கிருஷ்ணகிரி, டிச. 15- ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சி யில் செயலாளராக சரவணன் பணிபுரிந்து வருகிறார். நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்கு வராதவர்களுக்கும் வந்ததாக வருகை பதிவு செய்து கணக்கு எழுதியும், தொழிலாளர்களுக்கு கூலியை குறைத்துக் கொடுத்தும், ஊராட்சி பணிகளிலும் பல முறைகேடுகள், ஊழல்கள் செய்து வருவதாக வும், சில வழக்குகளும் இவர் மீது இருப்பதாக வும் கூறப்படுகிறது. 100 நாள் வேலை செய்பவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் ஊராட்சி மன்ற செயலாளர் சரவணனிடம் பலமுறை இது தொடர்பாக கேட்டுள்ளனர். முறையான பதில் கிடைக்கவில்லை.
இதனால், சரவணன் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் செல்வராஜின் தந்தை 67 வயது காளியப்பன் காட்டேரி ஊராட்சி செயலா ளர் சரவணன் மேற்பார்வையில் 100 நாள் வேலை செய்து வருகிறார். ஊழல், முறைகேடு, நிதி கையாடல், குறித்து புகார் கொடுத்த செல்வராஜ் மீது உள்ள கோபத்தை அவர் தந்தை முதியவர் காளியப்பன் மீது வெளிப் படுத்தியுள்ளார். ஆண்டிச்சேரி ஏரியில் வேலை செய்த காளியப்பன் 23.10.2021 ல், வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது அடுப்பு எரிப்பதற்காக காய்ந்த விறகுகளை சேகரித்து வைத்துள்ளார். அதற்காக ஊராட்சி செயலாளர் சரவணனும் அவரது தாய் அலமேலு, தந்தை பழனிச்சாமி ஆகியோர் கடுமையாக பேசி தடியாலும், செருப்பை கொண்டும் தாக்குதல் நடத்தியதோடு காலால் எட்டி உதைத்து கொலை வெறியுடன் தாக்கியதால் மயங்கிய நிலையில் காளியப்பன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆய்வாளர்கள் நேரு, லட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தியும் சரவணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாள ரும் ஊத்தங்கரை ஒன்றிய கவுன்சிலருமான கோவிந்தசாமி, இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தார். இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 15 நாட்களை கடந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட காளியப்பன் மீதே வழக்குப் பதிவு செய்துள்ள னர். இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் காவல்துறை கண்காணிப் பாளரை சந்தித்தனர். அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, சரவணன் உட்பட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் உடனே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊராட்சி செயலாளர் சரவணனை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஊத்தங்கரை காவல்துறை அதிகாரிகள் நேரு, லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிர காசம், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிசம்பர் 14 அன்று ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடைகளை தாண்டி...'
இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவ லர்களும் சரவணனும் காவல்துறையினரும் ஊத்தங்கரை வட்டத்தில் காட்டேரி பகுதி களில் யாரும் ஆர்ப்பாட்டத்திற்கு வரக்கூடாது என தெருத் தெருவாக சென்று 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை மிரட்டி தடுத்துள்ளனர். தடைகளைத் தாண்டி ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிளைச் செயலாளர் வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஏ.அமிர்தலிங் கம், மாநிலத் துணைத் தலைவர் முத்து, மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, தலைவர் ராமசாமி, பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் மகாலிங்கம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, பாஞ்சாலரா ஜன், சபாபதி, எத்திராஜ், முத்துக்குமார் உள்ளிட்டோரும் பேசினர்.