tamilnadu

img

கார் டயர்கள் ஏற்படுத்தும் காற்றுமாசு

ஒருகாலத்தில் சொகுசுப்பொருளாகக் கருதப்பட்ட கார்கள் இன்று அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டன. புதுப்புது மாடல்கள் பல நவீன வசதிகளுடன் தயாரிக்கப்படும்போது புதைபடிவ எரிபொருட்களால் இவை காற்றுமாசிற்குக் காரணமாகின்றன என்றே இதுவரை கருதப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகள் கார் டயர்கள், புகை வெளியேற்றுக்குழாய்கள் வழியாக வெளிவரும் மாசடைந்த காற்றை விட இரண்டாயிரம் மடங்கு ஆபத்தான, அதிக மாசை ஏற்படுத்துகின்றன என்று கண்டறிந்துள்ளனர். வளரும் நாடுகளில் தயாரிக்கப்படும் புதிய கார்களின் பின்புறம் இருக்கும் புகை வெளியேற்றும் குழாய் வெளிவிடும் நச்சுக்காற்றுமாசு குறைவாகவே உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இது சட்டப்பூர்வ மாசு அளவை விட மிகக் குறைவு. ஆனால் டயர்களில் இருந்து வெளியேறும் துகள்களால் மண், நீர், காற்று மாசுபடுகின்றன. மனிதர்களுக்கு நோய் ஏற்படுத்தும் பல நச்சுப்பொருட்கள் அதில் கலந்துள்ளன. இது விரைவில் காற்று மாசுடன் தொடர்புடைய பெரும் பிரச்சனையாக மாறும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே காற்றுமாசால் பல மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். புகை வெளியேற்று வடிகட்டிகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் புகைபோக்கிகள் ஏற்படுத்தும் மாசின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால் புதிதாகத் தயாரிக்கப்படும் கார்களின் எடை அதிகம். இதனால் இவை வெளியேற்றும் டயர் துகள்களும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். ஒவ்வொரு கிலோமீட்டர் ஓட்டத்தின்போதும் டயர்கள் ஒரு டிரில்லியன் அல்ட்ரா நுண்துகளை (Ultra fine particles) வெளிவிடுகின்றன என்று  பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன. 23 நானோ மில்லிமீட்டருக்கும் குறைவான துகள்களே அல்ட்ரா நுண்துகள்கள் எனப்படுகின்றன.

உடல் நலத்தைப் பாதிக்கும் துகள்கள்
இவை புகை வெளியேற்றுக் குழாய் வழியாகவும் உமிழப்படுகின்றன என்றாலும் புகைபோக்கிகள் மாசுக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இதனால் உருவாகும் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது. இவை மிகச்சிறிய அளவு உடையவை. இரத்த ஓட்டத்தின் மூலம் நேரடியாக உடல் உறுப்புகளுக்குள் நுழைகின்றன.

23 நானோ மில்லிமீட்டர்
இவற்றின் மிகச்சிறிய அளவு காரணமாக இவற்றைத் துல்லியமாக அளவிடுவது கடினம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இவற்றைக் கட்டுப்படுத்த எந்த ஒழுங்குமுறையும் இல்லை  என்று இந்த ஆய்வுகளை மேற்கொண்ட முன்னணி வாகன உமிழ்வு பற்றி ஆராயும் எமிஷன்ஸ் அனலிட்டிக்ஸ் (Emissions Analytics) என்ற ஆய்வு மையத்தைச் சேர்ந்த நிபுணர் நிக் மோல்டன் கூறுகிறார்.

ஆய்வின் தொடக்கம்
டயர் துகள் மாசு பற்றிய ஆரம்பகட்ட ஆய்வுகள் பல மடங்கு காற்றுமாசை ஏற்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டதால் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டன. யுகே, யுஎஸ் ஆகியவற்றில் ஆண்டுதோறும் 3,00,000டன் டயர் இரப்பர் துகள்களை கார் மற்றும் வேன்கள் வெளியேற்றுகின்றன. இன்று உலகில் எங்கும் டயர்கள் உமிழும் துகள்கள் பற்றி அல்லது அவற்றின் இரப்பர் மூலப்பொருளில் கலந்துள்ள ரசாயனப்பொருட்கள் பற்றி பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை. பலவகைகளைச் சேர்ந்த 250 டயர்களில் கலந்துள்ள ரசாயனப்பொருட்கள் பற்றி இந்த மையம் ஆராய்ந்தது. பெட்ரோலிய கசடு எண்ணெய்யில் இருந்து உருவாக்கப்படும் செயற்கை இரப்பரை பயன்படுத்தியே டயர்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் இவை உமிழும் துகள்களில் நூற்றுக்கணக்கான நோய் ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு வகை டயருக்கும் வெவ்வேறு டயர் ஆயுட்கால எண் (tyre ware rate) உள்ளது. டயர்களின் பக்கவாட்டில் அவற்றின் வாழ்நாள் குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க பொறிக்கப்பட்டுள்ள ஒரு அடையாளமே டயர் ஆயுட்கால எண் எனப்படுகிறது. இன்றுள்ள டயர்களின் வடிவமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தினால் அவை உமிழும் நச்சுப்பொருட்களின் அளவைக் குறைக்கமுடியும் என்று கருதப்படுகிறது. இன்றுள்ள நிலையில் இது பற்றி பரிசோதிக்க எந்தவழிமுறையும் இல்லை. மெர்சிடிஸ் காரில் அதிகம் பயன்படுத்தப்படும் 14 மாடல் டயர்களில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சிலவற்றில் ஆயுட்காலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வாகனம் ஓடும்போது டயர்கள் வெளிவிடும் துகள்கள் உயர் தொழில்நுட்ப அளவுகோல் (High precision scale) மூலம் பரிசோதிக்கப்பட்டது. வெளிவிடப்படும் 6 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுள்ள துகள்களின் நிறை, எண்ணிக்கை, அளவு ஆகியவை கணக்கிடப்பட்டன.

2019-2020 காலத்தில் வெளிவந்த புதிய கார்களில் முதன்மையாக நுகர்வோரால் அதிகம் பயன்படுத்தப்படும் பெரிய வாகனங்களில் (SUV) சோதனைகள் நடத்தப்பட்டன. நாட்பட்ட டயர்கள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 36 மில்லிகிராம் துகள்களை வெளியேற்றுகின்றன. இது புகை வெளியேற்றுக்குழாய் வழியாக வெளியேற்றப்படும் மாசை விட 1850 மடங்கு அதிகம். ஒரு வெளியேற்றுக்குழாய் சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு 0.02 மில்லிகிராம் நுண்துகள்களை உமிழ்கிறது. டயர்கள் பெரிய துகள்களை விட சிறிய அளவிலான துகள்களையே அதிகமாக வெளியேற்றுகின்றன. இதனால் விரைவான காற்றுமாசு ஏற்படுகிறது. இந்த சோதனைகளில் 11சதவீத மாசுகளின் எடை மட்டுமே ஆராயப்பட்டன. கார்களின் சராசரி எடை நாளுக்குநாள் அதிகரிக்கப்படுகிறது. ஆற்றல் சேமிப்பு மின்கலங்கள் உள்ள கார்கள் அளவில் பெரியவை என்பதால் இவற்றின் சக்கரங்கள் அளவில் பெரிதாக தயாரிக்கப்படுகின்றன. இது மேலும் அதிக துகள் மாசுகளை உருவாக்கும். வாகனத்தை ஓட்டுவதைப் பொறுத்தும் அவை வெளியிடும் துகள்களின் எண்ணிக்கை உள்ளது. புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்தும் கார்களை விட பேட்டரி கார்கள் குறைவாகவே துகள்களை வெளிவிடுகின்றன. டயர்கள் கடலில் நுண்துகள் பிளாஸ்டிக் மாசிற்கும் காரணமாகின்றன. சமீபத்தில் சால்மன் இன கடல் மீன்கள் கலிபோர்னியாவில் இறக்க இதுவே காரணம் என்று கண்டறியப்பட்டது. டயர்கள் ஏற்படுத்தும் காற்றுமாசு புதியதொரு சூழல் பிரச்சனை என்றாலும் இது ஆரம்பம் மட்டுமே. இது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

;