tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றி 70 குடும்பங்களின்  பொதுப் பாதையை மீட்க செப்.3-இல் சிபிஎம் போராட்டம்

அரியலூர், ஆக. 18-  அரியலூரில் வாரச்சந்தை பின்புறம் 70 குடும்பங்களின் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுப்பாதையை மீட்கும் போராட்டத்தை செப்டம்பர் 3 ஆம் தேதி நடத்தப் போவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.         அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளருமான ஐ.வி.நாகராஜன் ஓராண்டு சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வெங்கடாசலம் எ.கந்தசாமி, டி.அம்பிகா, வி.பரமசிவம், துரை அருணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  கூட்டத்தில், அரியலூர் வாரச்சந்தைக்கு பின்புறம் உள்ள சுமார் 70 குடும்பங்களுக்குச் சொந்தமான 603 1C, 603 1D என்ற சர்வே எண்ணில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்துள்ளது. மேலும், நேரடியாக மாவட்ட ஆட்சியரிடமும், கோட்டாட்சியரிடமும், மாவட்ட காவல் துறையிடமும் புகார் செய்தும், முறையீடு செய்தும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழுவின் சார்பில் செப்.3 ஆம் தேதி கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப் பாதையை மீட்டு எடுக்கும் போராட்டத்தை மாவட்ட செயற்குழு முடிவு செய்துள்ளது.

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி 

பாபநாசம், ஆக. 18-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் மரக்கன்றை நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு அரசு பொதுத் தேர்வில் 10, 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசினை முன்னாள் ஆசிரியர் இளங்கோவன் வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கவுன்சிலர் பாலகிருஷ்ணன், கல்வியாளர் செங்குட்டுவன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.