பொதுவுடமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் என்ற சங்கநாதத்துடன் உதித்தது தீக்கதிர் ஏடு. 60 ஆண்டுகள் பீடு நடை போட்டு வைரவிழாவையும் நிறைவு செய்துவிட்டது. ‘யுகப்புரட்சி’ நடத்தி புத்துலகம் படைத்தது மார்க்சிய சித்தாந்தம். பாசிச சக்திகளை வீழ்த்தி அதன் கொத்தளத்திலேயே செங்கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டது செஞ்சேனை. மனிதகுலத்தை பாதுகாத்த செங்கொடி இயக்கம் இன்றும் உலகெங்கும் ஏகாதி பத்திய சதிகார சக்திகளுக்கு எதிராகப் போராடி வெற்றிகளை குவித்து வருகிறது. அடக்குமுறை, அவசர கால தணிக்கை, அச்சுறுத்தல், அவதூறு வழக்கு, தீ வைப்பு என எண்ணிலடங்கா இடர்பாடுகளை தீக்கதிர் சந்தித்துள்ளது. மனிதகுலத்தின் கலைவடிவமாக ஒளிவீசும் பாட்டாளி வர்க்கப் பெரும்படை தீக்கதிர் ஏட்டை கண்ணின் கருவிழி போல பாதுகாத்து வருகிறது. நாட்டை அடிமைப்படுத்த கால்பதித்த கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முதன் முதலில் போரிட்ட வரலாற்றுப் பெருமை நெல்லை மண்ணுக்கு உண்டு. கட்டபொம்மன் காலத்திலிருந்து காந்தியின் காலம் வரை எண்ணற்ற தியாகச் சுடர்களின் ரத்தவெள்ளத்தில் பூத்த மகத்தான சுதந்திர நந்தவன பூமி இது. விடுதலைப் போராட்ட வேள்வியை வெட்கமின்றி வேடிக்கைப் பார்த்த கூட்டத்திடம் இன்று நாடு சிக்கிச் சீரழிந்து வருகிறது. நாட்டின் ஜனநாயக வாழ்வுக்கு பேராபத்து வந்துள்ளது. மக்களை ஒன்றுபடுத்திய காந்திய தேசமா? மக்களை பிளவுபடுத்தும் நாசகர மோடி தேசமா? இந்தக் கேள்வி நாடெங்கும் கம்பீரமாக எதிரொலிக்கிறது. மக்களை கூறுபோடும் சனாதன சக்திகளை காலந்தோறும் முறியடித்த தனிப்பெருமை தமிழகத்திற்கு உண்டு. இந்திய குடியரசின் மாண்புகளை பாதுகாக்கும் போர்க்களத்தில் தீக்கதிரின் பங்களிப்பு குன்றின் மேலிட்ட விளக்காய் என்றும் பிரகாசிக்கும்.