tamilnadu

img

ஓராண்டாகியும் திறப்பு விழா காணாத பளியர் பழங்குடியினர் வீடுகள்

திண்டுக்கல், செப்.16- திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் பொன்னுருக்கி, தாளக்கடை, வேளாண் பண்ணை, தொழுகாடு ஆகிய குக்கிராமங்களில் பளியர் சமூக பழங்குடி மக்கள் ஆண்டாண்டு காலங்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பிரதான தொழில் அடர் வனக்காட்டுப்பகுதியில் தேன், மூலிகை இலைகள், கடுக்காய், விளக்கமாறு, பிரியாணியில் பயன் படுத்தப்படும் பாசிகள் ஆகியவை களை சேகரித்து விற்பனை செய்வதும்,  வாழை, பலா, மிளகு, காப்பி, சௌ சௌ போன்றவை  விளையும் தோட்டங்களில் விவசாய கூலிகளாக வேலை செய்தும் வருகிறார்கள்.  இவர்களில் ஒரு பகுதியினர் வனப்பகுதியில் உள்ள மலைக்குகை மற்றும் மரப்பொந்துகளில் வாழ்ந்து வருகிறார்கள். தற்பொழுது இவர்கள் தரையில் தகர குடிசை அமைத்தும், தார் பாய் கொண்ட குடிசை அமைத்தும் வசிக் கிறார்கள். ஆனால்  மின்சாரம், குடிநீர் சாலை வசதி இன்றி வாழ்ந்து வரும் இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்பகுதியில் குடியமர்த்த வேண்டும் என்று கருப்புக்கோவில் அரு கில் ரூ.3 லட்சம் வீதம் 18 வீடு களுக்கு நிதி ஒதுக்கி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 

கை வைத்தாலே உதிரும் சுவர் சிமிண்ட் பூச்சுகள்

இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு காலமாகியும் இன்னும் திறக்கப்படாத காரணத்தினால் இந்த பழங்குடியினர் மழைக்காலங்களில் தங்க இடமின்றி இந்த தொகுப்பு வீடு களின் வாசல்களில் சமைத்து உண்டு,  உறங்கி வருகிறார்கள். கட்டி முடிக்கப் பட்ட இந்த தொகுப்பு வீடுகள் தரமற்ற கலவை கொண்டு கட்டப்பட்டதால் சுவர்களில் கை வைத்து தேய்த்தாலே உதிரும் நிலை உள்ளது. மேலும் கதவுகள் உடைந்தும், வீடுகள் முழு வதும் சிமிண்ட் காரைகள் பெயர்ந் தும் காணப்படுவதால் இந்த தொகுப்பு வீடுகள் தரமற்றும், முட்புதர்களாக செடி,கொடிகள் படர்ந்து சிதில மடைந்த நிலையில் உள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த தொகுப்பு வீடு களிலும் கூட  மின்சாரம், தண்ணீர், குடிநீர் வசதியின்றி உள்ளன. மழை பெய்தால் மழை நீர் வீட்டுக்குள் செல் லும் அளவிற்கு வீடுகள் கட்டப் பட்டுள்ளன.   

வீடுகளை புதுப்பித்து தரக்கோரிக்கை 

எனவே தங்களுக்காக அரசு ஒதுக்கப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் இடிந்து விழுவதற்குள்  முறையாக, தரமானதாக, புதுப்பித்து விரைவில் வழங்க வேண்டும் என்று பளியர் மக்கள் கோருகிறார்கள்.       மேலும் தாளக்கடை, வேளாண் பண்ணை, தொழுகாடு, பொன்னுருக்கி  ஆகிய  பகுதிகளில் வாழும் மற்றவர் களுக்கும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று இப்பழங்குடி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

புதிய வீடுகளின் வாசலில் வசிக்கும் அவலம்

இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டத்துணைத் தலைவர் மாரியப்பன் கூறுகையில்,    நாங்கள் இந்த சிறுமலையில் பாரம்பரி யமாக வாழ்ந்து வருகிறோம்.  காட்டுக் குள் பாம்பு பல்லி நடுவில்  தார்பாய் களை போட்டுக்கொண்டும்,  பாறை குடவுகளிலும், மரத்தடியிலும் ரொம்ப காலமாக கஷ்டப்பட்டு வசித்து வந்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு  35 குடும்பங்களாக வாழ்ந்து வந்தோம். இப்போது 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. காட்டுக்குள் கஷ்டப்பட்டு பாறை அமுக்கி எத்தனை யோ குடும்பங்கள் இறந்துள்ளன. என் மனைவி கூட காட்டுக்குள் வரும் பொழுது மரம் மீது இடி விழுந்து அந்த மரம் தலையில் விழுந்து அமுக்கித் தான் இறந்தார். இது தொடர்பாக எங் களுக்கு வீடு வேண்டும் என்று அரசாங்கத் திடம் கேட்ட பிறகு 18 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 15 மாதத்திற்குள் கட்டி முடித்தனர். வீடு கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. கட்டிய வீடு கிடைக்க வில்லை. அரசு உடனடியாக வீடுகளை  ஒப்படைக்க வேண்டும்.  மற்றவர்களுக் கும் வீடுகள் விரைவில்  கட்டித்தர வேண்டும் என்றுவலியுறுத்தினார்.

தரமான வீடுகள் கட்டித்தருக!

தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் தா. அஜாய்கோஷ் கூறுகையில், திண்டுக் கல் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3,500க்கும்  மேற்பட்ட பளி யர் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார் கள். மலைப்பகுதியின் பூர்வ குடி மக்களாகிய இவர்களுக்கு அரசும், வனத் துறையும் சில இடங்களில் வீடுகள் கட்டி யுள்ளன. அது போதுமானது இல்லை.  உதாரணமாக சிறுமலை வனப்பகுதி யில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தாலும் 18 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. பழனி அடிவாரத்தில் சிறுகரடு என்னும் இடத்தில் 30 குடும்ப ங்கள்  பாறையில் குடிசை கட்டி  வசிக் கிறார்கள். இவர்களுக்கு தொண்டு நிறு வனமும், அரசும் 7 வீடுகள் கட்டித்  தந்துள்ளன. அந்த வீடுகள் கூட  ஹாலோ பிளாக் கல்லை வைத்து கட்டித் தந்துள்ளனர். அது வீடு போலில்லை. எனவே அனைத்து பளியர் குடும்ப ங்களுக்கும் தரமான குடியிருப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். மேலும் ரேசன் கார்டு, சாதிச்சான்று, ஆதார் கார்டு, பழங்குடி நல வாரிய அட்டை ஆகியவை பெரும்பாலான பழங்குடி மக்களுக்கு இல்லாமல் உள்ளது. அத னையும் உடனடியாக வழங்கவேண் டும். சாதிச்சான்று இல்லாததால் கல்வி யை தொடர முடியாத நிலை உள்ளது.  குடியிருப்புகளுக்கு சாலை வசதி யும், குடிநீர், மின்சாரம் வசதி ஆகியவை வழங்க வேண்டும் என்றுதெரிவித்தார்.

தொகுப்பு:  இலமு, திண்டுக்கல்
 

;