புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, அக். 11- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆதரவாக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அண்ணா சிலை எதிரே சனிக்கிழமையன்று (அக்.11) கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கு உள்ளான புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராடிய பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தி கைது செய்த புதுச்சேரி அரசின் காவல்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முனியம்மாள், சஞ்சய், ஸ்டீபன்ராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் இளவரசி, மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் புதுச்சேரி காவல்துறை கண்டித்தும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கண்டன முழக்கங்களை பெண்கள், வாலிபர்கள், மாணவர்கள் எழுப்பினர்.
