இஸ்ரேல்-ஈரான் போரில் ஈடுபட அமெரிக்க மக்கள் எதிர்ப்பு
நியூயார்க், ஜூன் 18- இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்க ராணுவத்தை ஈடுபடுத்தக்கூடாது என பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் விரும்புவதாகவும், இப்போரில் அமெரிக்க ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. YouGov என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் சுமார் 60 சதவீத அமெரிக்கர்கள் நடந்து கொண்டிருக்கும் மிக மோசமான போரில் அமெரிக்க ராணுவம் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா போரில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை 16 சதவீத மக்கள் மட்டுமே ஆதரித்தனர். 24 சதவீதம் பேர் உறுதியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக டிரம்ப்பின் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் சுமார் 53 சதவீதம் பேர் இப்போரில் அமெரிக்கா ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியினரில் 65 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . போரில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என சொன்னாலும் அமெரிக்கர்களில் பாதி பேர் ஈரானை எதிரியாகக் கருதுவதாகவும், 25 சதவீதம் பேர் ஈரான் நட்புறவுடன் இருக்காது என கருதுவதாகவும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.