tamilnadu

img

சிபிஎம் அலுவலகத்தில் சாதிமறுப்புத் திருமணம்

சிபிஎம் அலுவலகத்தில் சாதிமறுப்புத் திருமணம்

மன்னார்குடி, ஆக. 28-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சாதிமறுப்பு திருமணத்தை கட்சியினர் நடத்தி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வருவாய் வட்டம் மாத்துரைச் சேர்ந்த ப.  தனிக்கோடி- விஜயா தம்பதியரின் மகன் சஞ்சய் குமாரும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வரம்பியம் கிராமத்தைச் சேர்ந்த வே. ரவி-சித்ரா தம்பதியரின் மகள் அமிர்தாவும் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்திருந்தனர்.  இவர்களில் சஞ்சய்குமார், புதுக்கோட்டையைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அமிர்தா, திருத்துறைப்பூண்டி வரம்பியம் கிராமத்தின் தலித் யுவதி. முதுகலை பட்டதாரி. சஞ்சய் குமாரின் பெற்றோர் உறவினர்கள் இத்திருமணத்திற்கு கடும் எதிர்ப்பாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்தனர். எனவே இவர்களிருவரும் திருமணம் செய்து கொள்வது என துணிந்து முடிவெடுத்தனர். இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கம்போல் தனது ஆதரவு கரத்தை நீட்டியது. அவர்களை பாதுகாப்பதெனவும் முடிவு செய்தது.  தமிழ்நாடு முழுவதும் சாதி ஆணவ படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில்தான் நேரில் சந்தித்து, ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட சிறப்புச் சட்டம் இயற்றி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.  இதனைத் தொடர்ந்து, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவாகவும், ஊக்குவிக்கும் வகையிலும், ஆணவ படுகொலைகளை ஒழித்துக் கட்டும் வகையிலும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள், காதல் மற்றும் சாதி மறுப்பு திருமணங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். அங்கே அத்திருமணங்களை  நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.  இதற்குப் பிறகுதான், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரத்தில் கட்சியின் நகர, ஒன்றிய அலுவலகத்தில் சஞ்சய்கு மாருக்கும்,  அமிர்தாவிற்கும், கட்சித் தலைவர்கள், மணமகள் வழி உறவினர்கள், நண்பர்கள் சூழ, சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.  இத்திருமண விழாவிற்கு கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.  முருகையன் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு  முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மணமக்களுக்கு மலர் மாலைகளை அளித்து, ஒருவருக்கொருவர் அணிவிக்கச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தார்.  திருமண நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றியக்குழு, நகரக்குழு செயலாளர்கள் டி.வி. காரல், கே. கோபு, விதொச ஒன்றியச் செயலாளர் சி. வீரசேகரன் உள்ளிட்ட இடைக்கமிட்டி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.