tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

அறிவியல் கதிர்

உயிரி பிளாஸ்டிக்

 சுவிஸ் நாட்டு விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கை ஒத்த ஒரு பொருளை உருவாக்கியிருக்கிறார்கள். இது நெகிழ்வுத்தன்மையுடன் மக்கும் தன்மையும் கொண்டதாகும். இந்த ஆய்வாளர்கள் அழுகும் மரத்தண்டுகளில் வளரும் காளானின் மைசீலியம் எனும் பகுதியிலிருந்து இழைகளை எடுத்து திரவ கூட்டுப் பொருளாக்கினர். இந்த முறையில்  அவற்றின் இயல்பான உயிரியல் இயக்கங்களை அழிக்காமல் வைக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் கொழகொழப்பான பொருள் உயிர் இழை பரப்பல் (living fiber dispersions, or LFD) என அழைக்கப்படுகிறது. இதை பலவிதமான அச்சுகளில் வார்க்கலாம். இவற்றை மக்கும் எருப்பைகளாக பயன்படுத்தலாம். உள்ளிருக்கும் பொருட்களை உரமாக மாற்றுவதுடன் தானும் மக்கும்; மக்கக்கூடிய அதி மெல்லிய பேட்டரிகளாக பயன்படும். ஒன்று சேராத இரண்டு திரவங்களைக் கலக்கும் எமுல்சிபயராகவும்(emulsifier) பயன்படுத்தலாம். இவை ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருளிலிருந்து ஷாம்பு போன்ற ஒப்பனை பொருட்கள் வரை பயன்படுத்தப்படும் முக்கியமானதாகும். இந்தவகை சேர்ப்பான்கள் மட்டுமே நீண்ட காலத்திற்கு நிலைத்தன்மை கொண்டவை என்கிறார் சுவிஸ் ஒன்றிய பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுணுக்க சோதனைச் சாலையை (the Swiss Federal Laboratories for Materials Science and Technology) சேர்ந்த அசுதோஷ் சின்ஹா. உண்ணக்கூடிய காளானிலிருந்து தயாரிக்கப்படுவதால் இவை நச்சற்றவை. இது உணவு மற்றும் ஒப்பனைத் துறையில் முக்கியமாகும்.  பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மட்டுமல்ல, தன்னைத் தானே சீர் செய்துகொள்ளும் ஆடைகளாகவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று தயாரிக்கப்பட்ட ஏராளமான பொருட்களின் வரிசையில் சேர்ந்துள்ள எல்எப்டி (LFD) மேலும் பல பயன்பாடுகளுக்கு உதவலாம் என இந்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த ஆய்வு அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் (Advanced Materials) எனும் இதழில் வெளிவந்துள்ளது.  

தானே சரிசெய்து  கொள்ளும் கான்கிரீட்    

கான்கிரீட் சிறப்பானதும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு  பொருளாகும். ஆனால் அதன் உடையும் தன்மை ஒரு குறைபாடு ஆகும். அதற்கு அதிக இழுதிறன் இல்லை. எனவே அழுத்தத்தினால் உடையக்கூடியது. இதை போக்க ஒரு வழி, தன் விரிசல்களை தானே நிரப்பிக் கொள்ளும் கான்கிரீட்டை உண்டாக்குவது. செயற்கை லிச்சன் எனும் பொருளின் ஆற்றலை பயன்படுத்தி இப்படிப்பட்ட கான்கிரீட்டை டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர் கான்கிரை கிரேஸ் ஜின் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இதற்கு முன்பும் பேக்டீரியா போன்றவற்றைக் கொண்டு  தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் கான்கிரீட் உண்டாக்கும் முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை தொடர்ந்து இயங்குவதற்கு உயிர்ச் சத்துகள் தெளிக்கப்பட்ட வேண்டியதிருந்தது. லிச்சென் என்பது பாசி, காளான்கள் மற்றும் சயனோ பேக்டீரியாக்களின் (cyanobacteria)  கூட்டுக் குழுவாகும். இவை சிம்பயாசிஸ்(symbiosis) எனும் முறையில் ஒன்றுக்கொன்று உதவி வாழ்பவை. ஜின் குழுவினர் ஒரு சயனோ பேக்டீரியாவையும் இழைக் காளானையும் கொண்டு குறிப்பிட்ட லிச்சனை உருவாக்கினார். இந்தக் காளான் கால்சியம் அயனிகளை ஈர்த்து கால்சியம் கார்பனேட் எனும் வேதிப்பொருள் அதிக அளவில் உண்டாக உதவுகிறது. முட்டை ஓடு, சங்குகள், பவளங்கள், சாக் பீஸ் ஆகியவற்றை உருவாக்குவது இந்த கால்சியம் கார்பனேட்தான். சோதனைச் சாலை பரிசோதனைகளில் இந்த லிச்சன்கள் அதிக அளவு கால்சியம் கார்பனேட்டை உண்டாக்கி கான்கிரீட்டில் இருக்கும் விரிசல்களை அடைத்தன. மேலும் பரவாமலும் தடுத்தன. பேக்டீரியா அணுகுமுறை போலல்லாமல் இந்த முறையில் லிச்சன்களுக்கு உயிர்ச் சத்து அளிக்க வேண்டியதில்லை. பராமரிக்க வேண்டியதில்லை. அடுத்த கட்டமாக ஏற்கனவே உண்டான விரிசல்களை இவை சரி செய்யுமா என்று ஆராய உள்ளார்களாம். இந்த ஆய்வு மெட்டீரியல்ஸ் டுடே கம்யூனிகேசன்ஸ் (‘Materials Today Communications’) என்கிற இதழில் வெளிவந்துள்ளது.

  மெய்யான சிரிப்பும்  பொய்யான சிரிப்பும்

 சில குடும்ப புகைப்படங்கள் அல்லது அலுவலகத்தில் பரிமாறிக் கொள்ளும் நலம் விசாரிப்புகள் ஆகியவற்றில் நமது உதடு புன்னகைத்துக் கொண்டிருக்கும். ஆனால் கண்களில் அது படர்ந்திருக்காது. ஒரு சிரிப்பு உண்மையானதா அல்லது போலியானதா என்பதற்கு முக கட்டமைப்பு, நரம்பு செயல்பாடு, உணர்வின் உண்மைத்தன்மை ஆகியவை காரணிகளாக இருக்கின்றனவாம். சிரிப்பில் இரண்டு வகை உள்ளன. ஒன்று உண்மையான மகிழ்ச்சியைக் காட்டுவது. இதை 19ஆம் நூற்றாண்டாய் சேர்ந்த  பிரெஞ்சு நரம்பியலாளர் கியோம் டிஷேன் த புலோன்(Guillaume Duchenne de Boulogne)  அவர்கள் பெயரால் டிஷேன் சிரிப்பு என்கிறார்கள். இன்னொன்று சமூக ஒழுங்கிற்காகவோ அல்லது தந்திரோபாயங்களுக்காகவோ செய்யப்படுவது. இதை நான்-டிஷேன் சிரிப்பு என்கிறார்கள். டிஷேன் சிரிப்பின்போது இரண்டு தசைகள் நமது வாயின் ஓரங்களை மேல்நோக்கி இழுக்கவும் தூக்கவும் செய்கின்றன. இன்னொரு தசை நமது கண்ணைச் சுற்றியுள்ள தசையை இறுக்கவும் கண்களை லேசாகச் சுருக்கவும் செய்கிறது. நாம் பரிவும் மகிழ்ச்சியும் கொள்ளும்போது இதை பார்க்கலாம்.   இதற்கு மாறாக போலிச் சிரிப்பின்போது வாய் தசைகள் மட்டுமே ஈடுபடுகின்றன. கண்கள் விரிந்த நிலையிலேயே இருக்கும். எவ்வித உணர்வையும் காட்டுவதில்லை. இந்த சிரிப்பு அர்த்தமுள்ளதாக இல்லாமல் இயந்திரத்தனமாக தோன்றும். நம் உண்மையான உணர்வுகளை மறைக்கும் உத்தி இது. இரண்டு வகை சிரிப்புகளுமே மூளையிலிருந்து முகத் தசைகளுக்கு கிரேனியல் நரம்பு VII என்பதன் மூலமே சமிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் டிஷேன் சிரிப்பு, உணர்ச்சிகளை இயக்கும் லிம்பிக் அமைப்பிலிருந்து உருவாகிறது. அதாவது தன்னிச்சையானது. மாறாக, நான்-டிஷேன் சிரிப்பு உணர்வுப்பூர்வமாக இயங்கும் கார்டெக்ஸ் பகுதியிலிருந்து உருவாகிறது. ஒருவர் உண்மையாகவே உணர்ச்சி வசப்பட்டால் ஒழிய கண்களை சுருக்கும் தசைகளை அவ்வளவு எளிதாக இயக்க இயலாது. திறமையான நடிகர்கள் கூட  தங்களது சொந்த அனுபவ உணர்வுகளை நினைவு கூர்ந்து அல்லது சில நுணுக்கங்களை பயிற்சி செய்துதான் சிரிப்பை கண்களின் மூலமும் காட்ட முடியும். மற்றவர்கள் காட்டும் உணர்வு உண்மையானதா என்பது கண்டுபிடிப்பதில் மனிதர்கள் வல்லவர்கள். 10 மாத குழந்தை கூட உண்மையான சிரிப்பையும் போலியான சிரிப்பையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பரிணாம வளர்ச்சியில் இந்த திறமையானது யாரை நம்பலாம், யாரை கூட்டாளியாக வைத்துக் கொள்ளலாம், ஏமாறுவதை எவ்வாறு தவிர்க்கலாம் போன்றவற்றிற்கு உதவியிருக்கலாம். நமது மூளையிலுள்ள ஒரு பகுதியானது ஒருவரது நோக்கத்தையும் அவர் காட்டும் வெளி உணர்வுகளையும் பிரித்துப் பார்க்க உதவுகிறது. போலிச் சிரிப்பு தீய நோக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சில இக்கட்டான சந்தர்ப்பங்கள், மரியாதையைக் காட்டுவது, மோதலைத் தணிப்பது, ஏற்றுக்கொள்வது போன்ற சமூகச் செயல்பாடுகளுக்கு அது உதவுகிறது. ஆனால் நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் அவை நம்மை உணர்வு ரீதியாக களைப்படைய செய்யும். இதை உணர்வு உழைப்பு என்கிறார்கள். உண்மையான உணர்ச்சி இல்லாமல் சிரிக்க வேண்டிய கட்டாயம், குறிப்பாக பணி நிலைமைகளில் மன அழுத்தம், சோர்வடைதல் ஏன் இதயக் கோளாறுகளுக்குக் கூட இட்டுச் செல்லும். இந்தப் பதிவு பிரிஸ்டல் பல்கலைக்கழக உடற்கூறு பேராசிரியர் மிஷல் ஸ்பியர் -ஆல் எழுதப்பட்டுள்ளது.

வார இறுதி நாள் தூக்கம் இதயக் கோளாறுகளை குறைக்கும்

வார இறுதி நாட்களில் இழந்த தூக்கத்தை ஈடு கட்டுபவர்களுக்கு இதய நோய்கள் 20% குறைவாக ஏற்படுகிறது. 90,000 பேருக்கும் கூடுதலான யு கே தரவுகளில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதல் சிறு தூக்கம் தூங்குபவர்கள் குறை தூக்கத்தினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை என்று இந்த புதிய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு விவரங்கள் 2024ம் ஆண்டிற்கான ஐரோப்பிய இதயவியல் சங்கத்தின் காங்கிரஸ் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எல்லா நாட்களிலும் தூங்காமல் இருப்ப வர்கள் அல்லது வார இறுதி நாட்களில் குறை வாகத் தூங்குபவர்களைக் காட்டிலும் வார இறுதி  நாட்களில் அவ்வப்போது சிறிது நேரம் தூங்கு பவர்களுக்கு இதயக் கோளாறுகள் ஐந்தில் ஒரு பகுதி குறைவாக ஏற்படுகிறது. “ஒரு நேரத்தில் இழக்கப்படும் தூக்கத்தை வேறொரு நேரத்தில் ஈடுகட்டுவது இதய நலத்திற்கு உதவுகிறது. குறைத் தூக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு இதனால் அதிக நன்மை கிடைக்கிறது” என்று  ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும்  பெய்ஜிங் ஃப்யுவாய் (Fuwai)  மருத்துவமனை யின் சீன இதய நோய்களுக்கான மையத்தின் ஆய்வாளருமான யான்ஜுன் சாங் (Yanjun Song)  கூறுகிறார். யு கே உயிரிவங்கியில் (Biobank)  பதிவு செய்த 90,903 பேர் சுயமாக விவரங்க ளைத் அளித்து இந்த ஆய்வில் பங்கேற்றனர். யுகே உயிரிவங்கி திட்டம் அரை மில்லி யன் தனிநபர்களின் மருத்துவக் கோப்புகள், வாழ்க்கை முறை விவரங்களை கொண்டது.  இவர்களில் 19,816 பேர் தீவிர தூக்கக் குறை வால் அவதிப்படுபவர்கள். மருத்துவமனை ஆவ ணங்கள், இறப்பு பதிவேடுகள் இதய நோய்கள், மாரடைப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும்  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை அடையாளம் காண ஆய்வுக் குழு வினருக்கு உதவின. ஆய்வில் பங்கேற்றவர்கள் 14 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். வார இறுதி நாட்களில் 0.06 முதல் 16.5 மணி  நேரம் தூக்கத்தை இழந்தவர்களை விட 1.28 முதல்  16.06 மணி நேரம் கூடுதலாக தூங்குபவர்களுக்கு  இதய நோய்கள் 19% குறைவாக ஏற்படுவதை இதன் மூலம் ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்த னர். வார இறுதி நாட்களில் குறைவாகத் தூங்கு பவர்களை விட அன்றாட தூக்கக் குறைபாடு உள்ள துணைக் குழுவில் இருந்தவர்கள் அத்த கைய நாட்களில் தூங்குவதால் அவர்களுக்கு இதய நோய்கள் 20% குறைவாக ஏற்பட்டது. “நவீன சமூகத்தில் தூக்கக் குறைபாடு இருந்தா லும் வார இறுதி நாட்களின்போது அதை ஈடுகட்டு பவர்களுக்கு இதய நோய் ஆபத்து குறிப்பி டத்தக்க அளவு குறைகிறது” என்று  ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரும் பெய்ஜிங் தேசிய இதய நோய் மையத்தின் விஞ்ஞானியுமான செஜ்ஜன் லியு (Zechen Liu) கூறுகிறார். ஒரு நல்ல இரவு நேரத் தூக்கத்திற்கு ஈடு இணையானது எதுவுமில்லை “வேலை அல்லது குடும்பப் பொறுப்புகளால் பலர் போதுமான நேரம் தூங்குவதில்லை. வார  இறுதி நாள் தூக்கம் ஒரு நல்ல இரவின் தூக்கத்திற்கு ஈடாகாது. ஆனால் வாரத்தின் இறுதி  நாளில் கூடுதலாகத் தூங்குவது இதய நோய்கள்  ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது என்று இந்த  ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. நம் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை தூக்கக் குறைவு பாதிக்கிறது.     நாள்தோறும் இரவு ஏழு  மணி நேரம் நன்றாகத் தூங்குவதன் முக்கி யத்துவத்தை இந்த பெரிய ஆய்வு நமக்கு நினைவு படுத்துகிறது” என்று பிரிட்டிஷ் இதய நல அறக்கட்டளையின் இணை இயக்குனர்களில் ஒருவரான பேராசிரியர் ஜேம்ஸ் லேய்பர் (Prof  James Leiper) கூறுகிறார். தூக்கத்தின் பாணி கள் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி மேலும் ஆராயப்படவேண்டும். நாகரீக வாழ்க்கை முறையை நம் ஆரோக்கி யத்தை மேம்படுத்த உதவும் வகையில் தக வமைப்பது பற்றி நாம் ஒவ்வொருவரும் தீவிர மாக சிந்திக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மூளை புற்றுநோயை கண்டறிய உலகின் முதல் இரத்தப் பரிசோதனை

சிதம்பரம் ரவிச்சந்திரன்

மூளை புற்றுநோயை கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் இரத்தப் பரிசோதனை  இந்நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். செலவு குறைந்த இம்முறையின் மூலம் சென்றடைய முடியாத இடத்தில் இருக்கும் கட்டிகளையும் கூட ஆரம்ப நிலையிலேயே கண்டறியமுடியும். விரைவான சிகிச்சையின் மூலம் நல்ல தீர்வை ஏற்படுத்தலாம். நோய் கண்டறிதலில் இந்த கண்டு பிடிப்பு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. புற்றுநோய்க்கு காரணமான மூளைக் கட்டிகளை கண்டறிய நிபுணர்கள்  பல ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் இந்நோயால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். வேறெந்த புற்று நோயையும் விட யுகே யில் இந்நோயால்  நாற்பது வயதிற்குள் இருக்கும் குழந்தை கள், வளர்ந்தவர்கள் உயிரிழக்கின்றனர். மரணத்தை ஏற்படுத்தும் மூளைப் புற்று நோயின் வகைகளை மிக வேகமாக எளிதில்  கண்டறிய உதவும், உடலிற்குள் ஊடுரு வாத, திசுக்களை அகற்றி பரிசோதிப்பதை தவிர்க்கும் (biopsi) விதத்தில் அமைந்த சுல பமான இரத்தப் பரிசோதனை முறையை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை புற்றுநோய் குறித்த பன்னாட்டு இதழில் (International Journal of Cancer) வெளிவந்துள்ளது. செலவு குறைந்த திரவத்தை பயன் படுத்தி பரிசோதிக்கும் இம்முறை முன்  கூட்டிய நோய் கண்டறிதலுக்கு பெரிதும் உதவும். சென்றடைய முடியாத இடத்தில்  இருக்கும் மூளைக் கட்டிகளை இம்முறை யைக் கொண்டு ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சையை தொடங்கினால் நோயாளிகள் நீண்டநாள் உயிருடன் வாழலாம்.  இதன் மூலம் பொதுவாக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் கிளியொபிளாடோமா (glioblastoma (GBM), வயது வந்தவர்  களை அதிகமாக பாதிக்கும் அஸ்ட்ரோ சைட்டோமஸ் astrocytomas) மற்றும்   அலி கோடென்ரோகிலியோமஸ் (oligodendrogliomas) உள்ளிட்ட பலதரப்பட்ட மூளை புற்றுநோய் கட்டிகளை  கண்டறியலாம். இப்பரிசோதனைகள் உயர் தர பகுப்பாய்வுத் திறன், குறிப்பிட்ட தீர்வு, துல்லி யத் தன்மையைக் கொண்டது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி மூளைக் கட்டி களுக்கான உயராய்வு மையம் மற்றும் சுகா தாரத்திற்கான இம்பீரியல் கல்லூரியின்  தேசிய மருத்துவ சேவை அறக்கட்டளையை  (NHS trust) சேர்ந்த நிபுணர்கள்  கூறு கின்றனர். எளிய பரிசோதனை முறை “இந்த ஆய்வு மூளைக் கட்டிகளை முன்கூட்டியே கண்டறிந்து மேம்பட்ட முடிவு களை தரும்” என்று மூளைக் கட்டி ஆய்வு  அறக்கட்டளையின் தலைமை செயல் அலு வலர் டான் நோலெஸ் (Dan Knowles) கூறு கிறார். இந்த ஆய்வின் முடிவுகள் வருங்  காலத்தில் மேலும் ஆழமாக ஆராயப்பட வுள்ளன. இது வெற்றி பெறும்போது வரும் இரண்டாண்டுகளில் நோயாளிகள் இந்த புதிய சோதனைகளால் பயன்பெறுவர். டிரை நெட்ரோ கிளியோ இரத்தப் பரி சோதனை (TriNetra-Glio blood test)  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்விற்கு  புற்றுநோய் மரபணு தரவு (Data Cancer  Genetics) என்ற அமைப்பு நிதியுதவி செய்துள்ளது. இந்த சோதனை மைய  நரம்பு மண்டலத்தில் உள்ள, நியூரான்கள்  அற்ற, நரம்பு செல்களுக்கு ஆதரவாக  செயல்படும்,  இரத்தத்தில் மிதந்துகொண்டி ருக்கும் கிளையல் (Glial) செல்கள் என்ற  கட்டிகளில் இருந்து பிரிக்கப்படும் செல் களை ஆராய்கிறது. அகற்றக் கடினமாக உள்ள இவை  அடையாளப்படுத்தப்பட்டு நுண்ணோக்கி யின் உதவியால் பரிசோதிக்கப்படுகிறது. “நோயாளிகளின் நலனில் இந்த ஆய்வு  முடிவுகள் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  இருக்குமிடம் அல்லது மற்ற கட்டுப்பாடு களால் கட்டியின் பகுதிகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் இவற்றை இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் நோயா ளிகளுக்கு நட்புரீதியில் ஆராயலாம். ஊடுருவல் இல்லாமல், கதிரியக்கம் செய்யாமல் இவ்வகை கட்டிகளை கண்டு பிடிக்க வேறு முறைகள் இதுவரை இல்லை என்பதால் இதுவே இத்தகையவற்றில் உல கில் முதல் சோதனை” என்று மூளைக்கட்டி உயராய்வு மைய தலைவர் டாக்டர் நெலோஃபர் சையது (Dr Nelofer Syed) கூறுகிறார். “இது நோய் இருப்பதை மட்டும்  காட்டும் சோதனையில்லை. இது திரவத்தை  கொண்டு நடத்தப்படும் உண்மையான பகுப்பாய்வு முறை. இரத்தத்தில் பழுதுபடாமல் இருக்கும் கட்டியில் உள்ள செல்களை இந்த ஆய்வின் மூலம் நிஜமான திசு மாதிரிகளைப் போலவே ஆராயமுடியும். அரிதாக உடல்  முழுவதும் பரவும் இவ்வகை புற்றுநோய்க்கு  இது மகத்தான ஒரு திருப்புமுனை. ஜி  பி எம் வகை கட்டிகள் உள்ளவர்கள் பத்து  ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை.  நோய் பாதித்த பலருக்கும் 12 மாதங்களுக்  கும் மேல் முன்கூட்டி கணிக்க முடிவதில்லை. தொடரவேண்டிய சிகிச்சை முறைகள் பெரும்பாலான நோயாளிகளுக்கு மர ணத்தை ஏற்படுத்தும் இவ்வகை கட்டி களுக்கு சிகிச்சை செய்ய மேலும் பல புதிய  முறைகள் உருவாக்கப்படவேண்டும். பேர ழிவை ஏற்படுத்தும் இந்நோய்க்கு ஒரு நல்ல  தீர்வு காணப்படவேண்டும். இருபதாண்டு களுக்கும் மேலாக இதற்கான சிகிச்சை முறையிலும் நோயாளிகளின் நலனிலும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பது ஒரு மானக்கேடு. அதிக சேதம் ஏற்படாத கதிரியக்கமும், கீமோ சிகிச்சைமுறையும் (Chemotherapy) தொடரவேண்டும்” என்று இம்பீரியல் உயர்  ஆய்வு மைய ஆலோசகரும் லண்டன் இம்பீரி யல் கல்லூரியின் மூத்த கௌரவ கிளினிக்கல்  பேராசிரியரும் நெலோஃபருடன் இணைந்து மூளை புற்றுநோய் பற்றி ஆராயும் விஞ்ஞா னியுமான கெவினோ நீல் (Kevin O’Neill)  கூறுகிறார். நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தாரும் தேவையான உதவிகளை  பெறும் வரை இந்நோய்க்கு தீர்வு காண அரசு களையும் பெரிய அறக்கட்டளைகளையும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.