நெல்லை,டிச.13- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் சாரல்மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி, வைப்பார் பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணைப்பகுதியில் அதிகபட்சமாக 6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது. மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் இன்று தண்ணீர் நன்றாக விழுந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் இன்று தண்ணீர் வெள்ளமாக கொட்டியது. வருகிற 20-ந் தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க வியாபாரிகள், பொருட்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.