சென்னை, டிச. 3- வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள சுகாதாரத் துறை அமைச்சர், அரசு மருத்துவர்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு,தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: உலக தமிழ் நிறுவனம் (ஐக்கிய பேரரசு) சார்பில், கடந்த வாரம் லண்டன் 4ஆவது சர்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பிரிட்டன் பார்லிமென்ட் வளாக த்தில் நடந்தது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காகவும், கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்ட தற்காகவும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த தருணத்தில் சுகாதாரத்துறை அமைச்ச ருக்கு, 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து இன்னும் பல சாதனைகளை படைப்பதோடு, தமிழகத்தில் நம் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவார்கள் என நம்பு கிறோம். இருப்பினும் அமைச்சர் பதவியேற்ற 6 மாதங்களில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்கு, அரசு மருத்துவர்களின் பங்கு மிக அதிகம் என்பது அமைச்சருக்குத் தெரியும். சுகாதாரத் துறையில் உறுதுணையாக இருப்பதோடு, தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பது மருத்துவர்களுக்கு மிகுந்த வேதனையளி க்கிறது. எனவே தற்போது வாழ்நாள் சாதனை யாளர் விருது பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டு களில் ஊதியப்பட்டை நான்கை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு மருத்துவர்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.