tamilnadu

img

முன்னுதாரண போராளி தோழர் ஷாஜாதி

முன்னுதாரண போராளி  தோழர் ஷாஜாதி

தோழர் ஷாஜாதி வீரமங்கையின் நூற்றாண்டு விழா

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் பெண்கள் மிக மோசமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியிருந்த காலம் ஆகும். ஆணாதிக்கக் கொடுமைகளால் பெண்கள் அனுதினமும் வெந்து வேதனையில் மூழ்கியிருந்தனர். குழந்தை திருமணம், வரதட்சனை கொடுமை, கல்வியறிவின்மை, குழந்தை பருவத்திலேயே தாய்மை, உடன்கட்டை கொடுமை, குடும்ப வன்முறைகள் உள்ளிட்ட எண்ணற்ற கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. இந்த சூழ்நிலையில் விடுதலைப் போராட்ட அலை கொந்தளித்து எழுந்தபோது எண்ணற்ற பெண்கள் சமூகத் தடைகளை கடந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் அடக்குமுறைகளையும் எதிர்த்து உறுதிமிக்க போராட்டத்தில் சிறை, சித்ரவதைகள், உயிர்ப்பலி போன்ற எண்ணற்ற தியாகங்களை மேற்கொண்டனர். இப்பின்புலத்தில் தோழர் ஷாஜாதி ரயில்வே போராட்டத்தின் விளைவாக மக்கள் இயக்கங்களில் கலந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கடைசிவரை உறுதிமிக்க போராளியாக திகழ்ந்தவர். தோழர் ஷாஜாதி விழுப்புரத்தைச் சார்ந்த சையத் முகமது அலி - காஸ்தூன்பீ ஆகியோரது மகளாகப் பிறந்தார். சையது முகமது விருத்தாசலத்தில் ரயில்வேயில் பணியாற்றினார். இவரது மகன்கள் சையத் முகமது இன்ஜின் ஓட்டுநராகவும், இளைய புதல்வர் சையத் இப்ராஹிம் பயர்மேனாகவும் ரயில்வேயில் பணியாற்றினர். ஷாஜாதியின் இளைய சகோதரர் சையத் இஸ்மாயில் விழுப்புரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். விருத்தாசலத்தில் ரயில்வே தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர் சையத் முகமது. அவருடைய புதல்வர்களும் ரயில்வே சங்கத்தில் முக்கிய பங்காற்றினர். பயமறியாத இளங்கன்று 1946 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நாடு தழுவிய ரயில்வே தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் நாடு முழுவதும் ரயில்வே தொழிலாளிகள் ரயிலை இயக்க மறுத்ததுடன் அடக்குமுறைகளை எதிர்த்து உறுதிமிக்க போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் விருத்தாசலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக வீடுவீடாக நிதி திரட்டுவது, பெண்களை திரட்டி ஆதரவு போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளில் 15 வயதே நிரம்பிய தோழர் ஷாஜாதி ஈடுபட்டார். இதனால், பல நேரங்களில் ரயில்வே அதிகாரிகளின் மிரட்டலுக்கும், காவல்துறையினரின் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளான போதும் உறுதியாக தனது பணியை மேற்கொண்டார். ரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் அடிக்கடி விருத்தாசலம் வரும்போது தோழர் சையத் முகமது வீட்டில் வந்து தங்கிச் சென்ற சூழலில்,

தோழர் ஷாஜாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். சுதந்திரத்துக்குப் பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது, அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு, தொழிற்சங்க முன்னணி ஊழியர்கள் கைது போன்ற பல கட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்ட பின்னணியில் ஏனையோர் தலைமறைவாக இருந்து பணியாற்றினார்கள். இரவோடு இரவாக மக்களை சந்தித்து ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்போராட்டத்திலும் தோழர் ஷாஜாதி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன் காரணமாக காவல்துறை இவரையும் தேடும் நிலை ஏற்பட்டது. மணியம்மையின் பாராட்டு சாதாரணமாக பெண்கள் அரசியலில் ஈடுபட தயக்கம் காட்டிய நிலையில், இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த தோழர் ஷாஜாதி இந்த தடைகளை தாண்டி கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். தோழர் மணியம்மை அவர்கள் சிறையில் ஷாஜாதியை சந்தித்தபோது “இந்த பெண் எந்த பின்னணியில் இருந்து இத்தனை ஆளுமை பெற்றாள். கோபத்தை காட்டுவது கூட பாவம் என்று கனத்த முகத்திரைக்குள் பெண்களை மறைத்து ஒரு சமயப் பின்னணியிலிருந்து வந்தவள். இவள் கண்களில் மின்னும் ஒளி தேசியமா? இல்லை. தேசியம் கலந்த சர்வதேசியம். அதையும் கடந்த மனிதாபிமானம் சார்ந்த ஒரு கொள்கை கொண்ட அமைப்பு தந்த ஆற்றல்” என குறிப்பிட்டார். இஸ்லாமியப் பெண்கள் அரசியலுக்கு வருவது அடிக்கடி காவல்துறையினரின் மிரட்டலுக்கு உள்ளாவது, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது போன்றவைகளை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமான பின்னணியில் தோழர் ஷாஜாதி நெஞ்சுறுதியோடு இவைகளை ஏற்றுக் கொண்டு கட்சி இயக்கத்தில் பங்காற்றினார். தலைமறைவு காலத்தில் புனைபெயர்களுடன் பணி 1949 ஆம் ஆண்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் தோழர் ஷாஜாதியும், தோழர் சி.கோவிந்தராஜனும் வளவனூரில் கைது செய்யப்பட்டனர். தலைமறைவு காலத்தில் தோழர் ஷாஜாதி, ரத்தினா, ராஜி என்ற பல புனைப் பெயர்களில் பணியாற்றினார். இருவரையும் கடலூர் சிறைக்கு அழைத்து சென்று தனித்தனியாக

அடித்து மிரட்டி விசாரித்தனர். காவல்துறையால் தோழர் ஷாஜாதி  கைது செய்யப்பட்டவுடன் அவருடைய சகோதரர்கள் அவரை சந்தித்து போராட்டத்திலிருந்து விலகிட பலமுறை வற்புறுத்தியுள்ளனர். இஸ்லாமிய மதத்திலே பிறந்த பெண் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் செல்வது குடும்ப கவுரவத்தை பாதித்து விடும் என மன்றாடி கேட்டுக் கொண்டனர். ஆனால், தோழர் ஷாஜாதி அதை செவி மடுக்க மறுத்துவிட்டார்.  சிறையிலும் போராட்டம் ஷாஜாதியை கடலூர் சப் ஜெயிலில் அடைத்தனர். அங்கு பெண்களுக்கு எந்த அடிப்படை வசதியும் வழங்கப்பட வில்லை. குளிப்பதற்கு மற்றும் கழிப்பிட வசதிகள் தனியாக கூட இல்லை.  இந்த கொடுமைகளை கண்டு பொறுக்க முடியாமல் தோழர் ஷாஜாதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 16 நாட்கள் உண்ணா விரதத்திற்கு பிறகே இவருடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. உடனடியாக இவர் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணலூர் மணியம்மையை சந்தித்த காட்சி தனது வாழ்க்கையில் மறக்க முடியாதது என பலமுறை குறிப்பிட்டுள்ளார். சிறைக்கு வந்த ஷாஜாதியை ஆரத்தழுவி வரவேற்றதுடன் அவரை விசாரித்தபோது ‘உண்ணாவிரதம் இருந்தேன் அம்மா, ரொம்ப இம்சைப் படுத்திட்டாங்க, அண்ணன் எல்லாம் வந்தாங்க, கெஞ்சினாங்க, அழுதாங்க, வாயில இட்லிய வச்சாங்க, ஆனால் நான் விடல’ எனக் கூறியதை கேட்டு, ‘ சபாஷ் ரொம்ப பெருமையாக இருக்கும்மா’ என மணியம்மை கூறியுள்ளார். பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் ஏற்பாட்டில் திருமணம் விருத்தாசலத்தில் தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில் தோழர் சி.கோவிந்தராஜன் - ஷாஜாதி ஆகியோர் காதல் வயப்பட்டு ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். மதம் மாறி திருமணம் செய்து கொள்வது அரிதான காலத்தில் இருவரும் மதம் மாறி திருமணம் செய்து கொள்ள முன்வந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வேலூர் சிறையில் இருவரும் அடைக்கப் பட்டிருந்த காலத்தில் தான் திருமண ஏற்பாட்டினை கட்சியின் தலைவர்களாக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் மேற்கொண்டனர். மதம் மாறி திருமணம் செய்து கொள்வதில் ஷாஜாதி குடும்பத்தில் பலரும் ஏற்க மறுத்துவிட்டனர். இருப்பினும், ஷாஜாதியின் இளைய சகோதரர் மட்டும் திருமணத்தை ஏற்றுக் கொண்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

1952ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி கடலூரில் எம்.கல்யாண சுந்தரம் தலைமையில் திருமணம் நடை பெற்றது. ஷாஜாதியின் குடும்பத்தினரும் பின்னர் ஏற்றுக் கொண்டு இறுதி வரை ஆதரவளித்தனர். அன்று முதல் அவர்கள் இருவரின் கடைசி மூச்சு இருக்கும்வரை இணை பிரியாத தம்பதிகளாக குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு இயக்கப் பணிகளில் இணைந்தே ஈடுபட்டு வந்தனர். தோழர் ஷாஜாதி ஆரம்ப காலம் முதலே அகில இந்திய மாதர் சங்க மாநாட்டில் பங்கேற்றதுடன் தொடர்ந்து மாதர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் அமைக்கப்பட்ட தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தில் தென்னார்க்காடு மாவட்டத்திலிருந்து தோழர் ஷாஜாதி கலந்து கொண்டார். அடுத்து நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் தோழர் ஷாஜாதி  மாதர் சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தமிழகம் முழுவதும் பெண்களை திரட்டு வது, பெண்ணுரிமை போராட்டங்களை நடத்துவது என முன்னணி தலைவர் களாக திகழ்ந்தவர்களில் தோழர் ஷாஜாதி குறிப்பிடத்தக்கவர். அஞ்சாத நெஞ்சுரம் நெல்லிக்குப்பத்தில் இ.ஐ.டி. பாரி தொழிற்சாலையில் தொழிற்சங்க தலைவராக தோழர் சி.கோவிந்தராஜன் பல்லாண்டு காலம் பணியாற்றியபோது ஆலை நிர்வாகம் கருங்காலிகளையும், குண்டர்களையும் ஏவி பலமுறை சிஐடியு அலுவலகத்தை தாக்குவது, சி.ஜி.யின் வீட்டை தாக்குவது போன்ற தாக்குதல்கள் நடந்தபோதெல்லாம் கட்சி தோழர்களோடு சேர்ந்து அவர்களை விரட்டி அடிக்கும் போராட்டத்தில் நேரடியாகவே ஆயுதங்களோடு தோழர் ஷாஜாதி களத்தில் இறங்கிவிடுவார். எத்தகைய தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் கிஞ்சித்தும் அஞ்சாத நெஞ்சுரம் படைத்தவர். ஒருமுறை, தொழிற்சங்க கூட்டம் முடிந்து இரவு 11 மணிக்கு தோழர் சி.ஜி வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போது வீட்டிற்கு அருகில் அவர் குண்டர்களால் கடுமையான தாக்கு தலுக்கு ஆளாக்கப்பட்டார். வயிறு கிழிக்கப்பட்டு குடல் சரிந்து கிடந்த தோழர் சி.ஜி.யை உடனடியாக அள்ளி எடுத்து அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பின்னரே தோழர் சி.ஜி மீண்டு வந்தார். சுர்ஜித் பாதுகாப்புப் பணியில்... 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டபோது நாடு முழுவதும் சீக்கிய மக்கள் வேட்டையாடப்பட்டதுடன் பல இடங்களில் எதிர்க்கட்சி அலுவல கங்கள், வீடுகள் தாக்கி சேதப்படுத்தப் பட்டன. நெல்லிக்குப்பத்தில் நடைபெற இருந்த தேர்தலில் தோழர் சி.கோவிந்தராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அன்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னைக்கு ரயில் மூலம் திரும்பிக் கொண்டிருந்தார்.  வழியிலேயே அவர் தாக்கப்படலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் தோழர் சி.ஜி.அவர்களுக்கு கட்சி தலைமையிலிருந்து தகவல் கொடுத்து, தோழர் சுர்ஜித் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து தங்க வைத்து அனுப்ப வேண்டுமென கோரப்பட்டது. உடனடியாக தோழர் சி.ஜி.கடலூர் ரயில் நிலையம் சென்று தோழர் சுர்ஜித் அவர்களை காரில் அழைத்து வந்து பாதுகாப்பாக தங்க வைத்தார். வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியபோதிலும் சுர்ஜித்தை பாதுகாப்பாக அழைத்து  வந்து தங்க வைத்தார். இந்நிலையில்,  நெல்லிக்குப்பத்தில் கட்சி அலுவலகம் மற்றும் தேர்தல் அலுவலகத்தின் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது. கட்சி தோழர்களை இரவோடு இரவாக திரட்டி தாக்குதல் தொடுத்த அவர்களை விரட்டியடித்து அலு வலகத்தை பாதுகாத்த பணியில் தோழர் ஷாஜாதியின் பங்கு குறிப்பிடத்தக்க தாகும். தலைவர்களை உருவாக்கியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்னார்க்காடு மாவட்டக்குழு உறுப்பினராகவும், பின்னர் கடலூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். தென்னார்க்காடு மாவட்டத்தில் பெண்களை திரட்டும் பணியில் முழுமையாக ஈடுபட்டார். மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டங்களில் பங்கெடுத்தார். தோழர் ஜான்சிராணி, லெட்சுமி போன்றவர்களை உருவாக்கி மாவட்டத்தில் பெண்கள் இயக்கம் வலுவான இயக்கமாக உருவானதில் முக்கிய பங்காற்றினார். தோழர் சி.கோவிந்தராஜன் சட்டமன்ற உறுப்பினராக, நகர்மன்ற தலைவராக பணியாற்றிய போதெல்லாம் அப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன் மக்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உதவி செய்து வந்தார். தனது இளமைப் பருவம் முதல் வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகள், கைது, சிறை என எல்லா அடக்கு முறைகளையும் கடந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பெண்கள் இயக்கத்தை முன்னெடுத்த தோழர் ஷாஜாதி முன்னுதாரணமான போராளியே.