கியூப ஆதரவுக் குழு சார்பில் தில்லியில் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு கால்பந்து போட்டிகள்
சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, கியூப தூதர் ஜுயன் கார்லோஸ் தொடங்கி வைத்தனர்
புதுதில்லி, ஆக. 3- கியூப ஆதரவுக் குழு சார்பில் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு கால்பந்து போட்டி தில்லி பீதம்புரா விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கின. கியூப ஆதரவையும், சர்வதேச நட்பை வலுவாக பறைசாற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு கால்பந்து போட்டியை இந்தியாவுக்கான கியூப தூதர் ஜுயன் கார்லோஸ் மர்ஸன் தொடங்கி வைத்தார். கியூப தூதரகத்தின் முதன்மை செயலாளர் மைக்கி டியாஸ் பெரேஸ் உள்ளிட்ட அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆர்.அருண் குமார், மத்தியக்குழு உறுப்பினர் அனுராக் சக்சேனா, கியூப ஆதரவுக்கான தேசிய கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சுபீர் பானர்ஜி மற்றும் அமன், சூரஜ், ஆய்சே கோஷ், ரிக்தா உள்ளிட்டோர் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர். மத்தியக்குழு வாழ்த்து பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு கால்பந்து போட்டிகள் தொடக்க விழா தொடர்பாக சிபிஎம் மத்தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”தில்லி என்சிஆர் மற்றும் ராஜஸ்தான் முழுவதும் இருந்து வந்த 32 இளம் வயது அணிகள் பங்கேற்று இதுவரை 4 தகுதிப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த போட்டிகள் பிடல் காஸ்ட்ரோவின் கனவான “விளையாட்டு மூலம் ஒற்றுமை, ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வு மற்றும் எதிர்ப்பு-நம்பிக்கையின் பாலங்களை கட்டும் உலகம்” என்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தடைகள் இருந்தும், கியூபா இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகள் அனைவருக்கும் வழங்கி வருகிறது. அதாவது அடிபணிவதற்கு பதிலாக ஒற்றுமையை தேர்ந்தெடுக்கிறது. இந்த போட்டி சமத்துவம், ஒற்றுமை மற்றும் சர்வதேச ஒற்றுமை கொண்டாட்டமாக அமையட்டும்” என அதில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.