tamilnadu

img

கோட்டூரின் பழைய பெயர் ‘மாதேவ நல்லூர்’

தேனி, ஜூலை 7- தேனி மாவட்டம், கோட்டூரின் பழைய பெயர் ‘மாதேவ நல்லூர்’ என்று  இடம்பெற்ற பாண்டியர் ஆட்சிக்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் பாவெல்பாரதி  தலைமை யிலான குழுவினர் கோட்டூரில் உள்ள  கோவில் கல்வெட்டில் கி.பி. 13 ஆம்  நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில்  கோட்டூருக்கு வழங்கப்பட்ட  பழைய பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டறிந்துள்ளது.  தேனி மாவட்டம் கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே  சித்திவிநாயகர்  கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுச்சுவரையொட்டி  ஊன்றப்பட்டி ருந்த இரண்டு கல்வெட்டுகள் படி யெடுத்து வாசிக்கப்பட்டன.   இவற்றில் கோவிலின் வலதுபக்கம் உள்ள கி.பி.  13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டி யர் ஆட்சிக்கால கல்வெட்டில் கோட்டூ ரின் பழைய பெயர் மாதேவ நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  கோவி லின் இடதுபுறம் உள்ள கி.பி. 1929 ஆம் ஆண்டைச்சேர்ந்த   கல்வெட்டில் கோட்டூரின் பெயர் கோட்டையூர் என்று இடம்பெற்றுள்ளது.  கோவிலின் வலதுபுறம் உள்ள முதல் கல்வெட்டு 31 அங்குலம் நீளமும்  17 அங்குலம் அகலமும் 9 அங்குலம் கணமும் கொண்டது. இக்கல்வெட்டு அளநாட்டைச் சேர்ந்த மாதேவ நல்லூ ரில் உள்ள தென்னடை பிரானார் கோவில் அகம்படி முதலிகளில் வடுகன் திருவாலி சீவல்லபன் என்று முற்றுப்பெறாமல் உள்ளது. இக்கல்வெட்டின் தொடக்கப்பகுதி சிதைவடைந்துள்ளது. அது மன்ன ரின் பெயரையோ, அவரது ஆட்சி யாண்டையோ குறித்திருக்கலாம். அதேபோல இக்கல்வெட்டின் தொடர்ச்சியாகவோ அல்லது அதன் பின்பக்கமோ வடுகன் சீவல்லபன் அளித்த நில தானம் தொடர்பான செய்தி இடம்பெற்றிருக்கலாம்.

கல்வெட்டு கூறும் செய்தி  

முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் ஆட்சியாளர்கள்  கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங் களைத் தானமாக வழங்கி, அக்கோவி லை மையப்படுத்தி ஊர்கள் உரு வாக்கப்பட்டன.  அத்தகைய ஊர்கள் நல்லூர் என அழைக்கப்பட்டன.   அதுபோல் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இன்றைய கோட்டூரில் சிவன்  கோவிலை நிர்மாணித்து அக்கோவி லுக்கு நிலதானம் (தேவதானம்) வழங்கி மாதேவ நல்லூர் என்ற பெயரில் ஊர் உருவாக்கப்பட்டுள்ளது.   கி.பி. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் மாதேவ நல்லூர் என்ற  இவ்வூரில் உள்ள கோவிலில் வீற்றி ருக்கும்  சிவன் தென்னடை பிரானார் என்று அழைக்கப்பட்டுள்ளார்.  அக்கோவிலைப் பாதுகாக்கும் அகம்படி முதலி என்ற பொறுப்பில் இருப்பவர்களில்  வடுகன் திருவாலி சீவல்லபன் என்பவர் அக்கோவிலுக்கு நிலதானம் வழங்கியது பற்றிய செய்தி இக்கல்வெட்டின் தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கலாம்.  வடுகன் என்பது வடக்குப் பகுதி யைச் சார்ந்தவன், பைரவன், பிரம்மச் சாரி, வாலிபன் எனப் பலபொருள்படும்.   வடுகன் என்பது சிவனின் மூர்த்தங் களில் ஒன்றான பைரவரைக்  குறிப்பதால் அவர் சிவன்மேல் பக்தி கொண்டவராகக் கருதலாம்.  திருவாலி என்பது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள ஊர். திருவாலி என்பது பாண்டிய நாட்டுக்கு வடக்குப் பக்கம் உள்ள ஊராக இருப்பதால், திருவாலி என்ற ஊரைச் சேர்ந்த சீவல்லபன் வடுகன் எனவும்  கருதலாம்.

பாண்டியர் காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய சின்ன மனூர் அரிகேசரி நல்லூர் என்றும்,  தேவாரம் என்ற ஊர் தேவாரபன்ம நல்லூர் என்றும், உப்பார்பட்டி ஆழ்வார் நங்கைசதுர் என்றும், வீரபாண்டி, புலி நல்லூர் என்றும் டொம்புச்சேரி திருவடியாபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது போல் கோட்டூர் மாதேவநல்லூர் என்று அழைக்கப் பட்டிருப்பது இக்கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது.  இவ்வூரில் உள்ள மல்லிங்கேஸ் வரர் கோவிலில் பிற்காலப் பாண்டி யர் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது.  ஆனால் கோவில் புனரமைப்பின் போது சிமெண்ட்டும், பெயிண்ட்டும் பூசப்பட்டிருப்பதால் வாசிக்க இயலவில்லை.  அதனையும் வாசித்தால் கோட்டூர் பற்றிய மேலும் சில விவரங்கள் தெரியவரும்.  கோவிலின் இடது புறம் ஊண்டப் பட்டுள்ள இரண்டாவது கல்வெட்டு 24 அங்குலம் நீளமும் 13 அங்குலம்  அகலமும்  5 அங்குலம் கணமும் கொண்டது. 1929 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் கோட்டை யூரைச் சேர்ந்த வண்டி ராவுத்த குடும்பன் மகன் ராமகுடுமன் சொக்க குடும்பன் மகள் ஊர்காலி என்பவர் விநாயகர் கோயிலுக்கு உபயம் செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது.  தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியால் இக்கல்வெட்டு வாசிக்கப் பட்டது. இந்த ஆய்வில் பாலதண்டா யுதம், ஜெ.முருகன், சிவராமன், மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.