tamilnadu

img

மேம்பால பணிக்காக பள்ளி மைதானத்தில் கட்டுமான பொருட்கள் குவிப்பு அண்ணாசாலையில் மாணவர்கள் மறியல்

மேம்பால பணிக்காக பள்ளி மைதானத்தில் கட்டுமான பொருட்கள் குவிப்பு அண்ணாசாலையில் மாணவர்கள் மறியல்

சென்னை, செப். 24 - மேம்பால கட்டுமானப் பொருட்களை பள்ளி மைதானத்தில் குவிக்கப்பட்டதை கண்டித்து புதனன்று (செப்.24) சைதாப் பேட்டை அண்ணாசாலை சிக்னலில்  மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை களுக்கு நடுவே ஒற்றை இரும்பு தூண் கொண்டு நவீன முறையில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் கட்டுமானப் பணிக்கான பொருட்களை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் - மெட்ரோ ரயில் நிலையம் பின்புறம் உள்ள மாடல் பள்ளியின் மைதானத்தில் குவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பள்ளி மாண வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மாணவர்களை அகற்ற முயன்றும் முடியவில்லை. இதன்பிறகு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சத்தியபாமா, சைதாப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சேட்டு உள்ளிட்டோர் நேரடியாக மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்தகுமார், நிர்வாகிகள் அனாமிகா, ராமலிங்கம் கமலேஷ், வினோத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்கியா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மைதானத்தில் உள்ள பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துவதாக உறுதியளித்த அவர்கள், மைதானத்தையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து சுமார் 30 நிமிடம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.