tamilnadu

img

புல் புல் பறவையை தேசியப் பறவை ஆக்குவோம் - - ப.முருகன்

கிருஷ்ணப் பருந்து என்றோம்
விஷ்ணுவின் கருடவாகனம் என்று கீழிருந்து அண்ணாந்து பார்த்து
கண்ணத்தில் போட்டுக் கொண்டோம்

இப்போது புல்புல் பறவையில்
பயணம் செய்ததாய் கதைப்பதை
ஏற்க மறுக்கவா போகிறோம்.
எவ்வளவு எவ்வளவோ கேட்டுள்ளோம்
இதை மட்டும் கேட்காமலிருப்போமோ?

குழந்தையின் தலையை வெட்டிய 
தந்தையை தாங்கிக் கொண்டோம்
வெட்டிய கழுத்தில் யானையின் தலையை
பொருத்தியதையும் பொறுத்துக் கொண்டோம்
பிள்ளையாராய் வணங்கி நின்றோம்

பொறாமைத் தீயில் பொசுங்கி காந்தாரி
ஆத்திரத்தில் அடிவயிற்றில் குத்திக் கொண்டதால்
சிதைந்து வெளியேறிய சிசுப் பிண்டங்களை
சேகரித்து கலயத்தில் வைத்து கவுரவமாய்
நூறு குழந்தைகளாய் வளர்ந்தார்கள்
என்றதையும் ஏற்றுக் கொண்டோம்.

பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்து
பூமியின் மேலிருந்த கடலுக்குள் கொண்டு சென்று
அரக்கன் ஒளித்து வைத்ததை மீட்க 
அவதாரம் எடுத்து விஷ்ணு காத்ததாய்
கதைத்த கதையையும் ஒத்துக் கொண்டோம்.

குழந்தை கண்ணனை கொல்வதற்கு வந்து
படமெடுத்தாடிய விஷப்பாம்பின் 
படத்தின் மீதிலேயே நடனமாடிய
காளிங்க நர்த்தனக் கதையையும்
காது வலிக்காது கேட்டுக் கொண்டோம்

மாயம் செய்யும் மாயோன் மருகன் சிவகுமாரன்
நாரதன் தந்த மாம்பழம் பெறவே
மயிலேறி உலகை வலம்வந்த மாயத்தையும்
மனதில் வாங்கி வைத்துக் கொண்டோம்.

புஷ்பக விமானத்தில் இராவணன்
புண்ணியவதி சீதையைக் கவர்ந்து
இலங்கைக்கு கொண்டு சென்றதை
இதிகாசமாய் கொண்டாடிக்  கொண்டுதானிருக்கிறோம்.

இன்னும் எத்தனை எத்தனையோ
கற்பனைகளுக்கு செவிகொடுத்த எங்களுக்கு
இந்த புல்புல் பறவை சவாரியையா
எதிர்த்து ஐயம் கேட்கத் தோன்றும்?

ஒரு வலைத்தளவாசி தனது பக்கத்தில்
அந்த புல்புல் பறவை பொறுக்க மாட்டாமல்
தற்கொலை செய்து கொண்டதாய்
படத்துடன் விமர்சித்துள்ளதை
தேசவிரோதக் குற்றம் சுமத்தி
கம்பிஎண்ணவைத்து கதையை முடிப்போம்.

புல்புல் பறவையை தேசியப் பறவையாக்குவோம்
சாவுக்கஞ்சி உயிர்ப்பிச்சை கேட்ட
சாதுர்யத்தை வீரகாவியமாக்குவதில்
ஒருபோதும் பின்வாங்கோம் என்றொலிப்போம்! 

- ப.முருகன்

;