்.  அந்த விடுதிகளில்தான் விவசாய போராட்டக் குழுவின் கூட்டங்கள் நடைபெற்றன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் சர்வதேச  விவசாயிகள் அமைப்புகள் உள்ளிட்டோரும் அவரவர் இடங்களி லிருந்து இருந்தவாறே எண்ணற்ற உதவிகளைச் செய்தார்கள். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விவசாயப் போராளிகளை தினந்தோறும்  கவனித்துக் கொண்டார்கள்.  இந்த ஒட்டுமொத்த மக்களின் பேராதரவுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா தனது கோடானு கோடி நன்றிகளை உரித்தாக்குகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;