tamilnadu

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்! அனைத்து தொழிற்சங்கம் அறைகூவல்

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்! அனைத்து தொழிற்சங்கம் அறைகூவல்

தஞ்சாவூர், ஜூலை 2 -  ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  இந்த வேலை நிறுத்தத்தை தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வதற்கு அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை மணிமண்டபம் மின்வாரிய தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் கே.ராஜன் தலைமை வகித்தார்.  சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஹெச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் ஏ.சின்னப்பன், யூடியூசி மாவட்டச் செயலாளர் த.மோகன்தாஸ் ஆகியோர் பேசினர்.  தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய நான்கு மையங்களில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஜூலை 9 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் வந்து மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  போராட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்கள், அனைத்து ஆட்டோ தொழில்சங்கங்கள், அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.  கூட்டத்தில் சிஐடியு சார்பில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்ட தலைவர் எஸ்.செல்வராஜ், அரசு விரைவு போக்குவரத்து சங்க தலைவர் சா.செங்குட்டுவன், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சாய் சித்ரா, மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை மாவட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ், தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், பிரகாஷ், ஏஐடியுசி சார்பில் மாவட்டத் தலைவர் வெ.சேவையா, பொருளாளர் தி.கோவிந்தராஜன்,  போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், மின்வாரிய சங்க மாநில துணைத் தலைவர் பொன்.தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.