tamilnadu

img

பெண் தொழிலாளி - எம்.மகாலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

கடந்த 10 ஆண்டுகளில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. அதிலும் பெண்கள் அதிகளவில் நவீன உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்ப துறையில் மட்டுமல்ல மலிவு உழைப்பிற்காக அனைத்து தொழில்களிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக நிரந்தரமற்ற பணிகளிலும், மரியாதைக்குறைவான பணிகள் என்ற வகைகளிலும் பெண்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. எந்த வித பாதுகாப்பும் அற்றவர்களாக பெண்கள் உள்ளனர். இரவு நேர வேலை நேரங்களில் சோர்வு தெரியாமல் இருக்க என்ற பெயரில் ஆபாசமான பாடல் இசை பணியிடங்களில் ஒலிக்க செய்யப்படுகிறது. கடுமையான விலைவாசி உயர்வு பாதிப்பு குடும்பத்தை நடத்த இயலாத சூழல் என பலமுனை தாக்குதல்கள் பெண்களுக்கு உள்ளது. 

விவசாய வீழ்ச்சி நகர்புறத்தை நோக்கி கட்டுமான தொழிலுக்குள் பெண்கள் கொத்து கொத்தாக கொண்டுவந்து சேர்க்கிறது. டாஸ்மாக் சீரழிவு, குடித்துவிட்டு வரும் ஆண்களால் பாதிப்பு, கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என பெண்கள் உள்ளனர். 

உழைப்புச் சுரண்டல்

பஞ்சாலைகளில் அதிக உழைப்பை சுரண்டுவது, குறைந்த கூலியில் ‘ ஸ்கீம் வொர்க்கர்ஸ் “ என்ற பெயரில் பெண்களை அமர்த்துவது. ஷிப்டு என்ற பெயரில் வேலை வாங்குவது, உடல்நலக்குறைவு ஏற்படும் பெண் ஷிப்டுக்கு மீறி வேலை செய்யவில்லை என்றால் அடித்து துன்புறுத்துவது என்ற நிலை உள்ளது. மேலும் பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகமாக்கியிருப்பது மட்டுமல்ல; பெண்களை போதை பொருளாக கருதும் ஆணாதிக்க சிந்தனையை பயன்படுத்திக் கொண்டு நுகர்வு பண்டமாக பெண் தாக்கப்படுகிறாள். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிடங்களில் சக தொழிலாளர்கள் மேல் அதிகாரிகள் ஆகியோரின் பாலியல் வக்கி ரங்கள், அவமதிப்புகளை அன்றாடம் சந்திக்க வேண்டிய நெருக்கடி தொடர்கிறது. அத்தக் கூலிகளாய் அன்றாடம் காய்ச்சிகளாய் கிடைத்த வேலை, சொற்ப கூலியில் வாழும் பெண்களின் நிலை உணவு இல்லையேல் குடும்பத்துடன் பட்டினி என்பதாகும்.

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் விவசாயம், கட்டுமானம், பட்டாசு, அச்சு, தீப்பெட்டி, தையல், கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை, சாலையோர வியாபாரம் என பல தொழில்களில் பல்வேறு கோரிக்கைகளில் மக்களை திரட்டி போராடி சில உரிமைகளை பெற்றிருக்கிறோம். பட்டாசு விபத்திலே மரணித்த நடுச்சூரங்குடியில் ஒரே சமூகத்தை சார்ந்த தொழிலாளர்கள் 9 பேர். ஆறுதல் சொல்லக்கூட முடியாத துயரம் அவர்களுக்கான நிவாரணத்தொகைக்கான காசோலை, வங்கியிலிருந்து செல்லாத காசோலை என திரும்பியது. பதறிப் போன 9 குடும்பத்தை சார்ந்தவர்களும் தவித்தனர். கவலைப்படாதீர்கள், செங்கொடி இயக்கம் இருக்கிறது என அவர்களை தேற்றி கட்சியின் சார்பில் புகாராக பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், வலைதளங்கள் என மக்கள் மத்தியிலும், அரசுக்கும் கவனப்படுத்தியதின் விளைவாக அவர்களுக்கு பணம் கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தது. அதுமட்டுமல்ல, வாரிசுகளுக்கு அரசுவேலையும் பெற்றுத் தர முடிந்தது.

‘மக்கள் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கூடாது என இராஜபாளையம், மேட்ட மலை உட்பட்ட பல பகுதிகளில் மக்களை திரட்டி நடத்திய போராட்டம் கடைகளை அப்புறப்படுத்தியது மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தின் வெற்றி. சிஏஏக்கு எதிரான போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய மகத்தான போராட்டம். அதில் குறிப்பாக இராஜபாளையம் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் கூடி கருத்து விவாதம் நடத்தினர் சகோதரிகள். மோடி அரசு இருக்கும் வரை தினம், தினம் செத்துட்டு இருக்கோம்; மக்கள் விரோத அரசை மாற்ற அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்று உரத்த குரல் அங்கே எழுப்பி எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; அது உங்களால்தான் முடியும் என்றும் பெருங்குரல் ஒலித்தது. வீடற்ற மக்களுக்கு குடிமனையும், பட்டா இல்லாமல் குடிமனை வைத்திருப்ப வர்களுக்கு வீட்டுமனைபட்டா, முதியோர் பென்சன் கேட்டு ஸ்ரீவியில் நடத்திய மக்கள் சந்திப்பு, அதற்கான முற்றுகை போராட்டம், தொடர் தலையீடு கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு நம்பிக்கையூட்டும் கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி பரிணமித்திருக்கிறது.
 

;