நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்
திருநெல்வேலி, ஜூன் 30- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்குள் நுழையும் வாகனங்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. ரயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங் களுக்கும் கட்டணம் வசூலிப்பதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இதையடுத்து நெல்லை சந்திப்பு ரயில் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். அதன்பிறகு ரயில் நிலை யத்திற்குள் நுழையும் வாக னங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டாய வசூல் மீண்டும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சந்திப்பு ரயில் நிலையத்தில் நுழைந்தாலே வாகனங்களிடம் ரூ.20 கட்டாய வசூல் நடப்பதாக முதியவர் ஒருவர் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரயில் நிலையத்திற்குள் பார்க்கிங் கட்டணம் மட்டும்தான் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதோடு பயணிகளை இறக்கிவிட வரும் வாகனங்களுக்கு 6 நிமிடம் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 6 நிமிடத்திற்கு மேல் நிற்கும் வாகனங்களுக்கு. கட்டணம் வசூலிக்கப்படும்’ என்றார்.