tamilnadu

தொடர்மழையால் வேலையின்றி வாடும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

 மதுரை. டிச. 15 -  தொடர் மழையால் வேலையின்றி வருவாய் இல்லாமல் வாடும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் இடிந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கக்கோரியும் போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.   சங்கத்தின் மாநில நிர்வாகிகள்  கூட்டம்  மதுரையில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர் , மாநில செயலாளர்கள் எம்.சின்ன துரை எம்எல்ஏ, அ.பழநிசாமி அ.து.கோதண்டன், ஏ.வி.அண்ணாமலை, துணைத் தலைவர்கள் பி.வசந்தாமணி, மலைவிளை பாசி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தொடர் மழையால் வேலையின்றி, வருவாய் இல்லா மல் 2 மாதங்களுக்கு மேலாக அவதிப்படும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க மாநில அரசை வலியுறுத்துகிறோம். இடிந்து விழுந்துள்ள கூரை வீட்டை பராமரிப்பு செய்திட  வீட்டிற்கு ரூ.15000 வழங்கவும், அரசு கட்டிக் கொடுத்துள்ள கான்கிரீட் வீடுகள், ஓட்டு வீடுகள் சிதிலமடைந்து மோசமான நிலையில் இருப்பதை பராமரிப்பு செய்து சீரமைப்பு செய்திட ரூ.200000 நிவாரணம் வழங்கவும், குடியிருக்க தகுதியற்ற வீடுகளையும் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுத்த வீடுகளையும் இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டி தர ரூ.5 லட்சம் தரவும் கோருகிறோம்.

கால் நடைகள் இறப்பு 

தொடர் மழையால் ஆடு மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகள் பல்வேறு நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளன.  இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வா தாரம்  பாதிப்புக் குள்ளாகியுள்ளது. ஆகவே இறந்து போன பசு மாடு ஒன்றிற்கு ரூ.50,000 , ஆடு ஒன்றிற்கு ரூ.7000 நிவாரணம் வழங்கவும் கோருவதோடு, வைக்கோல், புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்கள் மானியத்தில் வழங்க கோருகிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து ஜன. 6,7,8 தேதிகளில் மாநிலம் முழுவதும் இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘இ - ஷ்ரம்’ (E- Shram) பதிவை  கால நீட்டிப்பு செய்க! 

ஒன்றிய அரசு முறைசாரா தொழிலாளர்கள், விவ சாய தொழிலாளர்கள், நிரந்தர வருமானமற்ற கிராமப்புற நகர்ப்புற அனைத்து தொழிலாளர்களையும்  உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் பதிவு செய்யும் பணியை செய்து வருகிறது.  இந்த பதிவை  வரும் டிசம்பர் 31 க்குள் முடிப்பது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.  அணிதிரட்டப்படாத தொழிலாளர்களில் நாடு முழுவதும் தற்போது வரை 20 விழுக்காட்டினர் கூட இன்னும் பதிவு செய்யவில்லை.  மேலும்  கொரோனா  காலமாகவும்  தொடர் மழை காலமாகவும் இருப்பதாலும் போதிய அளவில் தொழிலாளர்கள் பதிவு என்பது நடை பெறவில்லை.  மாநில அரசு சுகாதார பணிகளிலும் தொடர் மழையிலிருந்து மக்களை மீட்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை நிர்வாகங்கள் இத்தகைய பணியில் முழு வீச்சில் ஈடுபட வில்லை. மேலும் அரசு ஏஜென்சிகள் போதிய அளவில் பதிவு பணிகளை பரவலாக்கவில்லை. தனியார் நிறுவ னங்களில் பதிவு செய்ய ரூ.60/ முதல் ரூ.150/ வரை இடத்திற்கு ஏற்ப ஒரு தொழிலாளி செலவு செய்ய வேண்டியிருப்பதால், இந்த பதிவு பணியில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. தொழிலாளர்க ளுக்கான பயன்கள், மருத்துவம், சமூகப்பாதுகாப்பு, காப்பீடு போன்றவை குறித்து இத்திட்டத்தில் தெளிவாக ஒன்றிய அரசு குறிப்பிடாததால் பெரும்பாலான தொழிலா ளர்களிடம் ஆர்வம் இல்லை. ஆகவே ஒன்றிய - மாநில அரசுகள் ஒன்றிணைந்து திட்டத்தின் நோக்கங்களை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்து ஊராட்சி அளவில் முகாம்கள் அமைத்து இலவசமாக பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும் நாடு முழுவதும் இத்தகைய பணி நிறைவடைய குறைந்தபட்சம் ஆறு மாத காலம் தேவை என்று கருதுகிறோம் ஆகவே ஒன்றிய அரசு ஆறு மாத காலத்திற்கு பதிவுப் பணியை செய்திட கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.

நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்துக!

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு நகர்ப்புற வேலைகளுக்கு ரூ.100 கோடியில் இந்த நிதி யாண்டில் வேலை தருவதாக சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 37 பேரூ ராட்சிகள் உட்பட நகராட்சி, மாநகராட்சிகளில்  இதற்கான பணிகள் துவங்கியுள்ளது.  இதற்காக வேலை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கும் தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.  எங்களது சங்கத்தின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பேரூராட்சி களில் வேலை கோரி மனு கொடுத்துள்ளோம்.  இந்த நிதியாண்டு முடிவடைய இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் வேலை துவங்கப்படாதது கவலை அளிக்கிறது. நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து உள்ள சூழலில் அறிவிக்கப்பட்ட அனைத்து பேரூராட்சிகளிலும் உடனே வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அடுத்த நிதி ஆண்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இத்தகைய வேலைவாய்ப்பை துவங்குவதற்கான நடவடிக்கையை அரசு விரிவுபடுத்த வேண்டும். திட்டத்திற்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசு போதிய நிதியுதவி,  மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.  இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 

;