விவசாய நெருக்கடியும் தேசிய பிரச்சனைகளும்
டாக்டர் அசோக் தாவ்லே
தமிழ்நாட்டில் தோழர் சங்கரய்யா போன்ற அனுபவமிக்க விவசாயிகள் சங்க தலைவர்கள் நில உரிமை, கூலி உயர்வு, மின்சாரம், விவசாய பொருட்களுக்கு நியாயவிலை போன்ற கோரிக்கைகளுக்காக மகத்தான போராட்டங்களை நடத்தியுள்ள னர். பி. சீனிவாசராவ், பி.எஸ். தனுஷ்கோடி, கே. பி.ஜானகியம்மாள், கே. வரதராஜன், கோ.வீரய்யன் ஆகிய தலைவர்களின் தலைமை யில் மகத்தான போராட்டங்கள் நடந்துள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தில் விளைந்ததுதான் இந்த இயக்கம். குறைந்தபட்ச ஆதரவு விலை நெருக்கடி இந்திய விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். நெல், கோதுமை, பருத்தி, கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அரசு நிர்ணயித்தாலும், உண்மையில் விவசாயிகளுக்கு அந்த விலை கிடைப்பதில்லை. நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதிக லாபம் ஈட்டுகின்றன. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் பரிந்துரைப்படி உற்பத்தி செலவில் 50% அதிகமாக 1.5 மடங்கு விலை நிர்ணயிக்க வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைக்காக தில்லி போராட்டத்தில் 750 விவசாயிகள் உயி ரிழந்தனர். அந்த வீரமிக்க போராட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து 3000 விவசாயிகள் பங்கேற்று தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 16 லட்சம் கோடி தள்ளுபடி மோடி அரசு பெரும் முதலாளிகளின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு கடன் மறுக்கிறது. வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்க தயங்குகின்றன. அதே நேரத்தில் அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை வாங்கி தள்ளுபடி செய்து கொள்கின்றனர். இந்த இரட்டை நீதி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் ஆபத்து அமெரிக்க - இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க விவசாய பொருட்கள் இந்தியாவில் குறைந்த விலையில் விற்கப்படும். டொனால்டு டிரம்ப் மோடியை மிரட்டி இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட அழுத்தம் கொடுத்து வருகிறார். அமெரிக்க பால் பொருட்கள் குறைந்த விலையில் இறக்குமதியானால், 8 கோடி பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது ஆவின் நிறுவனம் ரூ.36க்கு வாங்கி ரூ.45க்கு விற்கும் பால், அமெரிக்க இறக்கு மதியால் ரூ.20க்கு விற்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் உள்நாட்டு பால் உற்பத்தித் தொழில் முற்றிலும் முடங்கும். கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தியாளர்களும் இதே நிலைமையை எதிர்கொள்வார்கள். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்திற்கு மரண அடியாக அமையும் ஆபத்து உள்ளது. மின்சார தனியார்மயமாக்கல் மின்சாரத் தனியார்மயமாக்கலின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். தற்போது ரூ.1000 செலுத்தும் இடத்தில் ரூ.4000 வரை செலுத்த வேண்டியிருக்கும். மற்ற மாநில நகரங்களில் ரூ.1000 செலுத்த வேண்டிய இடத்தில் ரூ.41000 மின்கட்டணம் வந்துள்ளது. இந்த தனியார்மயமாக்கல் கொள்கையால் ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாயி களுக்கு தற்போது இலவச அல்லது மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. தனியார்மயமாக்கலுக்கு பிறகு இந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மோடி அரசின் நோக்கம் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதே. தருமபுரி-கிருஷ்ணகிரி பிரச்சனைகள் தருமபுரி மாவட்டத்தில் காவேரி ஆறு பாய்ந்தாலும் வறண்ட பூமியாக உள்ளது. குடிநீர் பற்றாக்குறை, பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர். காவிரியின் உபரி நீர் மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கிறது. எனவே காவிரியின் உபரி நீரை கால்வாய் மூலம் ஏரிகளுக்கு கொண்டுசெல்லும் திட்டம் அவசியம். ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் மலைவாழ் மக்கள், பட்டியலின மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உழுது சாகுபடி செய்து வருகின்றனர். இந்த உபரி நிலங்களுக்கு 2006-ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின்படி அரசு பட்டா வழங்க வேண்டும். கிருஷ்ணகிரியில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் வனப்பகுதியில் 165-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 16 ஊராட்சிகள் அடங்கிய பகுதி மக்கள் வனத்துறையால் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். 400 ஆண்டுகளாக வசிக்கும் இந்த மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும். ஜனநாயக அச்சுறுத்தல் பாஜக அரசு இந்திய அரசியலமைப்பு, இறை யாண்மை, ஜனநாயகம் ஆகிய அனைத்தையும் அழித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக பயன்படுத்தி வாக்கு மோசடி செய்கிறது. கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு தொகுதியின் தேர்தல் முறை குறித்து ராகுல் காந்தி ஆய்வு செய்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளார். ஒரு தொகுதியில் 1,00,250 வாக்குகள் முறைகேடாக சேர்க்கப்பட்டும், ஒரே பகுதியில் ஒரே பெயர் 5, 6 இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, தனக்கு சாதகமாக வாக்களிப்பவர்களை சேர்ப்பது போன்ற செயல்களை தேர்தல் ஆணையத்தின் மூலம் செயல்படுத்துகிறது. சாதாரண குடிமக னுக்கு உள்ள வாக்களிக்கும் உரிமையையே மோடி அரசு பறிக்கிறது. 1925-ல் துவங்கிய ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளாக மக்களின் மனதில் பிரிவினைவாத விஷத்தை தூவி, மதங்களிடையே மோதல், சாதிகளிடையே மோதலை ஏற்படுத்தி வருகிறது. பெரியார், அம்பேத்கர், ஜோதிபாய் புலே, நாரா யண குரு, ராஜாராம் மோகன் ராய் போன்றவர்கள் சமூக நீதி, சமூக ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்ட பாரம்பரியத்தை அழிக்க முயல்கிறது. பெண்களின் பங்களிப்பு 1936-ஆம் ஆண்டு விவசாயிகள் சங்கம் “நிலம் உழுபவருக்கே சொந்தம்” என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டது. இன்று விவசாய வேலைகளில் 70% பெண்கள் ஈடுபடுகின்றனர். விவசாய வேலையையும், குடும்ப வேலைகளை யும் செய்கின்றனர். ஆனால் நில உரிமை, வீடு என்று வரும் போது ஆண்களின் பெயரில் இருக்கிறது. நம் இயக்கம் ஆண்-பெண் சமத்து வத்தை வலியுறுத்துகிறது. வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணியும் போட்டியிடுகின்றன. பாஜக-அதிமுக கூட்டணியை தோற்கடித்து, இடதுசாரிகளின் பலத்தை அதிகரிக்க வேண்டும். பகத்சிங் கூறியதுபோல், ஆங்கிலேயர்களை மட்டுமல்ல, மக்களை சுரண்டும் கொள்ளைக்கா ரர்களையும் விரட்ட வேண்டும். இந்திய அரசி யலமைப்பு, ஜனநாயகம், விவசாயிகள், தொழி லாளர்களை பாதுகாக்க தேசபக்த போராட்டம் தொடர வேண்டும்.