நான் கற்றுக் கொண்ட பாசறையாக தீக்கதிர் இருந்தது. மொழி, எழுத்துப் பிழை, வாக்கிய அமைப்பு, மொழி பெயர்ப்பு, அரசியல் கருத்து என ஒவ்வொன்றையும் இதில் இருந்தே கற்றுக் கொண்டேன். அரசியல் கருத்துப் பிழை வரக்கூடாது என்று கவனமாக செயல்படும் பத்திரிகை தீக்கதிர். அதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. ஒரு காலத்தில் ஊடகங்கள் சமூகக் கருத்துக்களைச் சொல்லும் கருவியாக இருந்தன. தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் சார்பில் 287 பத்திரிகைகள் வந்துள்ளன. அவசர நிலைக் காலத்தில் பத்திரிகை தணிக்கை நடைமுறை இருந்தது. அதற்குப் பிறகு வி.சி. சுக்லா கூறியபோது, “நாங்கள் குனியத்தான் சொன்னோம், ஆனால் சில பத்திரிகைகள் தவழ்ந்து சென்றன” என்றார். இப்போது பல ஊடகங்கள் ஆட்சியாளர்களிடம் தவழ்ந்து சென்று காலில் விழுந்து கிடக்கின்றன. தற்போது முதலாளித்துவ ஊடகங்கள் புதிய பரிமாணம் பெற்றுள்ளன. ஊடக நெறியோடு நடத்தப்பட்ட குடும்ப ஊடக நிறுவனங்கள் இன்று பெரும் தொழில் நிறுவனங்களால் கைப்பற்றப்படுகின்றன. தமிழகத்தில் கல்வித் தந்தை என்று கட்டணக் கொள்ளை அடிப்பவர்கள், மணல் வியாபாரிகள் ஊடகங்களைத் தொடங்குகின்றனர். இந்திய அளவில் நியூஸ் 18 குழுவை ஒரு தொழில் குழுமம் வாங்கிவிட்டது. அதேபோல் ஓரளவு நடுநிலையோடு செயல்படும் என்டிடிவியை அதானி கைப்பற்றி இருக்கிறார். இன்று ஒரு ஆங்கில நாளிதழை உற்பத்தி செய்ய ரூ.40 செலவு ஆகிறது. அந்த விலைக்கு வாசகர் ஒரு நாளிதழை வாங்க முடியாது. விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம்தான் அது ஈடுகட்டப்படுகிறது. எனவே விளம்பரங்களும் பத்திரிகையின் கருத்து நிலைபாட்டை தீர்மானிக்கக்கூடியதாக உள்ளன. இன்றைய காலத்தில் அரசுக்கு எதிராக விமர்சிப்பது கடினமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் தீக்கதிர் நாளிதழ் அரசியல், தத்துவார்த்தரீதியாக எவ்வித சமரசமும் இல்லாமல் உறுதியோடு செயல்படுவது மிகப்பெரும் சாதனை.