மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான என்.நன்மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மதுரை மாவட்டம் ராஜாக்கூரில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் மானிய விலையில் வீடு ஒதுக்கப்படுவதாக அறிந்து எனது மனைவி பெயரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம் . ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடு ஒதுக்கீடு கோருவதற்கான உரிமை உண்டு என்ற அடிப்படையிலேயே இந்த மனுவினை கொடுத்தோம் . ஆனால் , இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தனிப்பட்ட முறையில் எனக்கு உதவ முன்வந்துள்ளனர் . அனைவருக்கும் என்னுடைய நெகிழ்வு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . என் மீது அனைவரும் கொண்டுள்ள அன்பிற்கு என்றென்றும் நன்றியுடையவன் ஆவேன் . நான் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறேன் . கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்களில் அகில இந்திய, மாநில பொறுப்புக்களில் பணியாற்றியுள்ளேன் . தற்போதும் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறேன் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பினை தந்தது. அந்த பொறுப்பை செம்மையாக மக்கள் ஆதரவுடனும். கட்சியின் வழிகாட்டுதலுடனும் நிறைவேற்றியுள்ளேன். கட்சியின் முழுநேர ஊழியர் என்ற முறையில் என்னையும் , எனது குடும்பத்தையும் கட்சி தொடர்ந்து பாதுகாத்து வருகிறது . இந்த நிலையில் , தனிப்பட்ட முறையில் எனக்கு உதவுவதாக பலரும் தெரிவிப்பது நெகிழ்ச்சியளித்த போதும், இத்தகைய தனிப்பட்ட உதவிகளுக்கான அவசியம் எழவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.