பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம்
பாபநாசம், ஆக. 28- பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி தலைமை வகித்தார். செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா முன்னிலை வகித்தனர். இதில், 2025-2026 ஆம் ஆண்டு பள்ளி கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.10.60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விபத்தில் முதியவர் பலி
தஞ்சாவூர், ஆக. 28- தஞ்சை ஆர்.எம்.எஸ். காலனி ரயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(72). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 26 ஆம் தேதி இரவு, பன்னீர்செல்வம் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் தனது சைக்கிளுடன் சாலையை கடக்க முற்பட்டார். அப்போது, எதிர்திசையில் நாஞ்சிக்கோட்டை சாலை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரவிக்குமார்(40) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர்செல்வம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொகுதியின் வளர்ச்சிப் பணி குறித்து ஜவாஹிருல்லா, ஆட்சியரிடம் மனு
பாபநாசம், ஆக. 28- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்தை நேரில் சந்தித்த பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, தொகுதியின் வளர்ச்சிப் பணி குறித்து உரையாடியதுடன், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அவர் அளித்த மனுவில், பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மெலட்டூரில் இருந்து, வருவாய் வட்ட தலைமையிடமாக விளங்கும் பாபநாசத்துக்கு நேரடி பேருந்து போக்குவரத்து வசதி இது வரை இல்லாத காரணத்தால், மெலட்டூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தேவை நிமித்தமாக, பாபநாசம் வந்து செல்வதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த குறையை நிவர்த்திச் செய்யும் பொருட்டு பாபநாசம் 108 சிவாலயம் – பாபநாசம் பேருந்து நிலையம் - திருவையாத்துக்குடி – புலிமங்களம் - தேவராயன் பேட்டை – பொன்மான் மேய்ந்தநல்லூர் – அகரமாங்குடி – மெலட்டூர் – அன்னப்பன்பேட்டை – திட்டை மார்க்கத்தில் பேருந்து இயக்கும் பட்சத்தில் இந்த வழித் தடத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக் கானோர் பயன்பெறுவர். மேலும், தஞ்சாவூர் - சுவாமிமலை இடையே அய்யம்பேட்டை-பாபநாசம் வழியாக நேரடி பேருந்து போக்குவரத்தைத் தொடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூறப்பட்டுள்ளது.