சென்னை,ஜன.4- தமிழ்நாட்டிலுள்ள 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். “உலகிற்கே அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும், சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகைப் பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பைத் தமிழகத்தில் வழங்கிடும் பணியைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக, புதனன்று (ஜன.4 ) தலைமைச் செயலகத்தில், 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இச்சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதைத் தவிர்க்கவும், கரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை விநியோகத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பெற்றுக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் வே.ராஜராமன், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு.பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பூசாரிகளுக்கு புத்தாடை
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோவில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பணிப் பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும் மற்றும் திருக்கோவில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 எண்ணிக்கையிலான சீருடைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவில்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு மயில் கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் திருக்கோவிலில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் 36,684 கோவில்களில் சுமார் 52,803 பணியாளர்களுக்கு வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.