கூகுள் ஜெமினியில் புதிய அம்சம் அறிமுகம்!
ஜெமினி ஏஐ-இல், புகைப்படத்தை ஆடியோ வுடன் கூடிய வீடியோவாக உருவாக்கும் அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Veo 3 வீடியோ ஜெனரேஷன் மாடல் உதவியுடன் ஜெமினி ஏஐ-இல் ஒரு புகைப்படத்தை ஆடியோவுடன் கூடிய 8 வினாடி அனிமேட்டடு (Animated) வீடியோவாக உருவாக்கும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. பின்னணி இரைச்சல் (Background Noise), சுற்றுப்புற ஆடியோ (ambient audio) அல்லது வசனங்களை வீடியோவில் சேர்க்கும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டும் ஜெமினி அட்வான்ஸ்டு அல்ட்ரா மற்றும் ப்ரோ (Gemini Advanced Ultra and Pro) சந்தாதாரர்களுக்கு வெப் இண்டர்பேஸ் மூலம் இந்த அம்சம் கிடைக்கிறது. வரும் வாரத்தில் மொபைல் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து வீடியோக்களி லும் கீழ்-வலது மூலையில் “Veo” வாட்டர்மார்க் மற்றும் மறைக்கப்பட்ட SynthID டிஜிட்டல் வாட்டர்மார்க் ஆகியவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படத்தை வீடியோவாக உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்: - ஜெமினி ஏஐ-க்கு சென்று, Prompt Bar-இல் உள்ள “Tool” ஐகானை கிளிக் செய்யவும். - அதில் காண்பிக்கும் “video”-வை தேர்வு செய்து, நீங்கள் வீடியோவாக மாற்ற நினைக்கும் புகைப்படத்தை தேர்வு செய்து அப்லோடு செய்யவும். - வீடியோ மற்றும் ஆடியோ எபெக்ட்களை சேர்த்தால், ஜெமினி ஏஐ 720p MP4 வடிவத்தில் வீடியோவை உருவாக்கி வழங்கும்.
இனி இண்டர்நெட் இல்லாமல் சாட் செய்யலாம் புதிய செயலி அறிமுகம்!
இ ண்டர்நெட் இல்லாமல் அருகில் உள்ள நண்பர்களுடன் சாட் செய்வதற்கென, பிட்சாட் என்ற புதிய செயலியை டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ ஜாக் டார்சி அறிமுகம் செய்துள்ளார். இந்த பிட்சாட் செயலியின் மூலம் மெசேஜ் அனுப்புவதற்கு, wifi அல்லது மொபைல் நெட்வொர்க் போன்ற இண்டர்நெட் சேவைகள் தேவையில்லை. அதற்கு பதிலாக, ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. தகவல்களை பரிமாற Mesh Network பயன்படுத்தப்படுகிறது. ஒரு மொபைலில் இருந்து 300 மீட்டர் தூரம் வரை இருக்கும் மற்றொரு மொபைலுக்கு இந்த செயலியை பயன்படுத்தி மெசேஜ்களை அனுப்ப முடியும். மெசேஜ்கள் end-to-end encryption செய்யப்பட்டு, பயனர்களின் சாதனங்களில் மட்டுமே தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மெசேஜ்கள் தானாக அழிந்து விடும். இதில் குழுவை உருவாக்கி, Password செட் செய்து பாதுகாப்பான முறையில் சாட் செய்யலாம். தற்போது, இந்த செயலி பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது. இது தற்போது ஆப்பிளின் டெஸ்ட் ப்ளைட் இயங்குதளம் மூலம் சில iOS பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்லா வாகனங்களில் க்ரோக் ஏஐ அம்சம்!
டெஸ்லா கார்களில் க்ரோக் ஏஐ (Grok AI) அம்சம் வழங்கப்பட உள்ளது. எக்ஸ் ஏஐ நிறுவனத்திற்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட க்ரோக் சாட்பாட்டின் சமீபத்திய பதிப்பான க்ரோக் 4 கடந்த ஜூலை 9-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்களின் கேள்விகளுக்கு இணைய தேடல் (குறிப்பாக எக்ஸ் தளத்தில் உள்ள தகவல்கள்) மூலம் பதில்களை வழங்குகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் டெஸ்லா கார்களிலும் க்ரோக் ஏஐ (Grok AI) அம்சம் கிடைக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.