tamilnadu

img

சகோதரனை இழந்த சோகத்தை என்னால் விவரிக்க இயலவில்லை! - பினராயி விஜயன்

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அது பெரும் வேதனையை உருவாக்கியுள்ளது. சகோதரனுக்கு இணையானது என்பதைவிட நாங்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் போன்று உறவு கொண்டாடினோம்.  இருவரும் ஒரே பாதையில் ஒற்றுமையுடன் நடந்தோம். உடல்நலம் பாதிக்கப்பட்டதன் வேதனைகள் தீவிரமாக இருந்த நாட்களிலும் அனைத்தையும்விடக் கட்சியைப்பற்றிய சிந்தனைகளை அதிகமாக மனதில் கொண்டு நடந்த தலைவராவார் தோழர் பாலகிருஷ்ணன். கட்சி, கட்சி எதிர்கொள்ளும் தாக்குதல்களை எவ்வாறு முறியடிப்பது, கட்சியை அனைத்துவிதத்திலும் எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது போன்ற சிந்தனையோட்டங்களே அவரது இறுதிக்காலத்தில் அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தவையாகும். தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை என்ற நிலைவந்தபோது கட்சிக்காக தான் வகித்த செயலாளர் பொறுப்பினைத் துறக்கத் தானாக முன்வந்ததோடு மட்டுமல்லாது தனது முடிவை கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதிலும் பிடிவாதமாக இருந்தார். 

நோய் தன்னை வாட்டியபோதிலும் சில நாட்களுக்கு முன்புவரை கட்சியின் அலுவலகமான ஏ.கே.ஜி.சென்டருக்கு வருகைதந்து கட்சிக்கூட்டங்களில் பங்கேற்று கொள்கை ரீதியாகவும் ஸ்தாபன ரீதியாகவும் கட்சியை வழிநடத்துவதற்குத் தலைமை தாங்கினார். உடல் ரீதியான கடும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் கட்சிக்காக தோழர் கோடியேரி தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஆரம்பம் முதலே அசாதாரண மனஉறுதியுடன் அவர் தனது நோயை எதிர்கொண்டார். ‘அழுது புலம்பினால் போதுமா; எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லையே’ என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தார். எந்தவொரு சவாலையும் மனஉறுதியுடன் எதிர்கொள்வதென்பது அவரது பழக்கமாகும். நோய் மற்றும் அரசியல் சவால்களை ஒரே மாதிரி நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட வாழ்க்கையாகும் அவரது வாழ்க்கை.

உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்த காலத்திலேயே கோடியேரி பாலகிருஷ்ணன் மாணவர் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அமைதி, மனஉறுதி, கொள்கைப்பற்று ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது ஆரம்பம் முதலே அவரது அரசியல் வாழ்க்கை. தலசேரி கலவரத்தின்போது மதநல்லிணக்கத்தைப் பேணிக்காக்க தன்னலமற்று சேவையாற்றிய கம்யூனிஸ்ட்டுகளின் முன்வரிசையில் பாலகிருஷ்ணனும் இருந்தார். 1973ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்திய மாணவர் சங்க வரலாற்றில் கடும் அடக்குமுறைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்ட காலமாக அது இருந்தது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் முற்றிலும் இல்லாத அந்த சாதகமற்ற சூழலிலும் கிராமங்கள் வரை சென்று ஒரு வலுவான இயக்கமாக இந்திய மாணவர் சங்கத்தைக் கட்டமைப்பதற்கு கோடியேரியின் தலைமையால் முடிந்தது. முற்போக்கு புரட்சிகர இயக்கத்திற்கு  மாணவர் இயக்கம் அளித்த விலைமதிப்புமிக்க கொடையாகும் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன்.

கட்சி விசயங்களில் கறார் மற்றும் தனித்துவத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை தோழர் பாலகிருஷ்ணன் அனைத்துக் காலங்களிலும் உயர்த்திப்பிடித்தார். ஸ்தாபன மற்றும் கட்சிக் கொள்கைசார்ந்த விசயங்களில் தனக்கே உரித்தான தனித்துவத்துடன் தலையிடவும் தோழர்களை சரியான பாதையில் வழிநடத்தவும் மாணவர் இயக்கத்தில் செயல்பட்ட காலத்திலேயே அவரால் முடிந்தது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது உடனடியாக தலசேரியில் கோடியேரி தலைமையில் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. கைது செய்யப்பட்ட அவர் லாக்கப்பில் மிகக் கொடூரமான தாக்குதலை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் கைது செய்யப்பட்டோம். கண்ணூர் மத்திய சிறையின் 8ஆம் எண் அறையின் அடுத்தடுத்த சிமெண்ட் கட்டிலில் நாங்கள் படுத்திருந்தோம். நான் போலீஸ் தாக்குதலில் மிகவும் நிலைகுலைந்து போயிருந்தேன். அந்த நிலையில் ஒரு சகோதரனைப் போல் பாலகிருஷ்ணன் எனக்கு உதவினார். தோழர்களுக்கிடையேயான ஆழமான உறவையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்திய அனுபவமாக இருந்தது அது. இம்பிச்சிபாவா, வி.வி.தட்சிணாமூர்த்தி, எம்.பி.வீரேந்திர குமார், பாபக்கி தங்கல் ஆகியோரும் அன்று எங்களுடன் சிறையிலிருந்தார்கள். சிறையிலிருந்த நாட்களை படிப்பதற்கான நாட்களாகவும் தோழர் கோடியேரி மாற்றினார்.

ஈடு இணையற்ற தலைவரான தோழர் சி.எச்.கணாரன் பிறந்த ஊரிலிருந்து கம்யூனிஸ்ட் பேரியக்கத்திற்கு கிடைத்த விலைமதிப்பற்ற தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் என்று எவ்வித ஐயமுமின்றிக் கூறலாம். அவரது தன்னலமற்ற செயல்பாடுதான் மிகக் குறைந்த வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூ ர் மாவட்டச் செயலாளராக அவரை உயர்த்தியது. 1990-95 காலகட்டத்தில் கட்சியின் கண்ணூ ர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது கோடியேரி பாலகிருஷ்ணன் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு கட்சியை வழிநடத்தினார். கூத்துப்பறம்பு துப்பாக்கிச்சூடு, கே.வி.சுதீஷ் படுகொலை போன்ற காரணங்களால் அசாதாரண சூழல் நிலவிய அந்தக்காலத்தில் அச்சுறுத்தல் மற்றும் சவால்களை எதிர்கொண்டு கட்சியை வலுவாக நிலைநிறுத்துவதற்கு செயலாளர் என்ற முறையில் கோடியேரி பாலகிருஷ்ணன் தலைமையேற்று வகித்த பங்களிப்பு முக்கியமாக எடுத்துக் கூறத்தக்கதாகும்.  கட்சியின் மாநில செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குறுகிய காலத்திலேயே மாநிலம் முழுவதிலுமுள்ள தோழர்களின் அன்பைப் பெற்றவராக விளங்கினார் கோடியேரி பாலகிருஷ்ணன். ஸ்தாபனம், சட்டமன்றம், அமைச்சரவை என அனைத்து நிலைகளிலும் தனது பணியை மிகச் சிறப்பாக செயல்படுத்தியவராவார் அவர். கட்சி பல்வேறு சவால்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்ட காலகட்டத்தில்தான் மாநில செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துவந்தார். அதுபோன்ற காலகட்டங்களில் மிக அமைதியான முறையில் பிரச்சனைகளை எதிர்கொண்டு அதற்கான தீர்வு காண்பதில் திறம்பட செயலாற்றினார். கட்சியின் எதிரிகளிடம் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்ட போதிலும் தேவையான நேரங்களில் அன்பை வெளிப்படுத்தவும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவும் அவர் தவறியதில்லை. கட்சியின் நிலைப்பாடுகளிலிருந்து அணுவளவும் வேறுபடுவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

சிபிஐ(எம்) தலைமையிலான இடது  ஜனநாயக முன்னணி அரசு வரலாறு படைத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை சாத்தியமாக்கும் விதமாக கட்சி முழுவதையும் முழு ஈடுபாட்டுடன் செயலாற்ற வைப்பதில் கோடியேரி பாலகிருஷ்ணன் பெரும்பங்காற்றினார். அவரது வாழ்க்கை போராட்டங்களின் தீநாளங்களைக் கடந்து கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்ததாகும். மாணவப் பருவம் முதல் எண்ணிலடங்காகப் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள், லாக்கப் தாக்குதல்கள், சிறைவாசம் என அநேகம். கட்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான தலைவர்களின் வரிசையில் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு உரிய இடமும் இருக்கும். சஞ்சலமில்லாத தத்துவார்த்த ஞானம், சமரசமற்ற கட்சி நிலைப்பாடு, கூட்டு நடவடிக்கைகளில் காட்டும் மனஉறுதி, முடுக்கிவிடப்பட்ட இயந்திரம்போல் கட்சி இயக்கத்தை எப்பொழுதும் தயார்படுத்துவதில் அதீத கவனம் ஆகியவை புதிய தலைமுறையினர்க்கு முன்மாதிரியாகும் விதத்தில் கோடியேரி திகழ்ந்தார்.

ஒன்றுபட்டு செயல்பட்டவர்கள் நாங்கள். சகோதரனை இழந்த சோகத்தை விவரிக்க இயலாது. நோயினால் பாதிக்கப்பட்ட போது சாத்தியமான அனைத்து சிகிச்சையையும் வழங்கிட நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால் சிகிச்சை பலனளிக்காத விதத்தில் நோய் அவரை ஆட்கொண்டுவிட்டது. நடக்கக்கூடாது என நாங்கள் அதிகம் விரும்பியது திடீரென நடந்துவிட்டது. ஆனால் தோழர் கோடியேரி மறையமாட்டார். நமது மற்றும் நமது நாட்டு மக்களின் மனங்களில் என்றும் அவர் வாழ்வார்.

- தமிழாக்கம்: மு.சங்கரநயினார்

;