tamilnadu

img

விருப்பு வெறுப்பற்றவர்களாக வாழவே மனிதன் விரும்புகிறான்

திண்டுக்கல், அக்.9- விருப்பு வெறுப்புகள் அற்று வாழவே மனிதன் விரும்புகிறான் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசினார்.  புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 8 சனிக்கிழமையன்று  மாலை சிந்தனை அரங்கத்தில் எழுத்தாளர் சோலை சுந்தர  பெருமாள் நினைவு மேடையில், “கதைகளும்  கதை மாந்தர்களும்” என்ற தலைப்பில் எழுத்தா ளர் பவா செல்லத்துரை உரையாற்றினார்.அவர் பேசியதாவது:  நான் பள்ளியில் படிக்கும் போது குறை வான மார்க் எடுத்தது தொடர்பாக என் தந்தை யிடம் சொன்னேன் .நான் குறைவான மார்க் எடுக்க மாட்டேன் என்று நம்பிய என் தந்தை. நீ ஒன்றும் குறைவாக மார்க் எடுக்கக் கூடியவன்  அல்லவே என்று கூறி, என் பள்ளி ஆசிரியரிடம்  என்னை அழைத்துச் சென்றார். எனது விடைத்தாள்களை காட்டும்படி கேட்டார்.ஆசிரியர் தர மறுத்தார் .

அப்போது என் தந்தை தனது கதர் சட்டையை  கிழித்துக்கொண்டு கோப மாக வாக்குவாதம் செய்த போதுதான் அவரது  தோளில் இருந்த தழும்பை கண்டேன். பல நாட்கள் அவரது தோளில் என்னை சுமந்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த தழும்புகளுக்கு நான் அவரிடம் கேள்வி எழுப்பி யதில்லை. என் மனதில் ஆழப் புதைந்த அந்த கேள்விக்கு அன்றைக்கு விடை கிடைத்தது.  என் ஆசிரியரைப் பார்த்து, இது என்ன தழும்பு தெரியுமா என்று கேட்டார். கேட்டவர் அதற்கான பதிலையும் சொன்னார். சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளைக்காரன் என்னை சுட்ட போது ஏற்பட்ட தழும்பு என்றார். உன்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு இந்த சீட் வாங்கி கொடுத்தோமே என்று என் தந்தை ஆசிரியரை பார்த்து கேட்டார். அவருக்கு கிடைத்த ஆசிரியர் பணி கூட தான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கிடைத்தது என்று  நம்புகிறார் என் தந்தை. பிறகு என் தந்தை என்  கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அன்றைக்கு அவர் பிடித்த அந்த பிடி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் தளராமல் இருக்கிறது. என் தந்தை வெற்றி அடைந்த தாகவே நான் கருதுகிறேன். என் தந்தையைப் போல பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தழும்புகள் இருக்கும். ஆனால் அந்த தழும்புகளை வெளியில் சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உண்மையில் போற்றப்பட வேண்டியவர்கள்தான். 

நெருப்பில் நிற்பது போல்...

ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இனிமேல் எனக்கு பென்சன் வேண்டாம் என்று தாசில்தாரிடம் சென்று எழுதிக்கொடுத்தார். எதற்காக பென்சன் வேண்டாம் என்கிறீர்கள் என  தாசில்தார் கேட்டார். எனது மகன் வேலைக்குச் சென்றுவிட்டான். அதனால் எனக்கு பென்சன் வேண்டாம் என்றார். மகன் வேலைக்கு சென்றால் என்ன? இது உங்களுக்கான பென்சன். இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என தாசில்தார் கேட்டார். பென்சன் வாங்குகிற ஒவ்வொரு சமயமும் நான் நெருப்பில் நிற்பது போல் இருக்கிறது என்றார்.  சென்னையில் மெரினா பீச் அருகில் ஒரு இரும்பு கடை வைத்திருந்த ஒருவர் மகாத்மா காந்தியின் பேச்சு கேட்பதற்காக சென்றவர் அப்படியே அவரோடு சென்று விட்டார். அவருக்கு தன்னுடைய கடை ஞாபகம்  இல்லை. பிற்காலத்தில் அந்த கடையில் வேலை  செய்து கொண்டு டீ வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த சிறுவன் அந்த கடையின் ஓனராக மாறினான். அந்த தியாகியின் குழந்தை கள் பெரியவர்களாக ஆகிவிட்டார்கள். அவரி டம் சிலர் கேட்டார்கள், நீங்கள் ஏன் பிசினஸ்  செய்து கொண்டே அரசியல் செய்யக்கூடாது என்றார்கள். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகளை போல நினைத்து இருப்பார்கள் போலும்.  அன்றைக்கு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடையை மட்டும் மறக்கவில்லை. தங்கள் குடும்பத்தை யும் மறந்துதான் சென்றார்கள். அப்படி செல்வதற்கு அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மைதான். அந்த தியாகத்தில் நாம் வென்றுவிட்டதாகவே கருதுகிறோம். 

சாத்தியமாக்கியவர்

ஒருமுறை காமராஜர் முதல்வராக இருந்த போது பள்ளி மாணவர்கள் எத்தனை கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்கிறார்கள் என்று தனது அதிகாரிகளிடம் கேட்டார். குறைந்தது 5 கிலோ மீட்டர் தூரமாவது சென்று படிப்பார்கள் என்று அதிகாரிகள் சொன்னார்கள். அந்தந்த கிராமத்திலே பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்றால் எத்தனை பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று அதிகாரியிடம் காம ராஜர் கேட்டார். குறைந்தது 60 ஆயிரம் பள்ளி களாவது கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். சரி கட்டுங்கள் என்று காமராஜர் சொன்னதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியுடன் நின்றார்கள். ஏன் அப்படி இருக்கிறீர்கள் என்று காமராஜர் கேட்டபோது, ஒரு பள்ளிக்கூடம் அமைக்க குறைந்தது இரண்டு  ஏக்கர் இடமாவது தேவைப்படும். நம்மிடம் அவ்வளவு இடம் இருக்குமா என்று அதிகாரிகள்  கேட்டார்கள்.  இல்லை என்று சொல்வதற்கு எதற்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கிறீர்கள் என்று காமராஜர் சொன்னார். இது சாத்தியம் என்று அப்போது நெ.து.சுந்தர வடிவேலு சொன்னார். எப்படி என்று காமராஜர் கேட்டபோது, எல்லா ஊர்களிலும் ஒரு ஏக்கர்  நிலம் இலவசமாக வாங்கலாம். ஒரு ஆசிரி யருக்கு முப்பது ரூபாய் சம்பளம் தரலாம். அந்த சம்பளத்தை அந்த கிராம மக்கள் கொடுத்து விடுவார்கள் என்று கூறினார்.  அவர் சொன்னதை அடுத்து உடனே செய்யுங்கள் என்று  காமராஜர் கூறினார். இன்றைக்கு அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடம் இருக்கிறது என்றால் அதற்கு விதை போட்டவர் காமராஜர்.

போராளியும் காட்டிக் கொடுத்தவரும்...

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பஷீரின்  சிறு கதைகள் பிரசித்தி பெற்றவை. இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பான ஒரு சிறுகதை. இந்த சிறுகதையில் பூனை சுமதி  என்பது ஒரு கதாபாத்திரம். பூனை சுமதி போராடுகிற இயக்கத்தை சேர்ந்தவர்களை இலங்கை ராணுவத்துக்கு காட்டிக்கொடுத்து வந்தவர். பிற்காலத்தில் சென்னையில் வளசர வாக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார். வீட்டு  வாசலில் கோலம் போட்டவுடன் வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருப்பார். போராளிக் குழுவைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் ஒருமுறை அந்தப் பெண் ஒரு வீட்டில் கோலம் போட்டுக் கொண்டி ருக்கும் போது அவளை அடையாளம் கண்டு  பூனை சுமதி என்று கூப்பிட்ட போது, தனது காதுகளில் அந்த வார்த்தையை கேளாதது  போல் அங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.  பிறகு அந்தப் பெண்ணின் வீட்டை கண்டு பிடித்து திருமுருகன் பூனை சுமதியை விசாரித்த  போது, தான் ஒரு மலையாளி பெண் என்பது போல காட்டிக் கொண்டாள். உன்னை நன்றாக தெரியும். நீ தான் பூனை சுமதி என்று அழுத்தமாக சொன்ன திருமுருகன், நான் போராளிக் குழு வில் இருக்கிறேன். நீ காட்டி கொடுத்தாய்.அதெல்லாம் சரி.தற்போது நாம் இருவரும் அகதிகள். இருவரும் திருமணம் செய்து  கொள்வோம் என்று கூறினான். அதற்குப் பிறகு அவர்களுக்கு திருமணம் நடந்து குழந்தை யும் பிறந்தது. போர் நடைபெறும் போது போராளிகளாகவும் காட்டிக்கொடுப்பவர் களாலும் இருந்தவர்கள் அகதிகளாகவும் ஆகிப்போனார்கள்.  சூழ்நிலை மனிதன் வாழ்வை நிர்ணயிக்கிறது. விருப்பு  வெறுப்பற்ற சமூகமாக வாழவே மனிதர்கள் விரும்பு கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற கதைகள் உதாரணம். அப்படிப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு இது போன்ற புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.