tamilnadu

img

பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிபிஎம் தர்ணா

பெரம்பலூர் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டு சிபிஎம் தர்ணா

பெரம்பலூர், ஏப்.24-  சட்ட விரோதமாக அரசு மதுபானம் விற்றவரை கைது செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.  பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சியை சேர்ந்த எம்.ஜி.ஆர் நகரில் சட்டத்திற்கு புறம்பாக டாஸ்மாக் மதுபானம் சந்து கடையில் அதே கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் விற்பனை செய்து வருகிறார். இதன் காரணமாக அனைத்து நேரங்களிலும் அரசு மதுபானம் கிடைப்பதால் அப்பகுதி மக்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றது என தெரிவித்து பெரம்பலூர் காவல்  நிலையத்தில் எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், பெரம்பலூர் காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்யும் காமராஜை கைது செய்யாமல், புகார் அளித்தவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் பெரியசாமி தலைமையில், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, புகார் அளித்தவர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என்றும், மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் காமராஜை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், கனகராஜ் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.