உலகில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் 6 ஆவது முறையாக இடம் பிடித்த கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர் கோவிந்தராஜன்
கும்பகோணம், செப். 29-
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர், உலகளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளை அடையாளம் காணும் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில் உலகம் முழுவதும் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல இந்தியாவிலிருந்து 3,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து அரசினர் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விலங்கியல் துறைப் பேராசிரியர் முனைவர் மா. கோவிந்தராஜன் 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தொடர்ந்து ஆறாவது முறையாக இடம் பெற்றுள்ளார்.
முனைவர் மா. கோவிந்தராஜன், நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயற்கை மருந்துகளை உருவாக்கி, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா மற்றும் ஜிகா போன்ற வைரஸ்களை பரப்பும் திசையனக் கொசுக்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். மேலும், அவரது ஆய்வுகள் விவசாயப் பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதோடு, மனித நோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்துகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவரது ஆராய்ச்சி 2020, 2021, 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றதுடன், தொடர்ந்து ஆறாவது முறையாக 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலிலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. முனைவர் மா. கோவிந்தராஜனுக்கு கல்லூரி முதல்வர். விலங்கியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
