tamilnadu

img

முஸ்லிமாக இருத்தலின் சுமை உலகளாவியது - ‌ராஜ்மோகன் காந்தி (மகாத்மா காந்தியின் பேரன்)

ஆசியாவின் எந்த நாட்டிலும்   ஒரு முஸ்லிமாக இருத்தல் என்பது  மலர்ப்பாதையில் நடப்பது போன்றதல்ல.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆசிய நாடுகள் என்றாலும்  அப்படியே.  பெரும் பான்மையாக  ஷியாக்கள் வாழும் நாடு ஈரான்.  அதன் ஆட்சியில் பெண்களுக்கு நிலவும்  கடுமையான  உடைக் கட்டுப்பாட்டினால்   சென்ற  செப்டம்பர் மாதம்  மரணம் அடைந்த வர் மாஹ்சா  அமினி.   இவரது மரணத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது ராணு வத்தினரைக் காயப்படுத்தினார் என்பதற்காக 23 வயது மொஹ்சின்  ஷேகரி டிசம்பர் மாதம் தலைநகர் டெஹ்ரானில் தூக்கிலிடப்பட்டார்.    தங்கள் கருத்துக்களைச்  சற்று அதிகமாக வெளிப்படுத்தி விட்டார்கள் என்பதற்காக அதிக விலை கொடுக்க நேர்ந்துவிட்ட  ஈரானி யர்  பலரிடையே மாஹ்சாவும் மொஹ்சினும் இருவர்.

தலிபான் ஆட்சியில்...

ஈரானின் அண்டை நாடு சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்கானிஸ்தான் . அதன் தலிபான்  ஆட்சி பெண்களுக்குப்  பல்கலைக்கழக உயர்கல்வி யைத்  தடை செய்துள்ளது . இந்தத்  தடை  இஸ்மாயில் மாஷல் என்ற  இளம் விரிவுரை யாளர் ஒருவரை  “என் தாயும் சகோதரியும் கற்க முடியாத  இந்தக் கல்வியை நானும்  ஏற்கவில்லை” என்று கூறி,   தொலைக்காட்சி  பார்வையாளர்கள் முன் தனது சான்றிதழ் களைக் கிழித்தெறியச்  செய்துள்ளது. இந்த நிலையில் தலிபான் அரசு எப்படி  உலகின்  மற்ற சமூகத்தோடு சேர்ந்து தன்  குடிமக்களின் சுமையைக் குறைக்கப் போகிறது என்பதை  நினைத்துப் பார்க்கவே கடினமாகத்தான் உள்ளது. பல ஆசிய நாடுகளையும் , ஒரு சராசரி முஸ்லிம் இங்கு பெருமிதத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் வாழ்கிறார்  என்று  குறிப்பிட்டு அடையாளம் காண்பது உண்மையிலேயே இன்று கடினம்தான். உலகிலேயே நான்காவது அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடான பங்களாதேஷ் , கல்வி அறிவிலும் சுகாதாரத்திலும் தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், அந்நாட்டின் ஜனநாய கத்தைப் பற்றி வலுவான ஐயங்கள் உண்டு. வேறெந்த நாட்டையும் விட அதிக  முஸ்லிம்களைக் கொண்டது இந்தோனேஷி யா. இதுதான் சென்ற ஆண்டு இறுதியில் இந்தியாவிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வரை ஜி20 நாடுகளின் கூட்டமைப்பைத் தலைமையேற்று நடத்தியது. 1999 லிருந்தே நாட்டில் தேர்தல்களை  முறைப்படி நடத்தும் நாடுதான் ; குறைந்து கொண்டே வரினும் குறிப்பிடத்தக்க அளவு எண்ணெய் வளங் களைக் கொண்டிருக்கும் நாடுதான்; எனினும்  ஜனநாயகக் குறியீட்டுத் தரவரிசையில்  52ஆவது இடத்தில்  உள்ளது.

அதிகரிக்கும் கவலைகள்

நெடிய பாரம்பரியமுள்ள பிரிட்டிஷ்  இதழான ‘தி எகனாமிஸ்ட்’ உடன் தொடர்புடைய ஒரு அமைப்பினால்  இத்தர வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய  குறியீட்டில்  சில குறைகள் இருக்கலாம் என நாம் ஏற்றுக் கொண்டாலும் கூட, மலேசியா அதே  குறியீட்டின்படி  39ஆம்  இடத்திலிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா 46, சிங்கப்பூர் 66, இலங்கை  67, பங்களாதேஷ் 75, பூடான் 81, நேபாளம் 101, பாகிஸ்தான் 104, சீனா 148 ஆகிய இடங்களில் இருக்கின்றன. (நார்வே முதலிடத்தில் உள்ளது). இந்தியாவிற்கு வெகு அருகில் உள்ள புத்த சமயத்தைப் பின்பற்றும் இரண்டு நாடுகளான மியான்மரும் இலங்கையும்  சமீபத்தில் சில ஆண்டுகளாக முஸ்லிம் விரோதப் போக்கு வளர்ந்து வருவதைக் கண்ணுற்றவை. அதோடு மியான்மரில் அரசை எதிர்ப்பவர்கள் யாராயிருந்தாலும்  அவர்கள்  இரக்கமற்றுத் தாக்கப்பட்டனர். இங்கு நம் நாட்டைப் பொறுத்தவரை , இந்திய முஸ்லிம்களின் கவலைகள் பெரிதாகிக் கொண்டே போவதை  முஸ்லிம் அல்லாத  சக இந்தியர்கள் பலர், பெரும்பான்மை யினராக இருப்பதும் அவர்கள்தான்,  அறிந்தே யிருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கள் கவலைகள் குறித்து  எச்சரிக்கையுடன் அமைதி காத்தாலும்  அவ்வப்போது வெளிப்படையாகச் சில  விமர்சனங்களும் அவர்களிடமிருந்து தப்பித்தவறி  எழுந்து விடத்தான் செய்கின்றன.

எதிர்கொள்ளும் பகைமையுணர்வு

“வெளிநாடுகளில் வேலை தேடிக்கொண்டு  முடியுமானால் அங்கேயே குடியுரிமையும்  வாங்கிக் கொள்ளுங்கள்”. இப்படி ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்தவரும்   முன்னாள் பீகார்  அமைச்சருமான அப்துல் பாரி சித்திகி அமெரிக்காவில் படிக்கும் தனது மகனிடமும் லண்டனில் படிக்கும் தனது மகளிடமும் கூறியதாகச் சொல்லப்படுகிறது. பலராலும் பார்க்கப்பட்ட இந்தக் காணொலி யில், அவர் ‘தன் மகனும் மகளும் இன்றைய இந்தியாவில் இருந்து சமாளிக்க முடியாது’ என்றும்  சொல்கிறார். சித்திகி இங்குக்  குறிப்பாக உணர்த்துவது பல இந்திய முஸ்லிம்களும் இப்போது எதிர்கொள்ளும் பகைமையுணர்வுதான் என்பது தெளிவு. சித்திகி சொன்னதைச் சிலர் தங்களுக்கு உவப்பற்றதாகவும் ,   சீண்டிவிடுவதாகவும் கருதுகின்றனர். பீகாரின் பிஜேபி செய்தித்தொடர்பாளர் நிகில் ஆனந்த் ,  “சித்திகியின்  கருத்துக்கள் இந்தியாவுக்கு எதி ரானவை . அவருக்கு இங்கு அவ்வளவு மூச்சு  முட்டினால்   அவர் பாகிஸ்தானுக்குப் போகட்டும். அவரை யாரும் தடுக்கப் போவ தில்லை” என விமர்சித்திருக்கிறார். சித்திகி சொன்னதும்  பிஜேபியின் பதிலும் பல தொலைக்காட்சி அலைவரிசைகளிலும்  ஒளிபரப்பாயின.  சித்திகியின்   கருத்து உண்மையிலேயே அவ்வளவு தீவிரமானதா என்ன? இந்தியா வின் லட்சக்கணக்கான இந்துத் தந்தைகளும் தாய்களும்  தன் மகனிடமோ மகளிடமோ வெளிநாடுகளில் வேலை தேடிக்கொண்டு முடியுமானால் அங்கேயே குடியுரிமையும்  வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொன்ன தில்லையா என்ன?

இந்திய இளைஞர்களை  கல்விக்காகவும்   நீண்ட கால வேலைக்காகவும் பணக்கார நாடுகளில் அனுமதிக்கும்  விசாக்களின்   எண்ணிக்கையை உயர்த்தச் செய்த முயற்சிகளை  இந்திய அரசு பெருமையுடன்  விளம்பரப்படுத்துவது இல்லையா என்ன? அதையெல்லாம்விட , சித்திகியாகட்டும்   வேறெந்த  இந்திய முஸ்லிமாகட்டும்   பாகிஸ்தா னுக்குப் போக வேண்டும் என ஏன் விரும்பப் போகிறார்கள்? அங்கோ பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.  அரசியல்வாதிகளோ தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் இராணுவமோ தான் அடிக்கடி செய்தது போல நாட்டைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இப்போது கொண்டு வருவதா  அல்லது எப்போது கொண்டு வருவது எனத் தெரியாமல் நிற்பதுபோல் தோன்றுகிறது. இராணுவத்தின் உயர் தலைவர்கள் பெருஞ்செல்வம்  குவித்துவிட்டதாகக் குற்றம்  சாட்டப்பட்டிருக்கிறார்கள். பலுசிஸ்தான் மாகாணமே கிளர்ச்சிக்கும் அடக்கு முறைக்கும் உள்ளாகியிருக்கிறது. தலி பான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது  கைபர்_ பக்துங்க்வா மாகாணத்திற்குள்  (முன்னாள் எல்லைப்புற மாகாணம்)தீவிர வாதக் குழுக்களை பலப்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் கிறிஸ்தவ இந்து சிறு பான்மையினர் ,    சிந்து மாகாணத்தில் அடர்ந்து  செறிந்துள்ள இந்துச் சிறுபான்மையினர்,   எப்போதும்போன்றே பாதுகாப்பற்ற உணர்வுடன்தான்  வாழ்கின்றனர். 

காட்சி மாறிய இந்தியா

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, மேலும் சில ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற  நாடுகள் எல்லாம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளை விடவும் முஸ்லிம்களுக்கு அதிக தனிநபர் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் வழங்கி வருகின்றன என்பது யாவரும் அறிந்த ரகசியமே. கொஞ்ச காலம் முன்புவரை இந்தி யாவும் கூடத்  தன்னை  முஸ்லிம்கள் பாது காப்பாக உணரும் ஒரு  நாடு எனச் சொல்லிக் கொள்ள முடிந்தது. ஆனால் இப்போதோ ,  காட்சி அப்படியே மாறிவிட்டது. தான் அடுத்த வல்லரசாக வேண்டும் என்ற சீனாவின் முயற்சிகள்  தீவிரமான தடை களுக்கு உள்ளாகி இருக்கும் இந்தச் சமயத்தில், இந்தியாவே ஜனநாயகத்தின் நம்பிக்கை என்று    மீண்டும் உலகைக் கருதச் செய்யும் வாய்ப்பு இந்தியாவிற்கு இன்னும் உள்ளது. ஆனால் நம் ஆற்றலையோ ஆர்வத்தையோ இன்று   தூண்டுவது அந்தச்  சவாலன்று. “உலகம் இறுதியில் இந்தியா வின் பெருமையை உணர்ந்துகொண்டது” என்று  நம்மை நாமே நம்பச் செய்வதையே   எல்லாவற்றையும் விட மேலாக விரும்பு கிறோம் , அப்படி நம்புவதற்கான  போதிய ஆதாரங்கள் நம்மிடம் இல்லாத போதும் . தம் முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவலை களை உணர்ந்து அங்கீகரிப்பதோ  இந்நாட்டின் மிகுந்த செல்வாக்கான  மனிதர்களின் சிந்தையிலேயே இடம்பிடிப்பதில்லை.  அப்படியெனில்,  இந்திய முஸ்லிம்களின் தோள்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு மிகப் பெரிதாகிறது. பெருமளவு முஸ்லிம் உலகும்  ஒழுங்கற்றுச் சிதறி யிருக்க,  சக நாட்டவரான இந்துக்களோ,  அவர்கள் எதிரிகளாக இல்லாதிருப்பினும்,  சிந்தனையை எங்கோ வைத்தவராக  பாராமுகமாயிருக்கையில், இந்திய முஸ்லிம்கள் என்ன செய்துவிட  முடியும்? வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதையும் அவர்களில் கொஞ்சம்பேரே தேர்ந்தெடுக்க  முடியும். 

நீதியாகாதே?

கனவு காண்பதென்றால்,  இந்திய முஸ்லிம்கள் தமது சக நாட்டவரான இந்துக்க ளோடு சேர்ந்து தமக்கு மெய்யான சமத்துவம் மீண்டும் கிடைக்கப் போராடுவதாக , இப் போராட்டத்தை   சகோதரத்துவத்துடனும் துணிவுடனும் அறிவுடனும் மேற்கொள்வதாக, இதன் மூலம் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் முழு முஸ்லிம் உலகிற்கும் அவர்கள் நம்பிக்கை வழங்குவதாகக் கற்பனை செய்யலாம்.  ஆனால் நாம் வாழ்வது காலமற்ற கனவுலகில் அல்லவே! 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கொண்டிருக்கும் இந்தியாவில் அல்லவா! மேலும் கனவே யென்றாலும்கூட   நம்பிக்கையையும் கூட்டுறவையும்  நோக்கிய பயணத்திற்கு  அச்சத்தில் வாழும் ஒரு சிறுபான்மையை முன்னின்று வழிநடத்தச் சொல்வது நீதியாகாதே. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எந்த இந்தியரானாலும்  தன் கண்ணியத்திற்காக, சமத்துவத்திற்காக, சுதந்திரத்திற்காகப்  போராடுவதும்,  அதே சமயத்தில் அவனுடைய  அல்லது  அவளுடைய  சகநாட்டினருக்கு சகோ தரத்துவத்தை வழங்குவதும், ஒவ்வொரு  இந்தியருக்கும் உள்ள  கைவிட்டுவிடக்கூடாத   உரிமையாகும். இப்படிச் செய்வதற்கு ஒரு முஸ்லிமான இந்தியருக்கு உள்ள உரிமை  ஒரு இந்துவின் உரிமையை விடக் குறைந்ததல்ல. மிக மிக நுண்ணிய நானோ கிராம் அளவுகூடக்  குறைந்ததேயல்ல.

நன்றி : தி டெலிகிராப் (31.1.2023)
தமிழில் : ஜமீலா ராசிக்