tamilnadu

img

கொடிக் கம்பங்களை அகற்றிய புதுக்கோட்டை மாநகராட்சியைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்

கொடிக் கம்பங்களை அகற்றிய புதுக்கோட்டை  மாநகராட்சியைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்

நிலுவையில் இருக்கும் வழக்கு '
புதுக்கோட்டை, ஜுன் 29-  நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றிய புதுக்கோட்டை மாநகராட்சியைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டன. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தியதோடு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கை சரிதானா என்று விசாரிக்க இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்றம் இப்படி உத்தரவிட்ட நிலையில், புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம், நீதிமன்றத்தின் கருத்தை மதிக்காமல் வேக வேகமாக கொடிக்கம்பங்களை அகற்றி வருகிறது.  புதுக்கோட்டை மாநகராட்சியின் இந்த எதேச்சதிகராப் போக்கைக் கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார்.  போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், மாநகரக் குழு உறுப்பினர்கள் ஆர்.சோலையப்பன், சி.அடைக்கலசாமி,  பழ.குமரேசன், மா.கணேஷ், மு.சித்ரா, சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ரகுமான், மாதர் சங்க மாநகரப் பொருளாளர் வடிவுக்கரசி, வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் தீபக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய கணேஷ் நகர் காவல் துறை அதிகாரிகள், திங்களன்று (30.06.2025) நகராட்சி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.