tamilnadu

img

பசியின் கொடுமையும் பிரேம் நசீரின் அழியாத தமிழ்த் தடமும்...

அந்தப் படம் முதலில் மலையாள மொழியில்தான் எடுக்கப்பட்டது. மலையாளத்தில் அதன் பெயர் “விசப்பின்டே விளி”. அதாவது ‘பசியின் அழைப்பு’. இப்படியொரு கவித்துவப் பெயருடன் அங்கே வந்த அதே  படத்தைத் தமிழில் “பசியின் கொடுமை” - என்ற பெயரில் மறு ஆக்கம் செய்து வெளியிட்டார்கள். இரண்டிலுமே கதாநாயகன் பிரேம் நசீர்தான்.  பிரேம் நசீரைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் நிறைய இருக்கின்றன. அந்நாளைய மலையாள சினிமாவிலே சிவாஜியும் எம்.ஜி.ஆருமாகத் திகழ்ந்தவர். மலையாள ரசிகர் களின் ஏகோபித்த நாயகன் பிரேம் நசீர். தமிழிலும் நிறையப் படங்களில் நடித்த அந்நாளைய முன்னணி மலையாள நடிகர் பிரேம் நசீர் மட்டுமே. 1950 களில் தொடங்கி 1970கள் முடிய அவர் தமிழிலும் அவ்வப்போது முத்திரை பதித்தார்.  என்றும் மாறாத இளம் காதல் நாயகனாக பண்டரிபாய், மைனாவதி, ராஜசுலோட்சனா, எம்.எம்.ராஜம்  என்று அந்நாளைய முன்னணிக் கதாநாயகிகளுடன் இணைந்து தமிழிலும் பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நசீர். அவரின் அப்போதைய போட்டியாளரான சத்யன் மாஸ்டர் தமிழில் ஆளுக்கொரு வீடு (1960)  என்ற படத்தில் மட்டுமே நாய கனாக நடித்திருந்த நிலையில் பிரேம் நசீரின் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கையை நோக்கவேண்டும். 

பசியின் கொடுமை மலை யாளத்திலிருந்து தமிழுக்கு வந்த படம் என்பதால் முழுக்க  முழுக்கத் தமிழ்ச்சூழலிலேயே தயாரான தமிழ்ப்படமானதை பிறந்தால் வழி பிறக்கும் (1958) படத்தைத்தான்  நசீர் நடித்த முதல் தமிழ்ப்பட மென்கிறார்கள். அதுவும் இமாலய வெற்றி பெற்ற படம். அருணாசலம் பிக்சர்ஸூக்காக ஏ.கே.வேலன் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தின் வசூல் லாபத்திலிருந்துதான் அந்நாளின் அருணாசலம் ஸ்டூடியோவைக் கட்டினார்கள்.  பிரேம் நசீர் நடித்த பசியின் கொடுமையைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான அச்சன் படத்தை தந்தை (1953) என்ற பெயரில் தமிழில் மறுஆக்கம் செய்தார்கள். அதிலும் நசீர்தான் நாயகன். மலையாளத்தில் வெளியான பொன்கதிர் என்ற நசீர் நடித்த படம் இருளுக்குப் பின் (1954) என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளி யானது. அதையும் தமிழ் ரசிகர்கள் வெகுவாக வரவேற்று வெற்றிபெற வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து சி.ஐ.டி., பாடாத பைங்கிளி, காட்டு மைனா, சிலம்பொலி, கருத்த கை, மாயாவி, சகுந்தலை போன்ற படங்களும் நசீர் நடித்து தமிழில் டப் செய்யப்படு வெளிவந்த படங்கள்.  பிரேம் நசீர் கதாநாயகனாக நடிக்காமல் துணை வேடங்களில் நடித்த தமிழ்ப் படங்களின் சுவரொட்டிகளிலும் அவரது படங்களே பெரிதாகப் போடப்பட்டன. அவர்மீதான தமிழ் ரசிகர்களின் ஈர்ப்பு அப்படியானதாக இருந்தது. அந்நாளைய சினிமா இதழான பேசும்படம் பிரேம் நசீருக்கென்றே சிறப்புப் பக்கங்களை வெளியிட்டது.  

தை பிறந்தால் வழி பிறக்கும் படத்திற்குப் பிறகு நல்ல இடத்து சம்பந்தம், நான் வளர்த்த தங்கை, பெரிய கோயில், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், ஒரே வழி, கல்யாணிக்குக் கல்யாணம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, சகோதரி, சொல்லு தம்பி சொல்லு, வண்ணக்கிளி, அன்புக்கோர் அண்ணி, இருமணம் கலந்தால் திருமணம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, தங்கம் மனசு தங்கம், தங்க ரத்தினம், திலகம், ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கொரு பெண்ணும், பெற்றவள் கண்ட பெருவாழ்வு, பாலும் பழமும், பிறந்த நாள், தென்றல் வீசும், எதையும் தாங்கும் இதயம், முரடன் முத்து, வழிகாட்டி முத லான படங்களில் நடித்து, தமிழில் முத்திரை பதித்தவர் பிரேம் நசீர்.  மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பசியின் கொடுமை, தந்தை படங்களைப்போல மந்திரவாதி என்று ஒருபடமும் வந்தது. பசியின் கொடுமை படத்தின் இயக்குநர் மோகன் ராவ். குஞ்சக்கோ மற்றும் கே.வி.கோஷி ஆகிய இருவர் தயாரித்தார்கள். கே அண்டு கே நிறுவனம் சார்பில் வெளிவந்த இந்தப் படத்தில் நசீருடன் திக்குரிசி சுகுமாரன், எஸ்.பி.பிள்ளை, தங்கம், எம்.எஸ்.திரௌபதி, பங்கஜவல்லி, மாதுரிதேவி, பேபி கிரிஜா போன்றவர்களும் நடித்தார்கள்.  பி.எஸ்.திவாகர் இசையில் மொத்தம் 10 பாடல்கள். ஏ.எம்.ராஜா, பி.லீலா, கவியூர் ரேவம்மா முதலானோர் மலையாளப் பிரதியிலும் தமிழிலும் பாடினார்கள். பாடல்களைக் கம்பதாசன், அண்ணல் தங்கோ,  பா.ஆதிமூலம் ஆகியோர் பாடல்களை எழுதினார்கள். தமிழுக்கு ஆதிமூலம் வசனமெழுதினார். இந்தப் பசியின் கொடுமை 1952 நவம்பர் 28 ல் வெளியானது. 

மலையாளத்தில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலகிலேயே அதிக படங்களில் நாயகனாக நடித்த சாதனைக்குப் சொந்தக்காரரான பிரேம் நசீரின் தமிழ்ப் படவுலகப் பயணத்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் தீவிர இயங்குதல் திசை மாற்றிப்போட்டன. அதே சமயத்தில் மலையாளத்தில் அவருக்கான களம் சூடு பிடித்தது. பிரேம் நசீர் என்ற அந்த மகத்தான இளம் சேரநாட்டுக் கலைஞனை தமிழ் சினிமா மனமின்றி மேற்கு நோக்கி அனுப்பிவைத்தது.

;