tamilnadu

img

ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துக! தேர்தல் ஆணையத்திற்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும்.


மதுரை, ஏப்.12- மதுரை உட்பட தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன; இதைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் வெள்ளியன்று அவர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-மதுரை உட்பட தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யஉள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரைதொகுதியில் அதிமுகவினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பணப்பட்டுவாடாவுக்கு சட்டவிரோதமான முறையில் மதுரை மாநகர் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றிவரும் சிவக்குமார் உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது. இவர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து மதுரையிலேயே பணியாற்றி வருகிறார். தேர்தல் ஆணையம் காவல்துறை டி.ஜி.பி.யையே பணி மாற்றம் செய்யும் போது சிவக்குமாரை ஏன் பணியிட மாற்றம் செய்யக்கூடாது? தேர்தல் ஆணையம் உடனடியாக அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். முன்பு ஆம்புலன்சுகளில் பணம் கடத்தப்பட்டது. இப்போது காவல்துறை வாகனங்களிலேயே பணம் கடத்துவதாக கூறப்படுகிறது.


பரிணாம வளர்ச்சி என்பது இதுதான் போலும். திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெறுவது உறுதி. அவரை ஆதரித்து திமுக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மாநிலச் செயலாளர்களில் ஒருவரான ஆர்.சீனிவாசனும், பிங்க் சந்துரு என்ற நபரும் சு.வெங்கடேசனின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறு பரப்பியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த புகாரின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குப் பதிவு செய்தால் மட்டும் போதாது. சம்பந்தப் பட்ட இருவரும் தங்களது செயலுக்கு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அல்லது காவல்துறை அவர்களைக் கைது செய்ய வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குகேட்காமல் 2014ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மீண்டும் வெளியிட்டு ஏதோ புதிதாக வாக்கு கேட்பது போல் பாஜக வாக்கு கேட்டு வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன நன்மை ஏற்பட்டுவிட்டது என்பதை பாஜக கூற மறுப்பது ஏன்? இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் தினந்தோறும் சண்டை நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை பாஜக உருவாக்குகிறது. தாங்கள் வந்தால் பயங்கரவாதம் ஒழியும் என மோடி கூறுகிறார். பயங்கர வாதத்தை ஊக்குவிப்பதே மோடி தான். அவரது ஆட்சி அகற்றப்பட்டால் நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிடும். மதுரை தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.


புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிபெறும். சு.வெங்கடேசன் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மோகனைப் போல் எளிமையாக, நேர்மையாக செயல்படுவார். பண பலத்தினால் அதிமுக வெற்றிபெற்றுவிட முடியாது. நாங்கள் பணபலத்தை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்ற வரலாறும் உண்டு. மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கமாட்டேன்; நேர்மையாகப் பணியாற்றுவேன் என கூறினார். அந்த அடிப்படையில் அவர் வெற்றி பெற்று சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றிவருகிறார். அவரைப் போலவே, சு.வெங்கடேசனும் வெற்றிபெற்று மக்கள் பணியாற்றுவார். தற்போது திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல்நடைபெறுகிறது. 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்தபோதே இந்தத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு கையாலாகாத ஆணையம். திமுக உச்சநீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. உச்சநீதி மன்றம் அளித்துள்ள இந்த உத்தரவு மதச்சார்பற்ற, முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும். நான்கு தொகுதிகளுக்கான தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிற்கு ஆதரவளிக்கும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச்செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

;