tamilnadu

தோண்டத் தோண்ட நாறும் தேர்தல் பத்திரம்

அம்பலப்படுத்திய மார்க்சிஸ்ட் கட்சி... அதிர்ந்து நிற்கும் இந்திய மக்கள்...“இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில்...” என்பது, ஒரு தசாப்தத்திற்கு முன்வரை மிகவும் புகழ்பெற்ற அறிவிப்பு வாசகம். “உலக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக...” ஒரு கட்சியின் ஊழலை ஆய்வு செய்வது ஒரு “மிஷன் இம்பாசிபிள்” என்று சொல்லுமளவுக்கு, உலகமகா ஊழலை நடத்தியிருக்கிறது பார”தீய” ஜனதா கட்சி! “இப்படிச் செஞசனா, அப்படிச் செஞ்சனா-ன்னு கேட்டுக்கிட்டே எல்லாத்தையும் செஞ்சுட்டியேடா?” என்ற நகைச்சுவை மாதிரி, மற்றவர்கள் ஊழல் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே, ஊழலை ஒழிப்பவர்களாகக் காட்டிக்கொண்டே, கற்பனைக்கும் எட்டாத ஊழலை அரங்கேற்றியிருக்கிறது பாஜக. இந்திய அரசியலில் நேர்மையின் இலக்கணமாய், தூய்மையின் ஒளி விளக்காய் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பல்லாண்டு காலம் மிக உறுதியாக நடத்திய மகத்தான போராட்டத்தின் விளைவாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது இந்த உலக மகா ஊழல். உச்சநீதிமன்றத்தின் உறுதியான நிலைப்பாட்டால் தேர்தல் பத்திரங்களாக பாஜக பெற்றிருக்கிற நிதிகள் பற்றிய விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், பிஎம் கேர்ஸ் போன்றவற்றின் நிலை, ஆட்சி மாறி, நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே வெளிவரும். அது மட்டுமே அல்ல. அம்பானி, அதானி போன்றவர்களைப் பட்டியலிலேயே காண முடியவில்லை. அவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் அளித்த நன்கொடை என்று சிலவற்றைச் சுட்டிக்காட்டினாலும், அது அவை மிகச்சிறிய தொகைகளாகவே உள்ளன. எனவே, இவற்றைத் தவிர வேறு வழிகளிலும் பாஜக வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது, அந்த வழிகள் என்ன என்றே இன்னும் தெரியவில்லை.

இவற்றிற்கிடையில், ஜிஎஸ்டி வேட்டை, பாஜக அரசு உயர்த்திய எரிபொருள் வரிகள் போன்றவை ஏராளமான வருவாயை அளித்திருந்தாலும், மத்திய அரசின் கடன் ஏறத்தாழ ரூ.100 லட்சம் கோடியளவுக்கு உயர்ந்து(2014 - ரூ.58.6 லட்சம் கோடி, 2023 ரூ.155.6 லட்சம் கோடி), கிட்டத்தட்ட மும்மடங்காகியிருக்கிறது. ஆனாலும் உட்கட்டமைப்பு வளரவில்லை, சொல்லிக்கொள்ளும் அளவுக்கான பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. எனும்போது, அரசின் நிதிகளே எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன, எங்கு போயிருக்கின்றன என்றெல்லாம் அச்சம் ஏற்படுகிறது.  வெளிவந்திருக்கிற விபரங்களின்படி, “கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும், இழவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும்” என்ற தமிழ்த்திரைப்பட வசனம்போல, நிதி என்று அளித்தாலே அது பாஜகவுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று எல்லா வழிகளிலும் பாஜகவே அதிகபட்ச நிதியைப் பெற்றிருக்கிறது. அவையும், ரெய்டுகள் மூலம் மிரட்டி, அரசின் திட்டங்களைத் தாரைவார்த்து பெறப்பட்டிருக்கின்றன. தாரைவார்க்கப்பட்ட விமான நிலையங்கள், விமான நிறுவனம், ரயில்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் என்று நீள்கிற பட்டியலில், இந்திய நாடே இணைந்து விடாமல் தடுக்க, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பது மட்டுமே ஒரே வழி! தோற்கடிப்போம்! நாட்டைக் காப்போம்!