இராமேஸ்வரம், டிச.19- நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், அவர்களது ஆறு விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை நள்ளிரவு இரவு சிறைபிடித்துச் சென்றனர். இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை 500 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ், லியோ ஆகியோருக்கு சொந்தமான ஆறு விசைப்படகுகளுடன் 42 மீனவர்களை சிறைப்பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 6 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததையும் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தார். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மீனவர் சங்கத்தினர் திங்களன்று போராட்டம் மற்றும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, ஒன்றிய அமைச்சர்களிடம் பேசி, மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பிடிஐ தகவல்களுடன்