tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

ஜெயங்கொண்டம்  க.சொ.க. பாலிடெக்னிக்  கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர், ஆக. 12-  அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.  தற்போது ஆக.18 (திங்கட்கிழமை) அன்று ஜெயங்கொண்டம், க.சொ.க. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள், 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 45 வரையிலான பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும், ஐடிஐ, டிப்ளமோ, வேளாண்மை மற்றும் படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

மூவர் மீது குண்டர் சட்டம் 

புதுக்கோட்டை, ஆக. 12-  புதுக்கோட்டையில், பெண் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது, குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி தவமணி(52) என்பவரை, கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி நரிமேடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பூபதி (30), மணி (27), கார்த்திகேயன் (21) ஆகியோர் கொலை செய்ய முயன்றதாக திருக்கோகர்ணம் காவல் நிலைய காவல்துறையினரால் வழக்கு தொடரப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையின்பேரில், மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் மு. அருணா ஞாயிற்றுக்கிழமை உத்தரவி்ட்டார். அதன்பேரில் மூவரும் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.