tamilnadu

img

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 23 பேர் பணிநீக்கத்தை ரத்து செய்ய கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 23 பேர் பணிநீக்கத்தை ரத்து செய்ய கோரிக்கை

மதுரை, செப்.19- மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த 23 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தூய்மைப் பணியாளர்கள் வெள்ளியன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், அவர் லேண்ட் ஒப்பந்த நிறுவனம் மாநகராட்சியில் இருந்து வெளியேற வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட 23 பேரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், கடந்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என கோரினர். அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகள், “திங்கட்கிழமைக்குள் பணி நீக்கம் ரத்து செய்யப்படாவிட்டால், மீண்டும் போராட்டம் தொடங்கப்படும்” என எச்சரித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ம.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: “தூய்மைப் பணியாளர்களை அவர்லேண்ட் நிறுவனம் தொடர்ந்து அவமரியாதையுடன் நடத்தி வருகிறது. சம்பளம் குறைப்பது, காரணமின்றி பணி நீக்கம் செய்வது, தொழிற்சங்கங்களை மதிக்காதது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அமைதியாக இருப்பது கண்டிக்கத்தக்கது. ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார். இந்த போராட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், மாநில நிர்வாகி ந.முத்து மற்றும், எல்பிஎப், எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.