tamilnadu

img

தமிழக மக்களின் குரலாக பேசுபவர் சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை, ஆக.5-  தமிழ்நாட்டு மக்களின் குரல் எங்கு,எப்போது ,எப்படி ஒலிக்க வேண்டுமோ,எதை பதிவு செய்ய வேண்டுமோ அதை ஒருமுறை கூட தவறாமல் பதிவு செய்து வருபவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என்று மதுரையில் நடைபெற்ற ‘விருமன்’ பட இசை வெளியீட்டு விழாவில் திரைக்கலைஞர் சூர்யா பாராட்டிப் பேசினார். திரைக்கலைஞர் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர், முத்தையா, திரைக் கலைஞர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, இளவரசு, சிங்கம்புலி, அதிதி, வடிவுக்கரசி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சூர்யா பேசுகையில், “காவல் கோட்டம்,வீரயுக நாயகன் வேள்பாரி ஆகியவை தமிழின் மிகச்சிறந்த படைப்புகள். தமிழர்களின் முக்கிய அடையாளம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களை, நண்பர் என்று சொல்வதா? உறவு என்று சொல்வதா? அவர் இந்நிகழ்ச்சிக்கு வந்தது எங்களுக்கு கூடுதல் மதிப்பு,கூடுதல் மரியாதை. தமிழ்நாட்டு மக்களின் குரல் எங்கு,எப்படி, எப்போது ஒலிக்க வேண்டுமோ, எதை பதிவு செய்ய வேண்டுமோ, அதனை ஒருமுறை கூட தவறாமல் பதிவு செய்து வருபவர். அவர் இந்த விழாவுக்கு வருகை தந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. அவருடன் எங்களின் திரைப்பயணத்தை ஆரம்பித்துவிட்டோம்.அது கண்டிப்பாக முக்கியமான பதிவாக இருக்கும்” என்று கூறினார்.  சு.வெங்கடேசன் எம்.பி.பேசுகையில், “திரைக்கலைஞர் சூர்யாவின் நடிப்புக்கலைக்கு மிகத்தாமதமாக தேசிய விருது வந்து சேர்ந்திருக்கிறது. மதுரை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விருது கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. சூர்யா,கார்த்தி ஆகியோர் திரையில் மின்னுகிற ஒளியை விட கூடுதல் முக்கியத்துவமும் மகத்துவமும் வாய்ந்தது திரைக்கு வெளியே சமூகத்தில் அவர்கள் காட்ட நினைக்கிற முகம்.கல்வி,விவசாயத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொரோனா காலத்தில் மதுரையில் அன்னவாசல் திட்டத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு உணவு வழங்கியதில் சூர்யாவின் பங்களிப்பு முக்கியமானது.தமிழக மக்களின் குடும்பத்தில் ஒருவராக சூர்யா,கார்த்தியை கருதுகிற மனம் உருவாகி க்கொண்டிருக்கிறது. அவர்களின் பணிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

திரைக்கலைஞர் கார்த்தி பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் பேச்சுகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் சொல்லும் விளக்கங்கள் எனக்கு பிடிக்கும் என்றார். இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,சு.வெங்கடேசனின் பேச்சு நன்றாக இருந்தது. சிறந்த எழுத்தாளர். அவர் ஒரு கம்யூனிஸ்ட்.. அவர் பேசியது நிதர்சனமான உண்மை என்றார்.

;