சிதம்பரம் அருகே சரஸ்வதி அம்மாள் நகருக்கு புதிய மின் மாற்றி
சிதம்பரம், ஆக. 2 - சிதம்பரம் அருகே சரஸ்வதி அம்மாள் நகரில் புதிய மின்மாற்றியை பொது மக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகர், அருண் நகர், எம்.கே கார்டன், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மின் துறை அலுவலர்களிடம் சரஸ்வதி அம்மாள் நகருக்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என நகரின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், சிதம்பரம் கோட்ட மின் துறை கண்காணிப்பு பொறி யாளர் ஜெயந்தி, செயற்பொறியாளர் மோகன் காந்தி, அண்ணாமலை நகர் உதவி மின் பொறியாளர் சுபாஷினி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பணி களை மேற்கொண்டனர். கடந்த ஒரு வார காலமாக நடை பெற்ற இந்த பணி முடிவுற்ற நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்மாற்றியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சரஸ்வதி அம்மாள் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சரஸ்வதி அம்மாள் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சுப்பு வெங்கடேசன் தலைமை தாங்கினார். அண்ணாமலை நகர் மின் துறை உதவி மின் பொறியாளர் சுபாஷினி கலந்து கொண்டு மின் மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதில் சரஸ்வதி அம்மாள் நகர் சங்க நிர்வாகிகள் சிவநேசன், குணஜோதி, வரதன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் கொண்டனர்.