130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது ஒன்றிய பாஜக அரசு!
சு. வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
மதுரை, ஜூலை 1 - கட்டணங்களை உயர்த்தியதன் மூலம் 130 கோடி பேரை, ரயில் பயணத்திலிருந்து மோடி அரசு வெளியேற்றி இருப்பதாகவும், கட்டணத்தை குறைந்த அளவே உயர்த்தியிருக்கிறோம் என்று கூறி பல வகை கட்டணக் கொள்ளையை சாமர்த்தியமாக மறைப்பதாகவும் சு. வெங்கடேசன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: இன்று முதல் ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த கட்டண உயர்வு என்று தம்பட்டம் அடிக்கிறது பாஜக. “501 கி.மீட்டருக்கு மேல் 1500 கி.மீ. வரை ஐந்து ரூபாய் உயர்வு; இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி சாதாரண வண்டி களில் ஒரு பயண கிலோமீட்டருக்கு அரை பைசா கட்டண உயர்வு; மெயில் எக்ஸ்பிரஸ் வண்டிகளில் குளிர்சாதனம் இல்லாத பெட்டிகளில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முதல் வகுப்பு ஆகியவற்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்வு; குளிர்சாதன வகுப்புகளில் இருக்கை வசதி, மூன்றடுக்கு படுக்கை வசதி, இரண்டு அடுக்கு படுக்கை வசதி, முதல் வகுப்பு படுக்கை வசதி ஆகியவற்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா உயர்வு; தேஜஸ், வந்தே பாரத், சதாப்தி, அந்தியோதயா உள்ளிட்ட சிறப்பு வண்டிகளிலும் இந்த கட்டண உயர்வு இரண்டு பைசா உயர்வு பொருந்தும்” என்று கூறியிருக்கிறது.
குறைந்து கொண்டே வரும் ரயில் பயணிகள் எண்ணிக்கை
உண்மை நிலவரம் என்ன என்பது புள்ளிவிவரங்களை பார்த்தால் புரியும். 2024-25இல் குளிர்சாதன மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ளிட்ட உயர் வகுப்புகளில் 81 கோடிப் பேர் பயணம் செய்தனர். முன்பதிவு இல்லாமல் 634 கோடிப் பேர் பயணம் செய்துள்ளனர். மொத்தம் 715 கோடிப் பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் மூலம் 75 ஆயிரத்து 457 கோடியை வருமான மாக ரயில்வே ஈட்டியுள்ளது. 80 ஆயிரம் கோடி வருமானம் வரும் என்று நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2017-18இல் முன்பதிவு பெட்டிகளில் 65 கோடிப் பேரும் முன்பதிவு இல்லாமல் 759 கோடிப் பேரும் மொத்தம் 824 கோடிப் பேர் பயணம் செய்தனர். 2018-19இல் முன்ப திவு செய்தவர்கள் 68 கோடி. முன்பதிவு இல்லாமல் பயணம் செய்தவர்கள் 778 கோடி. மொத்தம் 846 கோடி. 2018-19 இல் 846 கோடி பேர் பய ணித்துள்ளனர். கட்டண வருமானம் 45 ஆயிரம் கோடி.
வருமானம் மட்டும் அதிகரிப்பது எப்படி?
2024-25இல் பய ணிகளின் எண்ணிக் கை 715 கோடியாக குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 130 கோடி பயணிகள் குறைந்து விட்டனர். ஆனால், வருமானம் 45 ஆயிரம் கோடியில் இருந்து 75,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் ரகசியம் என்ன? முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 68 கோடியில் இருந்து 81 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணி க்கை 778 கோடியில் இருந்து 634 கோடியாக குறைந்துள்ளது. இருப்பினும் கூட இந்த வருமானம் எப்படி அதிகரித்தது?
500 ரூபாய் டிக்கெட் ரூ.3,000 விற்பனை
தட்கல், பிரீமியம் தட்கல், டைனமிக் கட்டணம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு பெட்டியிலும் 30 சதமானம் படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுகின்றன. 500 ரூபாய் டிக்கெட் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வந்தே பாரத், சதாப்தி, அந்தியோதயா என்ற வகைகளில் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல பயணத்தை ரத்து செய்தால், காத்திருப்போர் பட்டியலில் இருந்தாலும்- இடம் கிடைத்திருந்தாலும்- 65 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
கசக்கிப் பிழியப்பட்ட விரைவு ரயில் பயணிகள்
634 கோடி பயணிகளாக குறைந்த தற்கு, இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லா பெட்டிகளைக் குறைத்ததும் - சாதாரண பயணி வண்டிகளை ரத்து செய்ததும் முக்கியக் காரணங்களாகும். இவற்றா லேயே பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனாலும் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறைவானவர்கள் அதிகமாக கசக்கிப் பிழியப்பட்டுள்ளனர். குறைவானதிலிருந்து அதிகம் கரத்தல் (more from less) என்ற தத்துவம் பின்பற்றப்படுகிறது.
விரட்டியடிக்கப்பட்ட 12 கோடி மூத்த குடிமக்கள்
இதற்கடுத்ததாக, மூத்த குடிம க்களுக்கான பயணச் சலுகையை ரத்து செய்ததன் விளைவாக 12 கோடி பயணிகள் ரயில் பயன்பாடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் இரும்புத்தாது நிலக்கரி போக்கு வரத்தை பயன்படுத்தும் கார்ப்பரேட்டு களுக்கு 10 சதவிகிதம் முதல் 20 சதவிகி தம் வரை சலுகை கட்டணம் அறிவிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமல்ல நிச்சயிக்கப் பட்ட எடைக்குமேல் அதிகமாக சரக்கு ஏற்றி சென்றால் அதற்கு ஒரு சரக்கு பெட்டிக்கு 5000 ரூபாய் அபராதம் பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்டு வந்தது. கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக அதுவும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
சாலைக்குத் துரத்தப்பட்ட 130 கோடி ரயில் பயணிகள்
ஆனால் பயணிகளுக்கு கட்டண உயர்வு; மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணம் ரத்து. ரயில்வேயில் 55 சலுகை கட்டணங்கள் இருந்த நிலையில், அத னை இப்போது வெறும் 23 சலுகைக் கட்டணங்களாக குறைத்து விட்டார்கள். இதன் விளைவாக 135 கோடி பயணிகள் ரயில் தடத்திலிருந்து சாலைக்கு துரத்தப் பட்டுள்ளார்கள். இது தேச நலனுக்கு எதிரானதாகும். சாலையில் அதீத விபத்து களும் அதீத எரிபொருள் பயன்பாடும், அதனால் ஏற்படும் அந்நிய செலாவணி இழப்பும், காற்று மாசுபடுவதும் நடக்கிறது. ரயில் பயணத்தில் எரிபொருள் குறைவு; காற்று மாசு குறைவு; அந்நிய செலாவணி அதிகம் பயன்படுத்தும் நிலை மட்டுப்படு கிறது. எனவே, ரயில் போக்குவரத்து தான் தேச நலனுக்கு நல்லது என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இவ்வாறு மறைமுக கட்டண உயர்வுகள் மூலம் பயணிகளை சாலைக்கு துரத்துவது என்பது தேச நலனுக்கு விரோதமான தாகும்.
மோடி அரசின் கொள்ளையை மக்கள் புரிந்தே வைத்துள்ளனர்
இப்படி பலவிதமான கட்டண உயர்வுகள் மூலம் 75 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுகிற ரயில்வே, கண் துடைப்புக்காக ‘குறைந்த கட்டண உயர்வு’ என்பதை ஏற்க முடியாது. இதன் மூலம் அதன் கட்டணக் கொள்ளையை மூடி மறைக்கவும் முடியாது. மக்கள் மிக நன்றாக இந்த அரசாங்கத்தை புரிந்து வைத்துள்ளார்கள். எனவே, குறை வான கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு வார்த்தை என்பதோடு, ஏற்கனவே நடக்கும் கட்டண கொள்ளையை மூடி மறைப்பது ஆகும். அதோடு படிப்படியாக கட்டணம் உயர்த்தப்படும் என்ற ரயில்வே இணை அமைச்சரின் எச்சரிக்கையும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.