சிக்னல், வேகத்தடை, விபத்துப் பகுதி\ அறிவிப்பு பலகை அமைத்து விபத்துகளை தடுக்க வலியுறுத்தல்
சிக்னல், வேகத்தடை, விபத்துப் பகுதி\
திருச்சிராப்பள்ளி, ஜூலை 18- திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. அதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். முதலில் வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் 2025-26 ஆம் ஆண்டிற்கான திட்டக் கையேட்டை ஆட்சியர் சரவணன் வெளியிட, விவசாய சங்க பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். குறைதீர் கூட்டத்தில், அகிலஇந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தெய்வநீதி பேசுகையில், “திருச்சி புறநகர் மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் துவாக்குடி முதல், பஞ்சப்பூர் செல்லும் சுற்று வட்டச் சாலை, திருவெறும்பூர் முதல் புதுக்கோட்டை கீரனூர் செல்லும் சாலை கடந்து செல்லும், (சூரியூர் அருகே) தார் சாலையாகும். இந்த சாலை தற்போது அதிக போக்குவரத்து உள்ள சாலையாக உள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் - திருச்சி மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூர் - திருச்சி விமான நிலையம் செல்கின்ற சாலையாக உள்ளது. இச்சாலை, பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இரண்டு ரோடுகளும் சந்திக்கின்ற நால் ரோட்டில் நிகழ்ந்த விபத்துக்களில் சிக்கி 6-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து கை கால்களை இழந்துள்ளனர். வாகனங்களும் சேதமடைந்துள்ளன. எனவே அப்பகுதியில் நடக்கின்ற விபத்துகளில் உயிர் பலிகளை தடுக்க மாவட்ட ஆட்சியர், காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர், நெடுஞ்சாலை துறை, அதிகாரிகள் ஆகியோர், நேரடியாக இடத்தை ஆய்வு செய்து, தவிர்க்க, விபத்துப் பகுதி என்கிற அறிவிப்பு பலகை, சிக்னல், வேகத்தடை ஆகியவைற்றை அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.