tamilnadu

img

மனிதம் நோக்கி துரத்தும் சினிமாக்கள் - - மைதிலி கஸ்தூரிரங்கன்

என் தம்பி 
டைனோசர்களைத் துரத்துகிறான்
(44 உலக சினிமாக்களின் அறிமுக தொகுப்பு) ஆசிரியர்: எஸ்.இளங்கோ  
வெளியீடு : நம் பதிப்பகம்,  சென்னை. 
பக்கங்கள் 122, விலை ரூ.170

புத்தகம் வாசிப்பவர் ஒரே வாழ்நாளில் பல வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார். திரைப்படம் பார்ப்பவரோ ஒரே வாழ்நாளில் உலகின் திசை தோறும் பயணித்து விடுகிறார். பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வின் மீதான அச்சமும், நிலை யின்மை குறித்தான அதிர்வுமாக உலகம் உழன்று கொண்டிருக்க, கரையேற கலையின் நிழலே பலருக்கும் அடைக்கலமாக இருந்தது. அப்படியான பெருந்தொற்றுச் சூறாவளியில் புதுகை இளங்கோ அவர்கள் உலகெங்கும் நடை பெற்ற இணையவழி உலகத்திரைப்பட விழாக்களை தன் புகலிடமாக ஆக்கிக்கொண்ட திலோ, அப்போது அவர் பார்த்த படங்களில் தனித்துவமான நாற்பத்தி நான்கு படங்களை ஒரு புத்தகமாக தொகுத்திருப்பதிலோ வியப்பேதுமில்லை.  உலகத் திரைப்படங்களின்பால் மிகுந்த ஆதூரமும், நேசமும் கொண்ட இவர் இதற்கு  முன்னரே உலகத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகிவற்றை அறிமுகப்படுத்தி நூல்களாக வெளியிட்டுள்ளார்.

“திரையரங்கமே  உலகைத் துல்லியமாய் பிரதிபலிக்கும் கண்ணாடி” என்கிறார் நாடக ஆசிரியரும், நடிகையுமான யாஸ்மினா ரெஸா. அந்த பிரதிபலிப்பை மிகத் துல்லியமாக நமக்குக் கடத்தும் வகை யில் இருக்கிறது இந்த புத்தகம். மலையாளம், மைதிலி, மராத்தி, இந்தி என இந்திய மொழிகளிலிருந்து பின்லாந்து, சுவீடன், கிரீஸ் என தேச எல்லைகள் கடந்து நேசம் பேசுகிறது. மனிதம் பேசுகிறது. போரைப் பேசுகிறது. பெண்ணியம் பேசுகிறது. உலகெங்கும் பூர்வகுடி களை தன் அதிகாரத்தின் பற்சக்கரத்தில் இருத்திப்பார்க்கும் சர்வாதி காரத்தையும் மிகக்கூர்மையாகப் பேசுகிறது. மதவெறியின் கோரப்பற்களை, பொருளாதாரச் சுரண்டலின் வன்மத்தை என தீத்தகிக்கும் படங்களோடு, தென்றலென நெஞ்சம் வருடும் காதல் படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. கருப்பு  வெள்ளை காலம் தொட்டு கடந்த ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் அத்தனையும் நம் வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்த்துவிடவேண்டிய படங்களாக இருக்கின்றன. சந்தைப்பொருளாக பெண்கள் ஏலமிடப்படும் “விற்கப்பட்டவள்” எனும் அமெரிக்கப்படத்தின் அவலத்தோடு தொடங்குகிற புத்தகம் நெடுக சர்வதேச அரசியல். உலக அரங்கில் கவனமீர்த்த பில் ட்யூட்,  சஞ்சய் லீலா பன்சாலி, மேக்ஸ் லியோனிடா போன்ற இயக்குநர் களின் காத்திரமான படைப்புகளையும், அதில் நாம் கவனிக்கத்தவறிய நுணுக்கமான தகவல்களையும், திரைப்படத்தின் களத்தையும், களத்தின் வரலாறையும் சேர்த்தே வாசிக்க நேர்வது சப் டைட்டில் இல்லாமலே நம்மை  அந்த படங்களோடு ஒன்றிவிட தயார்படுத்து கிறது.

எந்த கட்டுரையும் மூன்று பக்கங்களுக்கு மேல் இல்லை. மிகச்சுருக்கமாக ஆனால் படம்  சுட்டும் இலக்கைத் தவறவிடாமல் நம்மைக் கட்டிப்போடுகிறது. “அவளுடைய வேலை” எனும் கிரீஸ் படமோ வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்தின் பெண் படும் அல்லல் எப்படி உலகெங்கும் ஒன்றுபோலவே இருக்கிறது என தொடங்கி, உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் எப்படி பெரு நிறுவனங்களால் சுரண்டப்படுகிறார்கள் என முகத்தில் அறைகிறது. மதங்களின் பேரால், இனவெறியின் பேரால் ஏவப்படும் அதி கார அடக்குமுறைகள் சைலன்ஸ், சாவன், ஆன்னி  ஃபிராங்க், மஸார் ஷெரீஃப் என பாகிஸ்தான் முதல் இங்கிலாந்து வரை ஒரே பாசிச முகமாக இருப்பதை உணர்கிறோம்.  தாய்நாட்டை இழந்த புலம் பெயர்ந்தோரின் வலியைச் சொல்லும்  எக்ஸைல், பாரி படங்கள் பற்றி படிக்கும் அதே வேளையில், பிள்ளைகளாலேயே தீவுகளாக்கப்பட்ட பெற்றோரின் வலி அதற்கு சற்றும் குறைந்ததல்ல என ஜப்பானிய படம் எனது மகன்களை படிக்கையில் உணரமுடிகிறது.

பெண் தன்னை பெண் என்றே சொல்லிக்கொள்ள முடியாத ஆல்பர்ட் நோப்ஸ் அயர்லாந்து திரைப்படத்தில் வாழ்ந்திருப்பது நோப்ஸ்சும், பேஜரும் மட்டுமா? என்ற வினா துரத்திக்கொண்டேயிருக்கிறது. சிங்கப்பூரின் இதுவரை சொல்லப்படாத பக்கத்தைப் பாடும் இயக்குநர் கே.ராஜகோபாலின் சிங்கப்பூர் பிரெஞ்ச் சினிமாவான  எ எல்லோ பேர்ட்  நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  மனநோயாளிகளின் துன்பத்தை மையமாகக்கொண்ட பியூட்டி இன் த ப்ரோக்கன் , டவுன் சிண்ட்ரோம் சிறப்புக் குழந்தையைக் கொண்டாடும்  என் தம்பி டைனோசர்களைத் துரத்துகிறான்  என மனதுக்குள் மயிலிறகாய் வருடும் மெல்லிய உணர்வு கொண்ட படங்கள் என ஒரு திருவிழா சந்தையில் தொலைந்து போனதைப் போன்ற வியப்பும், கலக்கமும், ஆர்வமுமாக நம்மை அள்ளிக்கொள்கிறது இந்த புத்தகம்.  என் தம்பி டைனோசர்களைத் துரத்துகிறான் நம் தூக்கம் துரத்துவதோடன்றி நம்மை நல்ல சினிமாவை நோக்கி, தேர்ந்த ரசனையை நோக்கி மிக முக்கியமாய் மனிதம் நோக்கித் துரத்துகிறது.