சென்னை, ஜன. 31 - மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும், பொது அமைதியை குலைக்கும் வகையில் பொய்யான செய்திகளை யும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்க ளில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் சென்னை காவல் ஆணையார் சங்கர் ஜிவால் எச்சரித்திருந்தார். இந்நிலையில், இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்படுத்தும் வகையிலும் (இந்துக் கோவில்கள் இடிக்கப்படு வதாகவும், ஆனால் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் சர்ச் இடிக்கப்படவில்லை எனவும்), உயர்நீதி மன்ற நீதிபதிகளை அநாகரிகமாக பேசி நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதை பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தைரியமா? விடியலுக்கா?’ என பதிவிட்டுள்ளார். இதன்பேரில், மதக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் வதந்தி பரப்பும் சவுதா மணி மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சவுதா மணி மீது கலகம் செய்ய தூண்டுதல், பொது அமைதிக்கு எதிராக கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இதேபோன்று கடந்த 28 ஆம் தேதி பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வம் மீது, மதக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பாஜக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து வழக்கு பதியப்பட்டு வருகிறது