வருவாய்த் துறை அலுவலர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக. 9- தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் பொன் மாடசாமியை பழிவாங்கும் நோக்கத்துடன், பணி மாறுதல் செய்த மாவட்ட வருவாய் அலுவலரின் பணி மாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்ட வருவாய் அலுவலரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனைவர் பால்பாண்டி, டி.என்.ஆர்.ஒ. ஏ.மேனாள் மாவட்டத் தலைவர் அருள்ஜோஸ், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் உரையாற்றினர். மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட பணி மாறுதல் ஆணை ரத்து செய்யப்படாவிட்டால் தொடர் இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் ராஜவேல் நன்றி கூறினார்.