கல்விதான் அனைவருக்கும் பக்க பலமாக இருக்கும்! ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்வில் நர்த்தகி நடராஜ் பேச்சு
பெரம்பலூர், செப்.10 - படிப்பு ஒன்றுதான் அனைவருக்கும் பக்க பலமாக இருக்கும் என்று முனைவர் நர்த்தகி நடராஜ் தெரிவித்தார். பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர். நர்த்தகி நடராஜ் ‘கலை வெல்லும்’ என்ற தலைப்பில் பேசியதாவது: மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மானிடர்களும், ஒவ்வொரு உயிர்களும், தங்களது சிறப்பினை உய்விக்க வேண்டி எடுத்துக் கொள்ளும் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ள அமைந்த ஒரு மிகப்பெரிய தளம் ஆகும். ஒவ்வொரு இடங்களிலும் எனக்கு ஊன்றுகோலாக இருந்தது கல்விதான். கல்வியின் மூலமே என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்பது வெறும் வாய்மொழி அல்ல. தற்போது கீழடி, கொற்கை, வெம்பக்கோட்டை போன்ற அகழாய்வு கண்டுபிடிப்புகள் தமிழில் அடையாளங்களாக உள்ளன. இனிமேல் வரலாற்றில் தமிழன்தான் முதலிடத்தில் இருப்பான். தமிழ் நாகரிகம் தான் முதலிடத்தில் இருக்கும். உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை கற்றுக் கொண்டீர்கள் என்றால் உங்களை நீங்களே அளவிட்டுக் கொள்ள முடியும். தமிழர்களின் தொன்மையினை, நாகரிகத்தை, பண்பாட்டை தெரிந்து கொள்ளுங்கள், புத்தகங்களை நிறைய படியுங்கள். படிப்பு ஒன்றுதான் அனைவருக்கும் பக்க பலமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
