எட்டாவது ஊதியக்குழு அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜனவரி 16 அன்று அறிவித்தார். ஏழாவது ஊதியக்குழுவின் காலம் முடியும் முன் அதன் மாற்றங்களை வெற்றிகரமாக அமலாக்க வசதியாக அரசின் செயல்பாடு இருக்கும் என்று கூறி, எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 1-1-2026 முதல் அமலாக்கப்படும் என்று தெரிவித்தார். குழுவின் தலைவரும் இரண்டு உறுப்பினர்களும் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், 50 லட்சம் ஊழியர்களும் 65 லட்சம் பென்சனர் களும் பயனடைவார்கள் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு ஊழியர்கள் மற்றும் பென்சனர்கள் மத்தியில் சம்பளம், படிகள், பென்சன் அனைத்தும் உயரும் என்ற பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் எட்டு மாதங்கள் ஆன பிறகும் இன்னும் தலைவரும் உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை. ஊதியக்குழு பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள் எவை என்ற பட்டியலும் இன்னும் வெளியிடப்பட வில்லை. 7வது ஊதியக்காலம் முடிவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், எப்படி 1-1-2026 முதல் வெற்றிகரமாக அமலாக்குவது சாத்தியம் என்ற கேள்வி ஊழியர்கள், பென்சனர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முந்தைய ஊதியக்குழுக்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதைக் கணக்கில் கொண்டால், 2027 இறுதியோ அதற்குப் பின்பு தான் நடைமுறைக்கு வரும் என்று கருதலாம். பென்சன் உறுதிப்படுத்தும் விதிகள் - நகரா தீர்ப்பை குப்பையில் போடும் சூழ்ச்சி இதற்கு இடையில் ஒன்றிய அரசு நிதிச்சட்டத்தி னூடாக “பென்சன் உறுதிப்படுத்தும் விதிகளை” மார்ச் 25 அன்று நிறைவேற்றியுள்ளது. பென்சனை உறுதிப்படுத்தல் என்ற பெயரில் பென்சன் உயர்வையும் ஊதியக்குழு தாமத மானால் தரவேண்டிய பலன்களின் பின்பாக்கி யையும் மறுப்பதாக உள்ளது. அதனால்தான் எட்டாவது ஊதியக்குழு அமைப்பதை தாமதப்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இந்த விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட ஊதியக்குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள், கொள்கைகள், பென்சனை மாற்றி அமைக்கும் முறை ஆகியவை ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் தேதியில் இருந்துதான் அமலுக்கு வரும். அப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட பரிந்துரையின் பலன்கள் ஒரு முன் தேதியில் இருந்து அமலாக்கப்படமாட்டாது. ஆகவே தாமதமானால் பின்பாக்கி கிடைக்காது என்பது மட்டுமல்ல, இது எட்டாவது ஊதியக்குழுவுக்கு மட்டுமல்ல, முன்னால் வந்த, பின்னால் வரப்போ கும் எல்லா ஊதியக்குழுக்களுக்கும் பொருந்தும். மேலும் முக்கியமான விதி என்னவென்றால், “ஊதியக்குழுக்களின் பரிந்துரைகளை அம லாக்கும்போது பென்சனர்களை வகைப்படுத்த வும், பென்சனர்கள் மத்தியில் வித்தியாசத்தை உருவாக்கவும், இருக்கும் வித்தியாசத்தை தொடரவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும், முன் எப்போதும் அதற்கு அதிகாரம் இருந்ததாக கருதப்படும்” என்று கூறப் பட்டுள்ளது. இதன் மூலம் பென்சன் விதிகளில் என்ன சொல்லியிருந்தாலும், எந்த நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பு வந்திருந்தாலும், எந்த உத்தரவு வந்திருந்தாலும் அதையெல்லாம் மீறி அரசுக்கு பென்சனர்களை பழைய-புதிய என்று பிரிக்க அதிகாரம் இருக்கிறது என்று அர்த்தம். டிசம்பர் 17, 1982 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய நகரா வழக்கு தீர்ப்பு இன்றும் பென்சனர்களின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது. இந்த நாள்தான் நாடு முழுவதும் பென்சனர் தினமாக கொண்டாடப்படுகிறது. பென்சனர்கள் என்பவர்கள் ஒரே முழுமையான வர்க்கம், அவர்களை பழைய-புதிய என்று வகைப்படுத்தக்கூடாது, அப்படி பிரிப்பது தன்னிச்சையானது, பாரபட்சம் பார்ப்பது ஆகும், அரசியலமைப்பு சட்டத்தின் 14வது மற்றும் 16வது பிரிவுகளுக்கு எதிரானது, சட்டத்தின் முன் அனைத்து பென்சனரும் சமம், பென்சன் என்பது உரிமை, பிச்சையல்ல, கொடுக்கப்படாத ஊதியம் என்று நகரா வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 31-3-1979 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் தளர்த்தப்பட்ட பென்சன் விதிகள் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நிதிச்சட்ட விதிகள் குப்புறத்தள்ளிவிட்டன. எதிர்காலத்தில் என்ன நிலைமை? புதிய விதிகளின்படி எட்டாவது ஊதியக்குழு காலத்தில் உள்ள பென்சனர்களின் பென்சன் ஏழாவது ஊதியக்குழு அடிப்படையிலேயே உயரும். எட்டாவது ஊதியக்குழு காலத்தில் ஓய்வு பெறுபவருக்கு 9வது ஊதியக்குழுவின் பென்சன் உயர்வு விதிகள் பொருந்தாது. அவருக்கு 8வது ஊதியக்குழுவின் அகவிலைப்படி 9வது ஊதியக்காலத்திலும் அதன் பின்னும் தொடரும். இதே நிலைமை தான் ஆயுட்காப்பீட்டிலும், வங்கித்துறையிலும் நடைபெறுகிறது. ஊதிய உயர்வு உடன்பாடுகளில் பென்சன் உயர்வதில்லை. 2017 முதல் பிஎஸ்என்எல் பென்ச னர்களுக்கு பென்சன் உயர்வு மறுக்கப்பட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவிலான எதிர்ப்பு பென்சனர்கள் ஒன்றிய அரசின் எந்த வாய்வார்த்தைகளையும் ஏற்கத் தயாரில்லை. எனவேதான் நாடு முழுவதும் உள்ள 56க்கும் மேற்பட்ட பென்சனர் அமைப்புகள் தேசிய பென்சனர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழுவின் (NCCPA) அறைகூவலை ஏற்று ஒன்றாகச் சேர்ந்து ஏப்ரல் 3ல் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராணுவம் அல்லாத பென்சனர் அமைப்புகளின் மேடை அமைத்து ஜூலை 25ல் மனிதச்சங்கிலி, மாநில அளவில் கருத்தரங்கங்கள், அக்டோபர் 10ல் தில்லி ஆர்பாட்டம் என திரண்டு வருகிறார்கள். உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ள னர். ஆளுநர்கள் மூலம் பிரதமருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஒன்றிய அரசு ஊழியர் மகாசம்மேளனம் ஆகஸ்ட் 20 அன்று நாடு முழுவதும் ஆர்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது. ரயில்வே சம்மேளனங்களும் இந்தப் போராட்டத்தில் திரள வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அரசின் பாரபட்ச அணுகுமுறை கார்ப்பரேட்டுகளுக்கு ஆண்டுதோறும் 1.45 லட்சம் கோடி வரி சலுகை, 2 லட்சம் கோடி உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை, 1 லட்சம் கோடி வேலையுடன் இணைந்த ஊக்கத்தொகை, எல்லாவற்றுக்கும் மேலாக 17 லட்சம் கோடி கடன் தள்ளுபடி அளிக்கும் மோடி அரசு, பென்சனர்களின் பென்சன் உயர்வில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது. இதைத்தான் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும், பின்னால் மாநில அரசு ஊழியர்களுக்கும் அமலாக்க திட்டம் தீட்டியுள்ளது. பென்சன் செலவைக் குறைப்பதுதான் இதன் நோக்கம் என்று பென்சன் உறுதிப்படுத்தப்பட்ட விதிகளின் நோக்கத்தைக் கூறும்போது தெரிவிக்கப்பட்டுள்ளதிலிருந்தே இதன் உள்நோக்கம் தெரிகிறது. உழைத்து ஓய்வு பெற்ற பென்சனர்களின் நியாயமான உரிமையை மறுக்கும் இந்த கொள்கை மக்கள் விரோதமானது. அதற்கு எதிராக வலுவாக குரல் எழுப்புவோம்!