tamilnadu

img

இந்தியாவின் பன்மொழி கலாச்சாரத்தை அழித்து இந்தியை திணிப்பதா?

கோவை, அக்.19– மாநில மொழிகளை அழிக்க இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் புதனன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிகுமார் முன்னிலை வகித்தார். இதில்,  இந்தியாவின் பன்மொழியை அழித்து இந்தி மொழியை ஒன்றிய அரசு  திணிப்பதை கைவிட வேண்டும். தமிழகத்தில் புற்றீசல் போல் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படுவதை தடுத்து தமிழக அரசே மாவட்டந்தோறும் அரசு சட்டக்கல்லூரிகளை துவங்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்கி வரும் உதவித் தொகையான ரூ.3 ஆயிரத்தை, ரூ.5 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  ஆர்ப்பாட்டத்தில், மூத்த வழக்கறிஞர்கள் மு.ஆனந்தன், ஞானபாரதி, அருள்மொழி, சிவஞானம், வெண்மணி, முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, கோபால்சங்கர், மாசேதுங் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

;